புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் அன்பழகன். கடந்த 23-ம் தேதி வாக்கி டாக்கியுடன் கீரனூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றவரின் வாக்கி டாக்கி காணாமல் போய் உள்ளது. இதற்கிடையே முகத்தில் காயங்களுடன் அன்பழகன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வாக்கி டாக்கி காணாமல் போனது குறித்துத் தகவலறிந்து கீரனூர் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், காவலரின் வாக்கி டாக்கியை மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த இன்ப சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் முகேஷ், சீனிவாசன், செந்தில் ஆகிய 4 பேரும் சேர்ந்து திருடி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்து வாக்கி டாக்கியை மீட்டனர்.
Also Read: மது அருந்துவதற்கு பணம் தர மறுத்ததால் பாட்டிக்கு நிகழ்ந்த விபரீதம்; போலீஸ் விசாரணையில் கைதான பேரன்!
விசாரணையில், ஆதனக்கோட்டை அருகே நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த இன்ப சுரேஷ் அவரது கூட்டாளிகள் 4 பேரும் மணல் திருட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது ரோந்து சென்ற ஆதனக்கோட்டை போலீஸார் மணல் கடத்தல் வாகனங்களைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையேதான் அதனை மீட்க உதவி செய்யுமாறு காவலர் அன்பழகனிடம், இன்ப சுரேஷ் உதவி கேட்டிருக்கிறார். ஆனால், அவருக்குக் காவலர் உதவி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், காவலர் அன்பழகனை பெருங்களூர் என்னும் இடத்திற்கு வரவைத்த இன்ப சுரேஷ் மதுவாங்கிக் கொடுத்துள்ளனர். அவரோடு மற்ற 4 பேரும் சேர்ந்து மது அருந்தியிருக்கின்றனர். இதில், மது அருந்திய காவலர் அன்பழகன் அங்கேயே மயங்கிவிட்டார். மது போதையில் மயங்கிக் கிடந்த காவலரின் வாக்கி டாக்கியை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியிருக்கின்றனர். இதற்கிடையே வசமாக போலீஸாரிடம் பிடிபட்டிருக்கின்றனர். "தங்களது மணல் கொள்ளை வாகனத்தைக் காவலர் அன்பழகன் மீட்டுத்தர முயற்சி செய்யாததால்தான் காவலரின் வாக்கி டாக்கியை எடுத்து மறைத்து வைத்தோம்" என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் அன்பழகன் பணிபுரிந்திருக்கிறார். அப்போது, இதுபோன்ற மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் பெற்று, அவர்களோடு கூட்டு வைத்துக்கொண்டிருந்துள்ளார். கீரனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் மணல் கொள்ளையர்களோடு கூட்டு வைத்துக்கொண்டு அவர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் செந்தில் என்பவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் இணையதளத்தைக் கையாளும் பொறுப்பாளராகவும் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/news/crime/in-puthukottai-4-people-arrested-for-stole-the-police-walkie-talkie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக