கிரீடங்களை அணிய விரும்பினால், முதலில் சிலுவைகளை சுமக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படி நேற்று சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் சிலுவையை சுமந்து பின்னர் வெற்றி கிரீடம் சூடியவர்தான் பிரியம் கார்க். உலகின் மிகச்சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களில் ஒருவர், நியூஸிலாந்தின் கேப்டன், ஐதராபாத் இந்த சீசனின் முதல் வெற்றியைப்பெற காரணமாக இருந்தவர், இன் ஃபார்ம் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் ரன் அவுட் ஆகும்போது திட்டித்தீர்க்கப்பட்டவர் பிரியம் கார்க்.
எப்போதுமே கூலாக இருக்கும் கேன் வில்லியம்சனே 'கமான் மேன்' என கடுப்பாகி கொந்தளித்தார். இத்தனைக்கும் அது பிரியம் கார்க்கின் தவறல்ல. கேன் வில்லியம்சன் பிரியம் கார்கைப் பார்க்காமலேயே ஓடிவந்து, பிரியம் கார்கால் திருப்பி அனுப்பப்பட்டு ரன் அவுட் ஆனார். 19 வயது பொடியனுக்கு உலகின் சிறந்த பேட்ஸ்மேனைத் திருப்பி அனுப்பும் தைரியம் எப்படி வந்தது, சிறந்த பேட்ஸ்மேனுக்காகத் தன் விக்கெட்டைத்தானே தியாகம் செய்திருக்கவேண்டும் என அந்த நேரத்தில் விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், கேன் வில்லியம்சனுக்கு இணையாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்தான் நானும் என்பதை உலகுக்கு உணர்த்தவேண்டிய சவாலைக் கையிலெடுத்தார் பிரியம் கார்க். அடுத்த ஆறு ஓவர்களில் சிலுவையில் அறையப்பட்டவரின் தலைக்கு வெற்றி கிரீடம் வந்து சேர்ந்தது. 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ஐதராபாத் அணியை மீட்டு, சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் தோல்வியைப் பரிசளித்தார் கார்க்.
இங்கே சிகரங்களைத் தொட்ட பெரும்பான்மையானோர், பள்ளத்தாக்குகளில் இருந்து எழுந்த வந்தவர்கள்தான். அப்படி வாழ்வின் இளவயதிலேயே பல போராட்டங்களைச் சந்தித்திருப்பினும், எல்லாவற்றையும் கடந்து சாதித்து, இந்த ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ் அணியால் 1.9 கோடிக்கு வாங்கப்பட்டு, தொடர்ந்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டு, அதனைச் சரியாகவும் பயன்படுத்தி, உச்சத்திற்குப் போயிருக்கிறார் பிரியம் கார்க்.
பால்காரரின் மகன்!
உத்தரப்பிரதேசத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்கு சகோதர, சகோதரிகளுடன் பிறந்தவர்தான் கார்க். அவர் தந்தை பால்காரர். வீடுகளுக்குச் சென்று பால் போடுவதோடு, பள்ளி வேன் டிரைவராக, மூட்டைத்தூக்குபவராக என எல்லாவேலைகளையும் செய்த கடின உழைப்பாளி. பெரிய குடும்பம் என்பதால் வீட்டின் உணவுத் தேவைகளை சமாளிக்கவே அவர் பல வேலைகளை செய்யவேண்டியிருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் மகனுக்குள் இருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்க்கிறார். மகனுக்குள் பெரிய திறமை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்பவர் இன்னும் கடுமையாக உழைக்கிறார். கடன் வாங்கி, மீரட்டுக்கு கொண்டுபோய் கிரிக்கெட் அகாடமியில் சேர்க்கிறார். இது புவனேஷ்வர் குமார், பிரவீன் குமார் போன்ற புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் முகங்களை உருவாக்கிய அதே அகாடமி. அங்கிருந்து தொடங்கியதுதான் பிரியம் கார்கின் கிரிக்கெட் பயணம். இங்கு பயிற்சி பெற தினமும் கார்க் 40 கிலோமீட்டர் தொலைவு பயணப்பட வேண்டி இருந்தது. கிரிக்கெட் கனவு, தந்தையைப்போலவே பிரியத்தையும் கடுமையாக உழைக்க வைத்தது.
ஆனால், 11 வயதிலேயே அன்பைப் பொழிந்த அவரது தாய் திடீரென இறந்துவிட்டார். தாயின் திடீர் பிரிவு பிரியத்தை சோகத்தில் ஆழ்த்தியது. மன அழுத்ததுக்கு ஆளாகி, தான் மிகவும் நேசித்த கிரிக்கெட்டில் இருந்தே விலக ஆரம்பித்தார். அகாடமி பக்கமே போகவில்லை. ஆனால், பிரியத்தின் தந்தை மகனின் மேல் வைத்திருந்த நம்பிக்கையைக் கைவிடவில்லை. மகனின் மனதைத் தேற்றி மீண்டும் அகாடமிக்கு அனுப்பினார். அன்று உடம்பில் ஏறிய லட்சிய வெறிதான் இன்று ஐபிஎல்-ல் நாம் காண்பது.
சச்சின் டெண்டுல்கரை தனது ரோல் மாடலாகக் கருதிய கார்க், U14, U16, U19 என உத்தரப் பிரதேசத்துக்காக பல நிலைகளிலும் ஆடத் தொடங்கினார். ஒவ்வொரு நிலையிலும் அவரது ஆட்டம் பிரமிக்க வைத்தது. 'கிங் ஆஃப் சென்சுரிஸ்' என்றுதான் பிரியமை அவரது நண்பர்கள் அழைப்பார்களாம். அதுவும் ஒற்றை சதம் அல்ல, இரட்டை சதங்கள் அடிப்பதில் வல்லவராய் உருமாறியிருக்கிறார் பிரியம்.
உள்ளூர் வீரருக்கு உத்திரபிரதேசத்துக்காக ரஞ்சி டிராபியில் ஆடும் வாய்ப்பு 17 வயதில் வந்தது. முதல் ரஞ்சி போட்டியிலேயே சதம் அடித்து கிங் ஆஃப் சென்சுரிஸ் என்பதை நிரூபித்தார். அதோடு மட்டுமல்ல முதல் சீசனிலேயே அதிக ரன்கள் (816) குவித்த வீரர் என்கிற சாதனையும் பிரியம் கார்கிடம் வந்தது. இதனைத்தொடர்ந்து விஜய் ஹஸாரே, தியோதர் எனப் பல தொடர்களில் விளையாடியவருக்கு இந்தியாவின் அண்டர் 19 கேப்டன் பதவி தேடிவந்தது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார் பிரியம் கார்க். ஜெய்ஸ்வால், சக்சேனா, ரவி பிஷ்னாய் எனப்பல இளம் வீரர்களும் இவர் தலைமையின் கீழ் விளையாடியவர்கள்தான்.
இளம் வயதிலேயே உச்சத்துக்குப்போன பிரியம் கார்கை போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கியது ஐதராபாத். பெங்களூருவுக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் 12 ரன்களில் அவுட் ஆனார் பிரியம் கார்க். அடுத்து கொல்கத்தா, டெல்லிக்கு எதிரானப் போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இருந்தாலும் பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சென்னைக்கு எதிரானப் போட்டியில் பிரியம் கார்க் ப்ளேயிங் லெவனில் இருக்கமாட்டார், அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டரை உள்ளே கொண்டுவருவார்கள் என எல்லோரும் எதிர்பார்க்க, வார்னர் அவருக்கு இறுதி வாய்ப்பளித்தார். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அணியின் வெற்றிக்கே காரணமாக அமைந்துவிட்டார் பிரியம் கார்க்.
Also Read: தோனி தலைமையில் ஹாட்ரிக் தோல்விகள்... தவறிழைக்கும் சிஎஸ்கே, வாய்ப்பை பயன்படுத்திய ஐதராபாத்! #CSKvSRH
சாம் கரண் வீசிய 17-வது ஓவரில், கார்க் மட்டுமே, 20 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கை, சன்ரைசர்ஸுக்கு ஆதரவாகத் திருப்பிவிட்டார். அதுவும் அவர் ஆஃப் சைடு ஸ்கொயர் திசையில் அடித்த பவுண்டரியும், மிட் விக்கெட் திசையில் அடித்த சிக்ஸரும் கார்க் இன்னும் பல சம்பவங்கள் செய்வார் என்பதை உணர்த்தியது. அபிஷேக் ஷர்மாவுடன் சேர்ந்து நிதானமாகவும், அதே நேரத்தில் ஆக்ரோஷமாகவும் ஆடி ஐபிஎல் போட்டியில், தன்னுடைய முதல் அரைச் சதத்தைப் பதிவு செய்திருக்கிறார் கார்க்.
சிறு வயதில் வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால், தெருவோரக் கடைகளில் நின்றுதான் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பாராம் கார்க். ஆனால் இன்று நூறு கோடி ரசிகர்களுக்கு மேல் அவருடைய ஆட்டத்தை தொலைக்காட்சியில் கண்டு, ரசித்து, கொண்டாடுகிறார்கள். கேம் சேஞ்சர் கார்க் இனி எப்போதும் கொண்டாடக்கூடியவராக இருப்பார்!
source https://sports.vikatan.com/ipl/the-inspiring-journey-of-priyam-garg-of-sunrisers-hyderabad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக