கேரள மாநிலம்.திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் ஸரித், ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசு ஏஜென்சிகள் விசாரணை நடத்தி வருகின்றன. ஸ்வப்னா சுரேசிடம் நடத்திய விசாரணையில், கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனுடன் அவருக்குப் பழக்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து சிவசங்கரன் நீக்கப்பட்டார். சிவசங்கரனிடமும் சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியன. அதில் ஸ்வப்னா வங்கி லாக்கரில் பணம் மற்றும் நகைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதை அடுத்து ஸ்வப்னாவின் இரண்டு வங்கிகளின் லாக்கர்களில் இருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் சுமார் ஒரு கிலோ தங்கம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
அந்தப் பணம் தங்கம் கடத்தியதில் சமாதித்ததாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்தியதில், கேரள அரசின் இலவச வீடு கட்டி கொடுக்கும் திட்டமான லைஃப் மிஷன் சார்பில் வீடுகட்டும் ஒப்பந்தம் கொடுத்த ஒரு நிறுவனத்திடமிருந்து தனக்கு கமிஷனாக அந்தப் பணம் கிடைத்தது என்று ஸ்வப்னா கூறியிருந்தார். இதையடுத்து கேரள அரசின் லைஃப் வீடு கட்டும் திட்டத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த வழக்கில் வெளிநாட்டு தொடர்புகள் உள்ளதால் இதுகுறித்து சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணையில் களமிறங்கியது. லைஃப் வீடுகள் கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை இல்லை என கேரள அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுபோல லைஃப் வீடுகள் கட்டும் திட்ட ஒப்பந்ததாரரான யூனிடாக் நிறுவனத்தின் எம்.டி சந்தோஷ் ஈப்பன் என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவின் ஓரிடத்தில்,`ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி யு.ஏ.இ தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அதில், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். அதுசம்பந்தமாக ஸ்வப்னா, எனக்கு போன் செய்து சீப் கெஸ்ட்களுக்கு பரிசு வழங்க ஐந்து ஐபோன் வேண்டும் என கேட்டார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மாலில் இருந்து ஐந்து ஐபோன்கள் வாங்கி ஸ்வப்னாவிடம் கொடுத்தேன். அதற்கான பில் ஆதாரம் என்னிடம் உள்ளது" என சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: கேரளா: `தூதரக அதிகாரியுடன் இணைந்து ரியல் எஸ்டேட்?’ - ஸ்வப்னா லாக்கரில் சிக்கிய பணம், தங்கம்
இதனால் ஸ்வப்னாவிடம் இருந்து ஐபோன் வாங்கியதாக காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா விமர்சனத்துக்குள்ளானார். இந்த நிலையில் ரமேஷ் சென்னிதலா, ஐபோன் வாங்கவில்லை என அவரது அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐபோன் விவகாரத்தால் தங்கம் கடத்தல் ஸ்வப்னா வழக்கு மற்றும் கேரள அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/kerala-opposition-leader-ramesh-chennithala-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக