பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு திருவிழாவில் நேற்று பாலமேட்டில் நடந்த போட்டியில், அதிக காளைகளைப் பிடித்து பிரபாகரன் என்ற இளைஞர் முதல் பரிசு பெற்றார்.
பாலமேடு மகாலிங்க சுவாமி மடம் கமிட்டி சார்பில் நடைபெறும் ஜல்லிகட்டுப் போட்டியை அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடந்த போட்டியில் காளைகளே பிடிபடாமல் அதிகம் வெற்றி பெற்றன. 7 சுற்றுக்களாக நடைபெற்ற போட்டியில் 704 காளைகள் அவிழ்த்து விட்டப்பட்டன. 300 வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியின் முடிவில் 21 காளைகளை அடக்கி மதுரை பொதும்பை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் முதலிடம் பிடித்து பைக் பரிசாக பெற்றார். 7 காளைகளை அடக்கிய மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா இரண்டாவதாக வந்து எல்.இ.டி டிவியை பரிசாக பெற்றார்.
இதேபோல் சிறப்பாக நின்று விளையாடிய சிவகங்கை புலியூரைச் சேர்ந்த சூறாவளி என்பவரின் காளைக்கு கார் முதல் பரிசாக அளிக்கப்பட்டது. மதுரை மேலமடை பிரகாஷ் என்பவரின் காளைக்கு இரண்டாவது பரிசாக பசுவும், கன்றும் வழங்கப்பட்டன.
Also Read: அடங்காத அன்னலெட்சுமியின் `விருமாண்டி'; 21 காளைகளை அடக்கிய பிரபாகரன்- பாலமேடு ஜல்லிக்கட்டு ஒரு பார்வை
முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரன், கடந்த 2020-ம் ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடமும், 2021-ல் இரண்டாம் இடத்தையும் பெற்ற பெருமைக்குரியவர்.
நேற்று நடந்த போட்டியில் மாடு முட்டியதில் இரு காவலர்கள், மாடுபிடி் வீரர், காளை உரிமையாளர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விதிகளை மீறி நடந்துகொண்டதாக இரண்டு வீரர்கள் வெளியேற்றபட்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகளால் காண வரும் வெளியூர் மக்களின் பங்களிப்பு குறைவாக இருந்தது. அடுத்து, வருகின்ற 17-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண மதுரை மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/article-about-madurai-palamedu-jallikattu-festival
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக