``தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதைக்கூட விட்டுக்கொடுக்கப் பன்னீர் தயார். ஆனால்,பன்னீர் வைத்த கோரிக்கையை ஏற்க எடப்பாடி தயாரா?” என்று கேட்க ஆரம்பித்துள்ளனர் பன்னீர் ஆதரவாளர்கள். இதனால் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த முடிவு அறிவிக்கப்படுவதில் இழுபறி ஏற்படும் நிலையே அ.தி.மு.க வில் உருவாகியுள்ளது.
அ.தி.மு.க-வின் செயற்குழு கூட்டம் கடந்த 28-ம் தேதி நடந்தபோது எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அ.தி.மு.க-வின் அதிகாரமையம் யார் என்கிற ஈகோ இருவருக்குள்ளும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த நான்கு நாள்களாக எடப்பாடி மற்றும் பன்னீர் இருவரையுமே அவரது ஆதரவாளர்கள் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை செய்துவந்தனர். நந்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள் இருவரையுமே சந்தித்து சமாதான முயற்சியிலும் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அக்டோபர் 2-ம் தேதி காமராஜர் நினைவுநாள் என்பதால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவருமே காமராஜர் நினைவிடத்துக்கு வருகைதந்தனர். இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் பரஸ்பர வணக்கத்துடன் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இதனால், அ.தி.மு.க-வில் நிலவும் சர்ச்சைகளுக்கு முடிவு எட்டப்படும் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். அந்த நிகழ்வு நடந்த அடுத்த சில மணிநேரங்களில் அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 6-ம் தேதி சென்னையில் இருக்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. பொதுவாக இதுபோன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் என்றால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையொப்பமிட்டே அறிவிப்பு வெளியாகும். ஆனால், முதல்முறையாக ட்விட்டரில் அறிவிப்பு வெளியானது. இது பன்னீர்செல்வத்துக்குத் தெரிவிக்கப்பட்டதும் கடுப்பாகியிருக்கிறார் அவர். உடனடியாக கே.பி.முனுசாமியிடம் என்ன நடக்கிறது.``கட்சிக்கு நான் ஒருங்கிணைப்பாளரா இல்லை ஐ.டி விங் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர்களா?'' என்று எகிறியுள்ளார். இந்தத் தகவல் எடப்பாடிக்கு எட்டியதும், அந்த ட்விட்டர் பதிவை நீக்கச் சொல்லியிருக்கிறார்.
எடப்பாடி, தனக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்களை அணிதிரட்டுகிறார் என்று பன்னீர் நினைத்திருக்கிறார். முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்யும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் முக்கியமானது. எனவே, எடப்பாடி முதலில் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து தனக்கு எதிராகக் காய்நகர்த்துகிறார் என்று பன்னீர் கொதித்துப் போயுள்ளார். அதுவும் வெள்ளிக்கிழமை தேனிக்குப் பயணம் செய்யும் திட்டத்தில் பன்னீர் இருந்த நிலையில், இந்தக் கூட்ட அறிவிப்பு அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாகப் பன்னீர் வீட்டில் நடந்த ஆலோசனைக்குப்பிறகு சில முடிவுகளைப் பன்னீர் தரப்பு உறுதியாக எடுத்துள்ளது என்கிறார்கள். இதுகுறித்து பன்னீருக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம், ``பன்னீர்செல்வம் கட்சியை உடைக்கப் பார்க்கிறார் என்று செய்திகளை எடப்பாடி தரப்பு பரப்புகிறது. உண்மையில் அவர், தனக்கான உரிமையைக் கேட்கிறார். அவர் செயற்குழுவிலோ, அதற்கு முன்பு தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திலோ தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால், அவரது ஒரே கோரிக்கை, ஏற்கெனவே எடப்பாடி தரப்பில் தரப்பட்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என்கிற வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதுதான்.
முதல்வர் வேட்பாளர் யார் என்பதைப் பிறகு முடிவு செய்துகொள்ளலாம் என்று சொன்னது கட்சியின் நிர்வாகிகள்தான். பன்னீர்செல்வம் கடந்த மூன்று ஆண்டுகளில் தனது ஆதரவாளர்களுக்கு ஒன்றும் செய்யமுடியவில்லை, இப்போதுவிட்டால் வரும் தேர்தலிலும் தனது ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்காமல் போய்விடும் என்பதாலே இவ்வளவு அழுத்தம் கொடுக்கிறார்” என்கிறார்கள்.
Also Read: ``ரகசியங்களை உடைக்கட்டுமா?” - ஆவேச ஓ.பி.எஸ்; மிரளும் எடப்பாடி!
இரண்டு தினங்களுக்கு முன்பு எடப்பாடி வீட்டில் நடந்த ஆலோசனையில், சில மூத்த அமைச்சர்கள் பன்னீர் சொல்வது போல வழிகாட்டுதல் குழுவை அமைத்துவிட்டால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது. நீங்கள் முதல்வர் வேட்பாளராகக் களம் இறங்கலாம் என்ற எடப்பாடியிடம் சொல்லியுள்ளனர். எனது தரப்பிலிருந்து ஆறு பேரை நியமிக்கவேண்டும். அந்த ஆறு பேரை நான் நியமிக்கப்போய் ஆயிரம் பேரின் பகையை நான் சம்பாதிக்கவேண்டி வரும். கட்சியின் முடிவுகளை இருவர் எடுக்கும்போதே இவ்வளவு சிக்கல்கள் உள்ளது. இதில் 11 பேர் வேறு கட்சியை வழிநடத்தினால் கட்சி, கட்சியாக இருக்காது. அதனால்தான், நான் இந்தத் திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை” என்று சொல்லியிருக்கிறார்.
இந்தத் தகவல் சில அமைச்சர்கள் மூலம் பன்னீர் காதுக்கும் வந்துள்ளது. உடனே அவர்,``வழிகாட்டுதல் குழு என்பது கட்சியை வலுப்படுத்தவே நான் அமைக்கச் சொல்கிறேன். இவர் நினைப்பது போலக் கட்சி நல்ல நிலையில் இல்லை. ஆட்சி இருப்பதால் எந்தப் பிரச்னையும் வெளியே தெரியாமல் உள்ளது. இப்போது கட்சியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவரால் ஆறு பேரை நியமிக்கமுடியாவிட்டால் அமைதியாக இருக்கச்சொல்லுங்கள். நான் மொத்தமாக பதினோரு பேரையும் அறிவித்துவிடுகிறேன். ஆனால், வழிகாட்டுதல் குழு இல்லாமல் நான் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் உடன்பட மாட்டேன்” என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
Also Read: ``ரகசியங்களை உடைக்கட்டுமா?” - ஆவேச ஓ.பி.எஸ்; மிரளும் எடப்பாடி!
இவ்வளவு ஆண்டுகள் பன்னீரின் பவ்வியத்தை மட்டுமே பார்த்து வந்த அவரது ஆதரவாளர்கள், பன்னீரின் இந்த அழுத்தமான முடிவினைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள். அதோடு ஏழாம் தேதி எந்த ரூபத்தில் சிக்கல் வரும் என்பதையும் பன்னீர் கணித்துவருகிறார். ஏழாம் தேதி அன்று கூட்டம் நடந்தால், அது சிக்கலாகிவிடும் என்பதால் கூட்டத்தை நடத்தாமல் நிறுத்திவிடலாமா என்று பன்னீர் தரப்பில் ஆலோசனை நடந்துள்ளது.
முதல்வர் வேட்பாளர் யார் என்பதைப் பற்றியது அல்ல அ.தி.மு.க- வில் தற்போது நடக்கும் விவகாரம். தனது பிடி அ.தி.மு.கவுக்குள் முழுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் பன்னீரின் எண்ணம். பன்னீர்செல்வம், தன் முடிவில் உறுதியாக இருப்பதால் ஏழாம் தேதிக்குள் எந்த முடிவும் எட்டப்படாமலேயே இந்த விவகாரம் இழுத்தடிக்கப்படும் சூழலே அ.தி.மு.க-வுக்குள் தற்போது நிலவுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/opss-move-against-edappadi-palanisamys-plans
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக