நாளை மகரசங்கராந்தி. சூரியன் தன் வடதிசைப்பயணமான உத்தராயணத்தில் அடியெடுத்துவைக்கும் நாள். தமிழர்களின் பொங்கல் பண்டிகை. தை முதல் நாளின் மற்றுமொரு சிறப்பு சபரிமலை ஐயனின் ஜோதிதரிசனம். உலகெங்கும் இருக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள் கொண்டாடி மகிழும் அந்த ஐயப்பனை இந்த நாளில் வணங்குவது மிகவும் சிறப்புடையது.
ஐயப்பன் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். அசுர சக்திகளை அழிக்க அவதாரம் செய்தவன். தற்போதைய கேரளமாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அடூர் வட்டத்தில் இருக்கும் புண்ணிய நகரம் பந்தளம். இந்தப் பந்தத்தை மையமாகக் கொண்டு பந்தள நாட்டை ஆண்டுவந்த மன்னர்களின் வம்சத்தில் வளர்ந்தார் ஐயப்பன். ஆம், மன்னர் ராஜசேகரன் வளர்த்த மணிகண்டனே ஸ்ரீஐயப்பனாக சபரிமலையில் வீற்றிருந்து அருள் புரிகிறார். இந்த உலகத்தில் எந்தக் குடும்பத்துக்கும் கிடைக்காத பெரும் சிறப்பு அந்தக் குடும்பத்துக்குக் கிடைத்தது. அதனால்தான் ஐயப்ப பக்தர்கள் சென்று ஐயப்ப ஸ்வாமி வளர்ந்த இடத்தையும் தரிசனம் செய்து மகிழ்கிறார்கள். அப்படிப்பட்ட பெருமையும் சிறப்பும் மகத்துவமும் வாய்ந்த பந்தள அரச குடும்பத்தில் தற்போது மன்னராக இருப்பவர் ஸ்ரீசசிகுமார் வர்மா தம்புரான்.
ஐயனை நாமெல்லாம் பக்தியோடு வழிபடுகிறோம். ஆனால் ஐயப்பன் பிறந்த அரச வம்சத்தினர் அந்த ஐயனை எப்படிக் கருதுகிறார்கள் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட்டது. அந்த ஆர்வத்தை நிறைவேற்றும் வகையில் சாஸ்தா வியாசர் அரவிந்த் சுப்பிரமண்யம் பந்தள அரண்மனையைச் சேர்ந்த மன்னர் ஸ்ரீசசிகுமார் வர்மா தம்புரானோடு விகடன் வாசகர்களுக்காக ஒரு சுவாரஸ்யமான உரையாடலை நிகழ்த்தினார். இதோ அந்த உடையாடல் உங்களுக்காக...
ராஜ குடும்பத்தை சேர்ந்த நீங்கள் பகவானை பார்ப்பது எப்படி?
ஸ்ரீசசிகுமார் வர்மா தம்புரான்: ஐயப்பன் ஸ்ரீ தர்மசாஸ்தாவின் அவதாரம் என்பது உங்களுக்குத் தெரியும். 'தர்மசாஸ்தா' என்றால் தர்மத்தை (உலக தர்மத்தை) நிலைநிறுத்துபவர். எங்களைப் பொறுத்தவரை, ஐயப்ப சுவாமி எங்கள் அன்பு மகன் ‘மணிகண்டன்’. அவரை நாங்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே காண்கிறோம். எங்கள் குடும்பத்தையும் அதோடு பக்தர்களையும் காத்தருளும் பொறுப்பை ஏற்றிருக்கும் காவலன் அவரே!
கோடிக்கணக்கான பக்தர்களைப் போலவே நாங்களும் ஐயப்பனைப் பிரார்த்தனை செய்து வணங்குகிறோம்; ஆனால் எங்கள் வழிபாட்டில் எங்கள் மகன் மீதான அன்பே முதன்மையாக ஆதிக்கம் செலுத்துகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பந்தளம் மகாராஜா ராஜராஜசேகரரும், மகாராணி பெருந்தேவியும் குழந்தை பாக்கியத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள். மகாராஜாவும் மகாராணியும் முறையே சிவன் மற்றும் விஷ்ணுவின் பக்தர்கள். அவர்கள் வழிபட்ட சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்களையும் நாம் இன்றும் பந்தளத்தில் காணலாம்.
ஒருமுறை மன்னர் ராஜசேகரன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது, புனித பம்பை நதிக்கரையில் உள்ள ‘பூங்காவனத்தில்’ அடர்ந்த காடுகளில் நடுவே ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தையின் கழுத்தில் ஒரு மணிமாலை இருந்தது. குழந்தையோ தெய்வீகத்தன்மையுடன் காணப்பட்டது. அப்போது அங்கே ஒரு முனிவர் வந்து குழந்தையை எடுத்துச் சென்று மகனாக வளர்க்குமாறு மன்னரிடம் அறிவுறுத்தினார். மகாராஜா முனிவரிடம் ஆசி பெற்று குழந்தையைப் பெற்றுக் கொண்டார்.
மகாராஜா பின்னர், குழந்தை மணிகண்டனை வரவேற்க ஏற்பாடு செய்யும்படி அரண்மனைக்குச் செய்தி அனுப்பினார். மகாராஜாவை வழிநடத்த ரிஷி வடிவில் வந்தது மகாவிஷ்ணுவே என்று நம்பப்படுகிறது. மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவே பகவான் ஸ்ரீ தர்மசாஸ்தாவின் தாயாக விளங்குவதால், அவரே தன் குழந்தையின் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டவர். மேலும் தன் பக்தையான மகாராணி ஒரு குழந்தையை கருத்தரிக்காத துயரத்துடன் இருப்பதை ஒரு தாயாகப் புரிந்து கொண்ட அவரே இப்படி அனுக்ரஹம் செய்துள்ளார்.
பகவான் எங்கள் குடும்ப உறுப்பினர் என்று உரிமையுடன் நீங்கள் சொல்வதைக் கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது.
தம்புரான் (சிரித்துக் கொண்டே): ஆம் ! பகவான் மணிகண்டன் எங்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள நிரந்தர உறுப்பினர்.
வேடிக்கையாக நீங்கள் சொன்னாலும் அதுதானே நிதர்சனம்! வேறு யாருக்கும் கிடைக்காத பாக்யமில்லையா இது? நீங்கள் பகவானை உங்கள் மகனாகக் காண்கிறீர்கள். பந்தளம் வாழ் மக்கள் மணிகண்டனை எப்படிக் காண்கிறார்கள்?
தம்புரான்: பந்தளத்தின் பூர்வீகவாசிகள் மணிகண்டனை இன்றும் தங்கள் இளவரசனாகவே காண்கிறார்கள். மக்கள் தங்களின் விவசாய விளைபொருள்கள் மற்றும் வருமானத்தில் ஒரு பகுதியை தங்கள் இளவரசருக்குக் காணிக்கையாக வழங்குவது ஒரு பாரம்பர்யம். இது இன்றளவும் தொடர்கிறது. இந்தக் காணிக்கையானது அன்னதானம், தர்ம காரியங்கள் மற்றும் பக்தர்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் பூர்வீகம் தமிழகம் அல்லவா? பகவானை பாண்ட்யேச வம்ச திலகம் என்று சொல்வது அதனால்தானா?
தம்புரான்: ஆம், பந்தளம் அரச குடும்பம், பூர்வீகத்தில் பாண்டிய ராஜ வம்சத்தைச் சேர்ந்தது. நாங்கள் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆகியோரின் வழித்தோன்றல்கள். எங்கள் மீனாட்சி அம்மனே பந்தளம் ராஜகுடும்பத்தின் குலதெய்வம்; சபரிமலையில் மாளிகபுரத்தம்மனாக வழிபடப்படுவதும் இந்த அம்பிகையே.
சபரிமலைக் கோயிலுக்கும் பந்தளத்துக்குமான பந்தத்தை நாங்கள் நிறைய அறிவோம். மற்ற சாஸ்தா ஆலயங்களும் பந்தள வேந்தர் கட்டியதுதானா?
தம்புரான்: துர்கா தேவியால் கொல்லப்பட்ட மகிஷாசுரனின் மரணத்திற்குப் பழிவாங்க எண்ணிய அவனது சகோதரி மகிஷி, ஹரி மற்றும் ஹரன் எனும் இரு ஆண்கள் பெற்றெடுக்கும் ஒரு குழந்தை மட்டுமே தன்னை அழிக்க வேண்டும் என்று பிரம்மாவிடம் வரம் பெறுகிறாள். இரு ஆண்களால் ஒரு குழந்தை அவதாரம் செய்வது இயற்கைக்கு மாறானது; அது நடக்கவும் முடியாது என்றெண்ணி, தான் சாகாவரம் பெற்றுவிட்டதாக அவள் கருதினாள். ஆனால், மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, சிவ மோகினி புத்ரனாக மகிஷியைக் கொல்லும் வல்லமை பெற்ற பகவான் ஸ்ரீதர்மசாஸ்தா அவதாரம் செய்கிறார்.
அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, சபரிமலை, பொன்னம்பலமேடு ஆகிய இடங்களில் உள்ள பஞ்ச சாஸ்தா ஆலயங்கள் ஸ்ரீபரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்கெல்லாம் பந்தள ராஜகுடும்பத்தினர் கோயில்களைக் கட்டிக் கொடுத்துள்ளார்கள். சபரிமலை ஆலயம் ஸ்ரீ தர்மசாஸ்தாவின் மணிகண்ட அவதாரத்தை ஒட்டி கட்டப்பட்டது.
பயங்கரமான கொள்ளைக்காரன் உதயணன் தன் கொள்ளைக் கூட்டத்தாருடன் சேர்ந்து பல கொடுமைகளைச் செய்து, பொன்னம்பலமேடு கோயிலை அழித்தான். இவனை ஐயப்பன் கொன்றழித்தார். இப்படி ஐயப்பன் பாண்டிய குலத்திற்கே பெருமையும், மரியாதையும் கொண்டு வந்திருப்பதால், கேரளாவில் பல மகிமையான செயல்களால் புகழைப் பெற்றுள்ளதாலும், சாஸ்தா தசகத்தில் 'பாண்டியேச வம்ச திலகம் கேரளா கேளி விக்ரஹம்' என்று குறிப்பிடப்படுகிறார்.
“பந்தள ராஜவம்சத்தில் தோன்றும் ஒவ்வொருவரிடமும் என்னுடைய அம்சத்தில் ஒரு பகுதி நிலைபெற்று இருக்கிறது” என்று பகவான் சொல்லி இருக்கிறார். இதனை நான் எனது பூதநாத உபாக்யானம் புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளேன். இத்தனை சிறப்பு மிக்க பந்தள வம்சத்தின் மற்ற சிறப்புகளைக் குறித்து சொல்லுங்களேன்.
தம்புரான்: நாங்கள் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் தோன்றிய பாண்டிய வம்சத்தின் வழித்தோன்றல்கள். பந்தளம் ராஜகுடும்பம் பார்க்கவ கோத்ரத்தைச் சேர்ந்தது. மஹரிஷி பரசுராமரும் இதே கோத்ரத்தைச் சேர்ந்தவரே. இதனால் பந்தளத்து பரம்பரையினர் பிரம்ம-க்ஷத்ரியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அதாவது அவர்கள் மக்கள் நலன்கருதி பூஜையும் நடத்தலாம், அரசாளவும் செய்யலாம். கேரளத்திலுள்ள பெரும்பாலான ராஜவம்சங்கள் சந்தரவம்சத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பந்தளராஜகுடும்பம் சூர்யவம்சத்தைச் சேர்ந்தது.
பந்தள பரம்பரை எல்லா ஸம்ப்ரதாய வழிபாடுகளையும் தன்னகத்தே ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஹரிஹரபுத்ரனான தர்மசாஸ்தாவைக் கொண்ட நாங்கள் சைவ வைஷ்ணவ வழிபாட்டு முறைகளையும் கைகொள்ளுகிறோம். எங்கள் பரதேவதையாக (குலதெய்வமாக) மதுரை மீனாட்சி இருப்பதால் சக்தி வழிபாடும் இங்கே வழக்கத்தில் உண்டு. சபரிமலையிலும் மாளிகைப்புறத்தம்மனாக வழிபடப்படுகிறது.
நாங்கள் பூர்வீகத்தில் தமிழக, பாண்டிய குலத்தவர்களானாலும் பல்லாண்டுகளாக கேரளத்தில் வசிக்கும் காரணத்தால் குடும்ப வழக்கங்கள் போன்ற நடைமுறைகளுக்கு, இன்று கேரளத்தில் நடைமுறையிலிருக்கும் மருமக்கத்தாய முறைகளையே கடைபிடிக்கிறோம். பந்தளம் ராஜகுடும்பத்தின் தற்போதைய வலிய தம்புரான் (மஹாராஜா) மற்றும் வலிய தம்புராட்டி (மகாராணி) ஆகியோர் தற்போதுள்ள இந்த நெறிமுறைகளின்படியே பதவியேற்கிறார்கள்.
பந்தள ராஜ குடும்பத்தின் மஹாராஜா சபரிமலைக்குச் செல்ல மாட்டார் என்று சொல்லப்படுவதன் காரணம் என்ன?
தம்புரான்: பகவான் ஐயப்பன் எங்கள் குடும்பத்தின் மகன். எனவே பந்தளத்தின் வலிய தம்புரான் (மகாராஜா) பகவானின் வளர்ப்பு தந்தையின் ஸ்தானம் பெறுகிறார். அதனால் வலிய தம்புரான் மட்டும் சபரிமலைக்குச் செல்லக் கூடாது என்ற மரபு எங்கள் குடும்பத்தில் வழங்குகிறது. காரணம் தந்தை நின்று கொண்டிருக்க, அவர் முன்னே மகன் அமர்வது கூடாது என்ற சாஸ்திரம் இருக்கிறதல்லவா? ஐயப்பன் என்ற எங்கள் மகன் அங்கே யோகத்தில் இருக்கும் காரணத்தால், தான் சென்றால் அவர் அங்கிருந்து எழுந்து நிற்க வேண்டி வரும் என்பதால் எங்கள் மகாராஜா சபரிமலை செல்லாமல், ராஜ குடும்பத்தின் ராஜ ப்ரதிநிதியாக ஒருவரை அங்கே அனுப்பி வைப்பது வழக்கம். பந்தளம் குடும்பத்தைச் சேர்ந்த அந்த ராஜ ப்ரதிநிதி திருவாபரண கோஷயாத்திரையை வழிநடத்தி முன்னே செல்வார்.
source https://www.vikatan.com/spiritual/temples/why-the-kings-of-pandalam-wont-visit-sabarimala-explains-sasikumar-varma
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக