Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

IPL 2020: சிக்கலில் சிஎஸ்கே... 3 மாற்றங்கள் செய்வாரா தோனி? #CSKvSRH #Dhoni

முதல் போட்டியில் மும்பையை வென்று அசத்திய சிஎஸ்கே அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. வெறும் இரண்டு தோல்விகள்தானே என்று இதை வழக்கம்போல கடந்துபோய்விடமுடியாது. இந்த முறை சிஎஸ்கே பெரும்சிக்கலில் இருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. ப்ளேயிங் லெவனில் விளையாடும் பலரும் ஃபார்மில் இல்லை, அவர்களை மாற்றுவதற்கு பென்ச்சில் சரியான மாற்று வீரர்கள் இல்லை, இருக்கும் வீரர்களுக்கும் அனுபவம் இல்லை எனப் பல பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார் சிஎஸ்கே கேப்டன் தோனி. இன்னொருபக்கம் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து மூன்றாவது போட்டியில் டெல்லியை வீழ்த்தி, சரியான வியூகங்களோடு களமிறங்க ஆரம்பித்திருக்கிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

தோனி
அணிக்குள் பாசிட்டிவிட்டி பரவ இன்று சென்னைக்கு வெற்றி மிக மிக அவசியம். பேட்டிங்கிலும் சரி, பெளலிங்கிலும் சரி பெரிய மாற்றங்களை தோனி செய்தேயாக வேண்டும். இன்று மட்டுமல்ல அடுத்து சென்னை விளையாடவிருக்கும் 5 போட்டிகளில் 4 போட்டிகள் துபாயில்தான் நடைபெற இருக்கின்றன. அதனால் சென்னை அணிக்குள் சரியான மாற்றங்களை ஏற்படுத்தி அணியை செட் செய்தால் அது அடுத்த நான்கு போட்டிகளுக்கும் பேருதவியாக இருக்கும்.

திகில் துபாய்!

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 6 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 2 போட்டிகள் டை-யில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கிறது. 6 போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றிபெற்றிருக்கின்றன. ஆனாலும் இன்று டாஸ் வென்றால் தோனி பேட்டிங்கைத் தேர்ந்தெடுப்பார் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. ஆனால், டாஸ் வென்று தோனி முதல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுப்பதுதான் அணியைக் காப்பாற்றும். ஏனென்றால் ஹைதராபாத் டிஃபெண்ட் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்டுகள். அதனால் அவர்களுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்வதே சாமர்த்தியம். வீராப்பாக சேஸ் செய்கிறோம் என இறங்கினால் சென்னை மீண்டும் ஒரு பரிதாபநிலையை சந்திக்க நேரிடலாம்.

தோனியிடம் எதிர்பார்க்க வேண்டிய மூன்று மாற்றங்களைப் பார்ப்பதற்கு முன் ஹைதராபாத் எப்படியிருக்கிறது?!
David Warner

கேன் வித் காஷ்மீரி!

பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுடன் விளையாடி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது ஹைதராபாத். அப்போது அணிக்குப் பிரச்னையாக இருந்தது அணியின் மிடில் ஆர்டர். பேர்ஸ்டோவும், வார்னரும் கிட்டத்தட்ட முதல் 6-8 ஓவர்கள் விளையாடி நல்ல ஸ்டார்ட் கொடுத்தாலும் அந்தத் தொடக்கத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஓடக்கூடிய தொடர் ஓட்டக்காரர்கள் இல்லாமல் இருந்தது ஹைதராபாத். அந்த இடத்தை இப்போது கேன் வில்லியம்சன் நிரப்பிவிட்டார் என்பதோடு காஷ்மீரில் இருந்து களமிறங்கியிருக்கும் அப்துல் சமத் இந்த ஐபிஎல்-ல் பல சம்பவங்களை செய்யக்கூடியதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன.

பெளலிங் ஏரியாவைப் பொறுத்தவரை ரஷித் கான் மட்டுமல்ல புவனேஷ்வர் குமாரும் ஃபார்முக்கு வந்துவிட்டார். பிரியம் கார்க் மட்டும் கொஞ்சம் தொங்கலில் இருப்பதால் அவருக்குப் பதிலாக விஜய் ஷங்கர் அல்லது நதீம் இன்று ஹைதராபாத் அணியில் விளையாடக்கூடும்.

Also Read: IPL 2020: தோனி டு கோலி... கேன் வில்லியம்சனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்!

தோனி செய்யக்கூடிய மாற்றங்கள்!

1. பெஸ்ட் ப்ளேயிங் லெவன்?!

சென்னையின் பிரச்னையே சரியான ப்ளேயிங் லெவனை இன்னும் கண்டடையாமல் இருப்பதுதான். முரளி விஜய் தொடர்ந்து மூன்று போட்டிகளாக சொதப்பல் ஆட்டம் ஆடி அவருக்கு அவர்மேலேயே வெறுப்பை வரவைத்துவிட்டார். முரளி விஜய் மட்டுமல்ல மற்றொரு ஓப்பனரான ஷேன் வாட்சனின் நிலைமையும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஆனால், வாட்சனுக்கு இன்னும் வாய்ப்புகள் தரப்படும் என்றே எதிர்பார்க்கலாம். காரணம், சீனியர் பேட்ஸ்மேனான அவர் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு வரலாம். கடந்த ஆண்டும் திடீரென சில போட்டிகளில் முரட்டு அடி அடித்து சென்னையை வெற்றிபெறவைத்திருக்கிறார். ஆனால், முரளி விஜய் அப்படியில்லை. அவர் மேல் அவருக்கே இப்போது நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் அவருக்கு தோனி, டாடா காட்டவேண்டிய நேரமிது. அடுத்து பேட்டிங் ஆர்டரில் மிக மிக அத்தியாவசிய மாற்றமாக இருக்கவேண்டியது கேதர் ஜாதவ் நீக்கம். கேதர் இன்றும் ப்ளேயிங் லெவனில் இருந்தால் கொலைவெறியாகிவிடுவான் சிஎஸ்கே ரசிகன்.

வாட்சனோடு, ருத்துராஜ் கெய்க்வாட் ஓப்பனிங் இறங்குவார் என எதிர்பார்க்கலாம். ராயுடு உள்ளேவருவதால் ஜாதவின் இடத்தில் இன்னொரு பெளலரை தோனி கொண்டுவருவார் என எதிர்பார்க்கலாம்.

Imran Tahir

2. தாஹிரை ஓடவிடுங்க பாய்ஸ்!

கடந்த இரண்டு சீசன்களாக சென்னையின் வெற்றிகரமான ஸ்பின்னர் இம்ரான் தாஹிர். கடந்த ஆண்டு அதிக விக்கெட்டுகள் எடுத்து பர்ப்பிள் கேப் வென்றவரும் அவரே. ஆனால், அவரைத் தொடர்ந்து பென்ச்சில் உட்காரவைத்துக்கொண்டு பியூஷ் சாவ்லாவைக்கொண்டு எதிரணி பேட்ஸ்மேன்களை மடக்கிவிடலாம் என நினைக்கிறார் தோனி. இன்று துபாயில் நடக்க இருக்கும் போட்டியில் நிச்சயம் இம்ரான் தாஹிரை, தோனி ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டுவரலாம். ரவி பிஷ்னாய், முருகன் அஷ்வின் எல்லாம் தலா மூன்று விக்கெட்டுகளை துபாயில்தான் எடுத்தார்கள். துபாய் பிட்ச், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இணையாக ஸ்பின்னுக்கும் ஒத்துழைக்கிறது என்பதால் தாஹிர் இன்று சென்னையின் துருப்புச்சீட்டாக இருப்பார். இம்ரான் தாஹிர் உள்ளே வந்தால் ஒருவெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை வெளியே எடுக்கவேண்டும். அதனால் இன்று ஜோஷ் ஹேஸில்வுட் அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்றே எதிர்பார்க்கலாம்.

Also Read: IPL 2020: சொதப்பிய பஞ்சாபின் மிடில் ஆர்டர்... டேபிள் டாப்பர்ஸான மும்பை! #KXIPvMI

3. பிராவோ தேவையா?!

அம்பதி ராயுடு, டுவெய்ன் பிராவோ இருவருமே ஃபிட்டாக இருப்பதால் நான்காவது போட்டிக்கான செலக்‌ஷனில் இருவரும் இருப்பார்கள் என சொல்லியிருக்கிறார் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங். ஆனால், பிராவோவும் வாட்சனைப்போல ஃபார்மில் இல்லாமல் இருப்பவர்தான். சமீபத்தில் நடந்த முடிந்த கரீபியன் லீகில் பிராவோ பெரிதாக பெர்ஃபார்ம் செய்யவில்லை என்பதோடு கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் பிராவோ சென்னைக்குப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பிராவோ. ஆனால், இப்போது பிராவோவுக்கு நல்ல மாற்றாக சாம் கரண் இருக்கிறார் என்பதால் சாம் கரணையே தோனி ப்ளேயிங் லெவனில் வைக்கலாம்.

வாட்சன், ருத்துராஜ், டுப்ளெஸ்ஸி, ராயுடு, தோனி, சாம் கரண், ஜடேஜா, சாவ்லா, இம்ரான் தாஹிர், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் என்பதுதான் இன்று சென்னையின் ப்ளேயிங் லெவனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Sam Curran

டிரீம் லெவன் டீம்?!

ஹைதரபாத் ப்ளேயர்களில் பேர்ஸ்ட்டோ, வார்னர், கேன், ரஷித், புவனேஷ்வர் என இந்த ஐந்து பேரையும் மிஸ் செய்யாமல் வைத்துக்கொள்ளலாம். சென்னையைப் பொருத்தவரை டுப்ளெஸ்ஸி, அம்பதி ராயுடு, சாம் கரண், ருத்துராஜ், தாஹிர், தீபக் சஹார் ஆகியோரை அணியில் வைத்துக்கொள்ளலாம். டாஸுக்குப் பின்பான ப்ளேயிங் லெவனைப் பொருத்து அணியை இறுதி செய்யவும். கேப்டனாக இன்று வார்னர் பட்டையைக் கிளப்பலாம்.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-will-dhoni-do-these-three-changes-in-cskvsrh-match-today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக