மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத், தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க பெண் அமைச்சரைத் தரக்குறைவான வார்த்தைகள் கூறி அவமரியாதை செய்திருக்கிறார். இதை எதிர்த்து தற்போதைய முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அமைதிப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். இது பா.ஜ.க-வினரிடம் மட்டுமன்றி பொதுமக்களிடையேயும் எதிர்ப்புகளைப் பெற்றிருக்கிறது.
மத்தியப்பிரதேச மாநிலம், தாப்ரவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் என்பவருக்காக, குவாலியர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், தன் கட்சி வேட்பாளர் சுரேஷையும்,பா.ஜ.க கட்சி வேட்பாளர் இமர்தி தேவியையும் ஒப்பீட்டுப் பேசும்போது, `சுரேஷ் இயல்பானவர், இந்த மண்ணுக்காகப் பிறந்தவர்’ என்றும், `ஆனால் மற்றொருவர் இருக்கிறார்... அவர் யார்... அவர் பெயர் என்ன... என்னைவிட அவரை உங்களுக்கு நன்றாகத் தெரியும்...’ எனவும் தரக்குறைவான வார்த்தைகளைக் கூறி கமல்நாத் கேட்க, கட்சித் தொண்டர்கள் இமர்திதேவியின் பெயரைக் கூறியிருக்கிறார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் கவிதா படிதார் தலைமை தேர்தல் அதிகாரியிடம், கமல்நாத் மீது புகாரளித்து விசாரிக்கக் கோரியிருக்கிறார். மேலும் அவர் குவாலியரில் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ``இமர்தி தேவி ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஒரு தொழிலாளியாக வளர்ந்து சட்டசபை உறுப்பினராக, அமைச்சராக வளர்ந்திருக்கிறார். இவரைப் பற்றிக் கூறிய அருவருக்கத்தக்க அந்த வார்த்தை ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் வார்த்தையாக இருக்கிறது” என்றார்.
முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், ``கமல்நாத் என்ற பெரும் வணிகருக்கு, ஏழைக் குடும்பத்தில் பிறந்த இம்ரதி தேவியை பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. பெண்களைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் பேசுவதற்கு யாருக்கும் தகுதி இருக்கிறதா?’’ என்றவர், ``இன்று நவராத்திரியின் இரண்டாவது நாள். நாம் இந்த நாளில் பெண்களைப் போற்ற வேண்டும். இது இந்தியா. இங்கு திரௌபதியை அசிங்கப்படுத்தியவர்கள் நிர்மூலமாக்கப்பட்டார்கள்” என்றார்.
தொடர்ந்து, ``இது அதிர்ச்சியளிக்கிறது, கமல்நாத் போன்ற ஒரு மூத்த அரசியல்வாதி, எங்கள் அமைச்சர்களில் ஒருவரைப் பற்றி இத்தகைய அவமரியாதைக்குரிய குறிப்பை எவ்வாறு வழங்க முடியும்... இது வெட்கக்கேடானது. மேலும், பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு அவமரியாதை அளிக்கிறது. இதை எதிர்த்து இன்று நான் அமைதிப் போராட்டத்தைத் தொடங்குகிறேன்” என்றார்.
இது குறித்து மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா கூறுகையில், ``கமல்நாத் குறிப்பிட்டு அவர் பெயரை கூறவே இல்லை. பா.ஜ.க-வினர் வேண்டுமென்றே அவர் மீது குற்றம்சுமத்துகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
இந்தச் சர்ச்சை குறித்து பதிலளித்த மூத்த மாநில காங்கிரஸ் தலைவர் விபா படேல், ``கமல்நாத்தோ, வேறு எந்த காங்கிரஸ் தலைவரோ பெண்களை அவமதிக்க விரும்பவில்லை. பா.ஜ.க தலைவர்கள் இது போன்ற பிரச்னைகளைத் தேவையின்றி எழுப்பும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை போன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள் குறித்து, தங்கள் சொந்தத் தலைவர்களின் ஆட்சேபகரமான அறிக்கைகள் குறித்து பா.ஜ.க தலைவர்கள் ஏன் எதுவும் கூறவில்லை” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இமர்தி தேவி காங்கிரஸ் ஆட்சியில் மூன்று முறை அமைச்சராக இருந்தவர், கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வுடன் இணைந்தார். தற்போது சிவராஜ் சிங் சௌகான் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார்.
இரண்டு நாள்களுக்கு முன்னர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் இமர்தி தேவி, மாநில முதல்வராக கமல்நாத் இருந்தபோது, தனது அமைச்சர்கள் குழுவில் அவரால் இடமளிக்க முடியாத ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் ரூ. 5 லட்சம் தந்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார்
source https://www.vikatan.com/news/politics/bjp-accuses-kamal-nath-of-insulting-imarti-devi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக