கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ராஸ் (Hathras) மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அந்த இளம்பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இந்தச் சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அந்த இளம்பெண்ணுக்கு நீதி கிடைத்தே தீர வேண்டும் என்று நெட்டிசன்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இளம்பெண் `வால்மீகி' என்ற பிற்படுத்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். `மாற்று வகுப்பைச் சேர்ந்தவர்களால் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது' என்று சொல்லி சில பட்டியலின அமைப்புகளும் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் களமிறங்கியிருக்கிறார்கள்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண்ணை, கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லியிலுள்ள சப்தர்ஜங் (Safdarjung) மருத்துவமனைக்கு மாற்றியிருக்கிறார்கள்.
Also Read: சென்னை: வாட்ஸ்அப்பில் அந்தரங்க புகைப்படம்... பெண்ணை மிரட்டிய ஆன்லைன் 'லோன் ஆப்' கும்பல்!
இது குறித்து ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சார்பில், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சில தகவல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ``நான்கு பேர் மோசமான முறையில் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். வன்கொடுமை செய்தவர்களை எதிர்த்துப் போராடி, அவர்களின் பிடியிலிருந்து வெளியே வர முயன்றிருக்கிறார் அந்தப் பெண். அவர்கள் அந்தப் பெண்ணின் மீது செலுத்திய அழுத்தத்தால், தனது நாக்கைக் கடுமையாகக் கடித்திருக்கிறார். அதில் அவரது நாக்கு வெட்டுப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் முதுகுத்தண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உடம்பில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மிக மோசமான நிலையில்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் கால்கள் இரண்டும் முழுவதுமாக முடங்கிப்போய்விட்டன. அவரது கைகள் பாதியளவு முடங்கியிருந்தன'' என்று கூறியிருக்கிறது மருத்துவமனை தரப்பு.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் சில தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். ``சம்பவம் நடந்த அன்று அந்த இளம்பெண் தன் தாயாருடன் வயலுக்குச் சென்றிருக்கிறார். வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது தன் மகளைக் காணவில்லை என்று எல்லா பக்கமும் தேடியிருக்கிறார் அந்தப் பெண்ணின் தாய். அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் தேடியிருக்கிறார்கள். கடைசியில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவ இடத்தில், அந்தப் பெண்ணை மயங்கியநிலையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தீப், ராமு, லவ்குஷ், ரவி ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்து, கொலை முயற்சி (பிரிவு 307), கூட்டுப் பாலியல் (பிரிவு 376D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்'' என்று உ.பி காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.
இந்த வழக்கில் காவல்துறையினர் அலட்சியம் காட்டியதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் குற்றம்சாட்டினர். இதையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் சந்த்பா (Chandpa) காவல் நிலைய ஆய்வாளர் டி.கே.வர்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் `இந்தச் சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்' என்று கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
Also Read: கேரளா: கொரோனா பாதித்த இளம் பெண்... ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை! - சிக்கிய ஓட்டுநர்
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அம்பேத்கரிய இயக்கமான `பீம் ஆர்மி'-யின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காவல்துறையை மீறி, ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, அந்தப் பெண்ணுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். ``இந்த மிருகத்தனமான செயல், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துவருவதையே குறிக்கிறது'' என்று சந்திரசேகர் ஆசாத் குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும்...
Also Read: சுஷாந்த் வழக்கு: `காக்கி' டு `காவி' குற்றச்சாட்டு... பீகார் டி.ஜி.பி குப்தேஷ்வர் ஓய்வு ஏன்?
இரண்டு வாரங்களாக தன் மூச்சைப் பிடித்துக்கொண்டு சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண் இன்று காலை டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணின் பெயர் குறிப்பிட்ட ஹேஷ்டேக்கோடு ட்விட்டரில் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இந்திய அளவில் அந்த ஹேஷ்டேக் முதலிடம் பிடித்திருக்கிறது. `அந்தப் பெண் தலித் என்பதால்தான் எந்த ஒரு மீடியாவும் இந்தச் செய்தியைப் பதிவு செய்யவில்லை. எந்தவொரு பெண்கள் அமைப்பும் போராட முன்வரவில்லை. தலைநகர் டெல்லியில் நிகழ்ந்திருக்கும் அவரின் மரணத்துக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை' என்ற கருத்தை அதிகம் பேர் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்கள். ஹாத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு விரைவில் நீதி வழங்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் ரிச்சா, கங்கனா ரணாவத், பாயல் கோஷ் உள்ளிட்டோரும் ட்விட்டரில் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தியும் இந்தச் சம்பவத்துக்குத் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதையடுத்து இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/what-happened-to-the-up-girl-in-the-gang-rape-incident
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக