Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

பங்குச்சந்தையில் உங்கள் வெற்றிவாய்ப்பு எப்படி? விடைசொல்லும் ஒரு சுயபரிசோதனை!

பங்குச் சந்தையில் அடிக்கடி நஷ்டத்தைச் சந்தித்து வருகிறீர்களா?

எங்கே தவறு செய்கிறோம், பலரும் சில ஆயிரங்களை முதலீடாகப் போட்டு, லட்சத்தில் லாபத்தை அள்ளுவதாகச் சொல்கிறார்களே, ஏன் எனக்கு மட்டும் இப்படி என்பது போன்ற கேள்விகள் உங்களை வாட்டுகிறதா?

பங்குச் சந்தையில் இருக்கலாமா, வெளியேறி வேறு முதலீடுகள் பக்கம் பார்வையைத் திருப்பலாமா என்ற சிந்தனை எழுகிறதா?

அதைத் தீர்மானிக்கும் முன் இதற்குப் பதில் கூறுங்கள்.

உங்கள் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது எது?

கம்பெனிகளின் லாப, நஷ்டமா?

இந்தியச் சந்தையின் டிரெண்டா?

உலகச் சந்தைகளின் போக்கா?

இவை எதுவுமே இல்லை. உங்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது உங்கள் குணநலன்கள்தான் என்பதை நிரூபிப்பதற்காக உலகெங்கும் உள்ள நடத்தையியல் நிதி நிபுணர்கள் (Behavioral Finance Expert) இதை நிறுவுவதற்கான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் இருக்கிறார்கள்.

நீங்கள் நம்பிக்கையாளரா?

எந்தவிதமான குணாதிசயங்கள் பங்குச் சந்தை வெற்றிக்கு உதவுகின்றன என்பது பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

``பங்குச் சந்தையில் அவநம்பிக்கையாளர்களை (Pessimist) விட நம்பிக்கையாளர்களே அதிக வெற்றி பெறுகிறார்கள்; ஏனெனில் அவர்கள் எதிலும் தைரியமாக இறங்கி சாதனை புரிகிறார்கள்” என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், தைரியமாக இறங்குபவர்கள், அவசரக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் தேவையற்ற முடிவுகள் எடுக்கப்பட்டு நஷ்டம் விளைவதும் உண்டு. எதிலும் இறங்கத் தயங்குபவர்கள் நல்ல வாய்ப்புகளை தவறவிடுவதும் உண்டு.

Stock Market

வெற்றி தரும் மூன்று குணாதிசயங்கள்

டாக்டர் வான் கே.தார்ப் என்னும் சைக்காலஜிஸ்ட் 1980-களில் சந்தையில் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தார். இது ஏன் என்று அறிய பலவிதமான சர்வேக்களையும் ஆய்வுகளையும் மேற்கொண்டார். ``மனிதர்களிடம் வெவ்வேறு வகையான கருத்துகளும் ஆளுமைகளும், மனோபாவங்களும் உள்ளன. அவை அவர்களின் வயது, இருப்பிடம், சூழ்நிலைகள், குறிக்கோள்கள் இவற்றைப் பொறுத்து அமையும். இதனால் சந்தையைப் பற்றிய அவர்களின் புரிதல்களும் அணுகும் முறைகளும்கூட மாறுபடும். சிலருக்கு வெற்றி பெறும் மனநிலை இயல்பாகவே அமைந்திருக்கும்; இன்னும் சிலருக்கு அது மிகக் கடினம்" என்பது போன்ற கருத்துகளை டாக்டர் தார்ப் முன்வைத்தார்.

ஆயிரக்கணக்கான மக்களிடம் சோதனை நடத்தி, கீழ்வரும் மூன்று குணாதிசயங்கள் பங்குச் சந்தை வெற்றிக்கு மிகவும் அவசியம் என்று கண்டறிந்தார்:

1. ஒரு வெற்றியாளர் விரிந்த கண்ணோட்டத்துடன் (seeing the big picture) புதிய வாய்ப்புகளைக் கண்டறிவது அவசியம்; உலகின் நிகழ்வுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை என்பதை உணர்ந்தவராக இருக்க வேண்டும்.

2. உணர்வுரீதியாக இன்றி, ஆராய்ச்சிரீதியாகவும், தர்க்கரீதியாகவும் முடிவுகளை எடுப்பவராக விளங்க வேண்டும்.

3. தன் முடிவுகளில் உறுதியுடன் ஓர் ஒழுங்கைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.

15 விதமான டிரேடர்கள்

இந்தக் குணாதிசயங்களின் அடிப்படையில் டாக்டர் தார்ப், பங்குச் சந்தை டிரேடர்களை 15 விதமானவர்களாக வகைப்படுத்தியுள்ளார். அவற்றில் முதல் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் எளிதில் வெற்றி பெறுவார்கள்; கடைசி மூன்று வகையைச் சேர்ந்தவர்கள் பங்குச் சந்தையில் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்த்து, வல்லுநர்கள் மூலம் முதலீடுகளை மேற்கொள்வது நல்லது; நடுவில் உள்ள 10 வகையினர் ஒரு சில பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் தார்ப் ஒரு இலவச சோதனை சர்வேயையும் வடிவமைத்துத் தந்துள்ளார். அதில் 35 கேள்விகள் உள்ளன. ஐந்து நிமிடங்களில் பதிலளிக்கக்கூடிய முறையில் அமைந்திருக்கும் அவற்றில் சரியான பதில், தவறான பதில் என்று எதுவும் இல்லை.

நாம் செய்திகளை எப்படி உள்வாங்குகிறோம்; எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதை மட்டுமே இந்த சர்வே கணிக்கிறது.

பங்குச் சந்தை

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்தவுடன், நம்மைப் பற்றிய ரிப்போர்ட் வருகிறது. அதில் நாம் எந்த வகையான டிரேடர், நமது பலம் என்ன, பலவீனம் என்ன, சந்தையில் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டா என்பது போன்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன.

மேலும் விரும்பினால், ஒரு விரிவான, ஆறு பக்க இலவச ரிப்போர்ட்டும் தரப்படுகிறது. இதில் மேற்கண்ட மூன்று குணாதிசயங்களில் எத்தனை நம்மிடம் உள்ளன, நம் பலத்தைப் பெருக்கி, பலவீனத்தைக் குறைக்கும் முறைகள் என்னென்ன, எந்தெந்த விதங்களில் நம்மை வடிவமைத்துக் கொள்வது நன்மை தரும் என்பது போன்ற விவரங்கள் உள்ளன. ஆனால், ஒருவர் டிரேடிங்கில் எந்த முறையைப் பின்பற்ற வேண்டும், ஏற்ற இறக்க சந்தைகளில் அவருக்கு ஏற்றது எது என்பது போன்ற விவரங்கள் இதில் இல்லை.

இளைஞர்களுக்கு இது கட்டாயம் தேவை

கடந்த மூன்று மாதங்களாக ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் 10 லட்சம் புதிய டீமேட் அக்கவுன்ட்டுகள் தொடங்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. நம் மக்களின் இந்த அளவு மீறிய உற்சாகம் பங்குச் சந்தைக்கு நல்லதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் இந்த இளம் முதலீட்டாளர்களுக்கே அது நல்லதா என்ற கேள்வியும் எழுகிறது. இதில் எத்தனை பேர் சந்தை பற்றிய தெளிவோடு அதில் இறங்குகிறார்கள்; எத்தனை பேர் ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள் என்பது தெரியவில்லை. கண்டிப்பாக இவர்களில் சிலராவது, ``நாம் பங்குச் சந்தையில் தொடர எண்ணும் முன் நம்மைப் பற்றியும், நமது வெற்றி வாய்ப்புகள் பற்றியும் அறிந்துகொள்வது நல்லது” என்று எண்ணலாம். அப்படி எண்ணுபவர்கள்,

www.tharptradertest.com என்ற வலைதளத்துக்குச் சென்று, அதில் உள்ள இலவச சோதனையை மேற்கொண்டு சந்தையில் தங்கள் பயணத்தை வெற்றிகரமாகத் தொடரலாம்.



source https://www.vikatan.com/business/share-market/tharp-trader-test-help-you-understand-what-type-of-trader-you-are

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக