Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

"எந்த பன்னீர்செல்வம்?" கமலின் `அரசியல்' குறும்பும், ஆஜித் ஜோசியமும்! பிக்பாஸ் - நாள் 21

‘கமல் வந்தும் நிகழ்ச்சி சுமாராகத்தான் இருந்தது’ என்று நேற்றைய கட்டுரையில் எழுதியிருந்தேன். இதை வெற்றிகரமாக வாபஸ் பெற வேண்டிய சூழலை கமல் இன்று ஏற்படுத்தி விட்டார். ஆம்... கமல் இன்று அதிஉற்சாக மனநிலையில் இருந்தார் போலிருக்கிறது. அவர் இன்று கொளுத்திப் போட்ட டைமிங் நகைச்சுவைகள் அனைத்துமே பட்டாசு ரகம்.

‘வாடாமலர்’, ‘எந்த பன்னீர்செல்வம்?’, ‘முள் கிரீடம்’, ‘அய்யோ... இவங்களுக்கு புரிஞ்சிடுச்சிப்பா’ என்பது போல் கமல் அடித்த பல ஜாலி சிக்ஸர்கள் இன்று விண்ணைத் தொட்டன. இதே போல் ஒவ்வொரு வார இறுதியும் அமைந்தால், கமலுக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடும்.

பொதுவாக கமல் என்ட்ரியுடன்தான் நிகழ்ச்சி ஆரம்பிக்கும். ஆனால் இன்று அதில் மாற்றம். காரணம் அனிதா.

பிக்பாஸ் - நாள் 21

கமல் இன்று வருவதற்கு முன் மக்கள் ஒப்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அப்போது அனிதா செய்த அலப்பறைகள் பிக்பாஸ் எடிட்டிங் டீமை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கும் போல. எனவே அனிதாவிற்காக ஒரு ‘குறும்படத்தை’ உருவாக்கி அதனுடன் நிகழ்ச்சியை நேராக ஆரம்பித்தார்கள்.

‘எவிக்ஷன் வரிசையில் உள்ள ஐவரில் யார் இருக்கலாம், வெளியேறலாம்’ என்கிற டாஸ்க்கில் அனிதாவிற்காக சொல்லப்பட்ட காரணங்கள் காட்சிகளாக நமக்கு தொகுத்து காட்டப்பட்டன. அவ்வளவுதான் அனிதாவின் மண்டைக்குள் அந்த காரணங்கள், ஆயிரம் நண்டுகளாக மாறி பிறாண்ட ஆரம்பித்து விட்டன போல.

“அதிகம் கோபப்படறாங்க. நாமினேஷன்ல வந்துட்டா தனியா உட்கார்ந்து யோசிக்கறாங்கன்னுலாம் என்னைப் பத்தி சொல்றாங்க... இவங்களுக்கு என்னவாம்? நான் பாட்டுக்குத்தானே இருக்கேன்... உங்களை என்ன பண்ணேன்? ஏதாவதொரு காரணம் சொல்றதுக்கு நான்தான் ஊறுகாயா... என்னை டார்கெட் பண்றாங்க" என்றெல்லாம் ஆரியிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அனிதா.

பிறகு ரியோவிடம் சென்று, "அர்ச்சனா ஏன் என்னைப் பார்த்து முறைக்கறாங்க?” என்று சிணுங்கினார். "நீ அவங்ககிட்டயே விசாரியேன்” என்றார் ரியோ. “அய்யோ... நானே கிச்சன் பிரச்னைல இருந்தேன். நீயா ஏன் கற்பனை பண்ணிக்கறே?" என்று அர்ச்சனா கட்டிப்பிடிக்க, அதற்கும் "டைட்டா கட்டிப் பிடிங்க.. சம்பிரதாயத்திற்கு பிடிக்காதீங்க” என்று அதற்கும் ஒரு காரணம் தேடி சிணுங்கினார் அனிதா.

‘பிக்பாஸ் வீடு போர்க்களம், இதுவொரு ரத்தபூமி... அப்படியொரு விளையாட்டு இது’ என்பதையே அனிதா மறந்து விட்டாரோ என்று தெரியவில்லை. ‘தான் செய்யும் அனைத்துச் செயல்களையும் மற்றவர்கள் கவனிக்கத்தான் செய்வார்கள்... தனக்கு எதிரான ஆயுதமாக அவற்றைப் பயன்படுத்தத்தான் செய்வார்கள்’ என்கிற புரிதல் இல்லாமல் தனது வீட்டில் உள்ளது போன்ற செளகரியம் இங்கும் கிடைக்க வேண்டும் என்று அனிதா நினைத்தால் அது சிரமம்.
பிக்பாஸ் - நாள் 21

சம்யுக்தா, ஷிவானி, கேப்ரியல்லா என்கிற முப்பெரும் தேவியர் குழு அனிதாவின் ‘அனத்தல்களால்’ எரிச்சல் அடைகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

கமல் என்ட்ரி. "நான் பொதுவாக எந்தப் பண்டிகையையும் கொண்டாடுவதில்லை. ஆனால் இன்று ஆயுதம் மரியாதை பெறும் நாள்... நாமே இங்கு பல ஆயுதங்களை உருவாக்க முடியும். ஆனால் செய்ய நினைப்பதில்லை. சினிமாத்துறையில் கூட பல கருவிகளை வெளிநாடுகளில் இருந்துதான் தருவிக்கிறோம். வெள்ளைக்காரங்க நம்மை குமாஸ்தாவா வேலை செய்ய வெச்சு பழக்கிட்டாங்க” என்றெல்லாம் 'ஆயுத பூஜை’யைக் கொண்டாடி அகம் டிவி வழியாக உள்ளே சென்றார் கமல். (அறிவும் ஓர் ஆயுதம்-னு சொல்லியிருக்கலாம்).

முன்னமே சொன்னபடி கமல் இன்று உற்சாக மனநிலையில் இருந்தார் போலிருக்கிறது. உள்ளே நுழைந்த அடுத்த கணமே பாலாஜியின் உடையைப் பார்த்து "‘நாடா... காடா’ டாஸ்க் இன்னமும் முடியலையோன்னு நெனச்சேன்” என்று முதல் சிக்ஸரை அடிக்க சபை கலகலத்தது.

அடுத்த டார்க்கெட் அனிதா. இப்போது பந்து மைதானத்தை விட்டே வெளியில் பறந்தது. ‘எனக்கு ஸ்பேஸ் வேணும்’ என்று அனிதா சிணுங்கியதை வைத்து விதம் விதமாக அவரை கிண்டல் செய்தார் கமல். “சார்... நீங்க என்னை கலாய்க்கறீங்கன்னு தோணுது” என்று அதற்கும் அனிதா சிணுங்க... "அய்யோ.. இந்தப் பொண்ணுக்கு புரிஞ்சிடுச்சுப்பா" என்பது போல் கமல் ஜாலியாக வெளிப்படுத்திய உடல்மொழி, இந்த சீஸனில் அண்டர்லைன் செய்து குறித்து வைக்கப்பட வேண்டிய காட்சிகளுள் ஒன்று.

பிக்பாஸ் - நாள் 21

“நீங்க நீங்களாக இருங்க... உங்க குறைகளை நீங்களா ஒத்துக்கிட்டாதான் உண்டு. மத்தவங்க சொல்றதையெல்லாம் எடுத்துக்காதீங்க” என்று அனிதாவிற்கு உபதேசம் செய்தார்.

சுரேஷ் மற்றும் வேல்முருகனை இருக்கையின் முனையில் அமர வைத்த கமல், ‘உங்களை யாரெல்லாம் கார்னர் பண்றாங்க. சொல்லுங்க’ என்று ஆரம்பிக்க, கமலுக்கு நிகராக புரியாத பூடக பாஷையில் பேசும் சுரேஷ், "இவங்க எதிர்க்க இருந்தாதான் பிரச்னை… நான் பூச்சி மாதிரி மேல போயிட்டேன். மேலதான் இருக்கேன்” என்று பதில் தர "அவர் Male person” என்று ‘கிரேஸி’தனமாக அப்போது க்ராஸ் செய்தார் ரம்யா.

கமல் அதைப் பற்றி விசாரிக்க முனைய "அதுவொரு மொக்கை ஜோக்தான் சார்... விட்டுடுங்க." என்று ரம்யா சிணுங்கியதும் "பரவால்ல... நான் அதை சீரியஸாக எடுத்துக்கலை" என்று கமல் சொன்னதும் ஜாலியான காட்சிகள்.

ரம்யா சொன்ன ‘மொக்கை ஜோக்'கிற்கு பதிலாக பதினெட்டாம் நூற்றாண்டு காலத்து ‘என்சைகிளோபிடியா’ ஜோக்கை சொல்லி பார்வையாளர்களையும் சேர்த்து பழிவாங்கினார் கமல்.

‘டிப்ளமட்டிக்–ன்ற ஒத்த வார்த்தையை வெச்சு இந்த பாலாஜி பய... மன்னிச்சுக்கங்க... பாலாஜி சார்... என்னைப் படுத்தி எடுக்கறாரு” என்று வெள்ளந்தியாக நெளிந்து கொண்டிருந்தார் வேல்முருகன். "முந்நூறு கிலோ மீட்டர் தாண்டினாலே உடல்மொழி, கலாசாரம் மாறுகிற பிரதேசம் நம்முடையது. வெள்ளைக்காரன்லாம் நம்மைப் பார்த்து குழம்பிடுவான். சூழலுக்கு ஏற்ப உங்களை மாத்திக்கங்க... Be a roman in rome" என்பது மாதிரியான அறிவுரையை... மன்னிக்க tip-ஐ வேல்முருகனுக்கு தந்தார் கமல்.

பிக்பாஸ் - நாள் 21

"என்னை கார்னர் பண்றாங்க... யுவர் ஆனர்" வரிசையில் அடுத்து பேச வந்தவர் அனிதா. அவர் பேசி முடித்தபோது கடிகாரம் தன்னைத்தானே ஒரு முறை சுற்றி வந்து விட்டது. ".நான் சும்மா இருந்தா கூட அதை ஒரு குத்தமா சொல்றாங்க ஐயா” என்ற அனிதாவிற்கு ‘ரம்யாவைப் பார்த்து கத்துக்கங்க... ஒரு பக்கம் பொம்மையைக் காட்டிட்டு இன்னொரு பக்கம் ஊசி போடற குழந்தை டாக்டா் அவங்க" என்று ரம்யாவின் பக்கம் வண்டியைத் திருப்பினார் கமல். 'இதையெல்லாம் அனுபவிக்கறதா... வேண்டாமா’ என்பது மாதிரியே உள்ளூற திகைப்புடன் சிரித்துக் கொண்டிருந்தார் ரம்யா.

“என்னை அட்வைஸ் ஆரின்னு பிராண்டிங் பண்ணிட்டாங்க சார்" என்று ஆரி மறுபடியும் ஆரம்பித்து அவரும் அரை மணி நேரத்திற்கு மேல் பேசினார். “நீங்க உங்க வேலையை நேர்மையா செஞ்சிட்டே வாங்க. உலகம் கவனிக்கும்” என்று டிப் கொடுக்க ஆரம்பித்த கமல் அதற்காக காந்தியையெல்லாம் அநாவசியமாக இழுத்தார்.

“ரம்யாவையும் ஷிவானியையும் பாருங்க. சைலன்ட்டா சிரிச்சிக்கிட்டே வரிசைல முன்னாடி போயிட்டாங்க. அதையும் நீங்கதான் கொடுத்தீங்க” என்று கமல் சொன்ன போது ‘அதானே... கரெக்ட்டு’ என்கிற மாதிரி திகைத்து யோசித்தார் ஆரி.
இந்த ரகசியத்தைப் புரிந்து கொள்வது எளிது. இரு குழுக்கள் சண்டை போடும்போது அதன் காரணமாகவே குழுவின் வெளியே உள்ளவர்களுக்கு சில அனுகூலங்கள் ஏற்பட்டு விடும். 'எதிர் டீம்ல இருக்கறவன் வந்து விடக்கூடாது’ என்பதற்காகவே யாருக்கும் பிரச்னை ஏற்படுத்தாதவர்களை முன்னேற்றி அனுப்புவார்கள். அந்த வகையில்தான் ஷிவானி போன்றவர்கள் மேலே வருவது. ஆனால் இது தற்காலிகம்தான். போட்டி இன்னமும் கடுமையாகும் போது உதிரிகள் எளிதில் உதிர்ந்து விடுவார்கள்.
பிக்பாஸ் - நாள் 21

“ஹலோ பாஸூ... இங்க யாரும் தட்டுல வெச்சி எதையும் கொடுக்க மாட்டாங்க. நாமதான் அடிச்சி புடுங்கணும். ‘Best performer’-ன்ற தகுதியை நான் அப்படித்தான் வாங்கினேன். பார்த்தீங்கள்ல.. என்னை மாதிரி நீங்களும் லஞ்ச் டைம்ல ஒரு அலப்பறையைப் பண்ணியிருந்தா பசங்க அடங்கியிருப்பாங்க.. ஆக்சுவலி ‘அட்வைஸ் ஆரி’ன்ற பிராண்டை உருவாக்கினதே நான்தான்” என்று பிறகு ஆரியை தனியாக வாக்கிங் அழைத்துச் சென்ற பாலா சிரித்துக் கொண்டே சொல்ல, “டேய் நீ விஷமக்காரன்டா... ஆனா உன்னோட நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. உன்கிட்ட தோக்கறதுல கூட ஒரு சுகம் இருக்கு” என்று மகிழ்ந்து போனார் ஆரி. வெளிப்படையாக போர் செய்வது ஒரு தனியான குணம். அது இருப்பதால்தான் சிலர் பாலாவை ரசிக்கிறார்கள்.

“என் அன்பு குறையாது” என்று சபையில் சிரித்துக் கொண்டே முன்பு சொன்ன அர்ச்சனா... இப்போதோ... “நாங்க நாலு பேர். எங்களுக்குப் பயமே இல்லை... அவங்கதான் இனி எனக்கு உலகம். மத்தவங்க எக்கேடு கெட்டுப் போனாலும் கவலையில்லை” என்று முகத்தை வீரப்பா மாதிரி வைத்துக் கொண்டு சொன்னார். அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்த முதல் நாளில் "‘அனிதா என்னை எப்படி குறுகுறு’வென்று பார்க்கிறார் தெரியுமா?” என்று சொல்லி தந்த எக்ஸ்பிரஷன் இப்போது அர்ச்சனாவிற்கு மிகச் சரியாக பொருந்திப் போனது.

‘உள்ளே போகலாமா... ஓகேவா...' என்று பார்வையாளர்களிடம் மீண்டும் மீண்டும் அனுமதி கேட்டுக் கொண்டு அகம் டிவி வழியாக உள்ளே வந்தார் கமல். (எனக்கொரு சந்தேகம்... யாராவது ஒருவர். 'இருங்க சார். போகாதீங்க'-ன்னு சொல்லி விட்டால் கமல் என்ன செய்வார்?!).

“வந்த முதல் நாள்ல இருந்தே என்னை வெச்சு செய்யறாங்க சார்” என்று அடுத்ததாக தன் புகார் பட்டியலை முன்வைத்தார் சனம். ‘நீ எங்க இருக்கீங்கன்றதை நீங்களா முதலில் ஒத்துகிட்டாதான் உண்டு. மத்தபடி மற்றவங்களை பத்தி கவலைப்படாதீங்க” என்று சனத்திற்கு வழிகாட்டினார் கமல். (இதையேதான் ‘விஸ்வாசத்தில்’ ‘தல’யும் பஞ்ச் டயலாக்காக சொன்னார்... ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்...”)

பிக்பாஸ் - நாள் 21
ஆரியின் நேர்மையையும் சமூகவிழிப்புணர்வு செயல்பாட்டையும் மீண்டும் பாராட்டிய கமல் சடக்கென்று போகிற போக்கில், "அந்த நேர்மைக்குத்தான் உங்களுக்கு ஹமாம் சோப்பை மக்கள் பரிசா தந்திருக்காங்க. நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்” என்று சொல்ல மகிழ்ச்சியில் திகைத்துப் போனார் ஆரி.

‘நாடா... காடா’ டாஸ்க் நடக்கும் போதே இந்தக் கட்டுரைத் தொடரில் இதைக் குறிப்பிட வேண்டுமென்று நினைத்திருந்தேன். அந்த ‘அரசியலை’ இன்று கமலே தெளிவுப்படுத்தி விட்டது சிறப்பு.

‘வெள்ளையாக இருப்பவர்கள் நம்மை ஆள்பவர்கள், கறுப்பாக இருப்பவர்கள் அடிமைகள், அரக்கர்கள்’ என்று இந்த விளையாட்டில் வெளிப்பட்ட அடையாளத்திற்குப் பின்னால் பெரும் அரசியல் உள்ளது. மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றை அவரவர்களின் செளகரியத்திற்கு ஏற்ப திரித்துக் கொண்ட பிழைகள் இவை. ‘வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பது போன்ற தவறான முன்உதாரணங்கள்.

“மிடில் ஈஸ்ட்ல அரசரா இருக்கறவர் பேரு ‘அசுர்.’.. வில்லன் பேரைப் பார்த்தா ‘தேவ்’... Devil –ன்ற வார்த்தைக்கு அதுதான் வேர்ச்சொல்-ன்னு சொல்றாங்க" என்று ‘அசுரர்களின்’ அரசியலை கமல் தெளிவுப்படுத்தினாலும் அடுத்த டாஸ்க்கின் போது புறவடிவில் அவையேதான் மீண்டும் வெளிப்பட்டன.

அதாவது ‘கிரீடம்’ தரிப்பவர்கள். நல்லவர்கள். ‘கொம்பு’ வைத்திருப்பவர்கள் கெட்டவர்கள் என்கிற புற அடையாள அரசியலை பிக்பாஸ் டீம் மீண்டும் வழிமொழிந்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களுக்கு கிரீடத்தையும், பிடிக்காத குணங்களை கொண்டிருப்பவர்களுக்கு கொம்பையும் சூட்ட வேண்டும் என்பதுதான் அடுத்த டாஸ்க்.
பிக்பாஸ் - நாள் 21

“மக்கள் சாப்பிடும் போது பாலா வந்து ஏதோ பேசணும்னாரு.. எனக்கு பயமாயிடுச்சு சார். சோறு உங்க இறங்கலை" என்று பாலா மீது வேல்முருகன் சொன்ன காரணம் மிகையாக இருந்தது. "கேப்டனிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் பேசினேன். அந்தச் சமயத்துலதான் எல்லோரும் ஒண்ணா இருப்பாங்க –ன்றதுதான் காரணம்” என்று இதற்காக விளக்கம் கொடுத்தார் பாலா. (அந்தக் ‘குழந்தை’ புகாரை விட்டுடுங்க பிரதர்... சலிப்பா இருக்கு...)

“ஆக... பாலா என்பவர் மலர் போன்ற இதயம் படைத்தவர்... இல்லையா… என்ற கமல் வாய் தவறி சொல்வது போன்ற பாவனையுடன் ‘வாடாமலர்’ என்று சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டு ‘வாடா’ன்னு மரியாதையில்லாம சொல்லிட்டேன்னு நெனக்காதீங்க” என்று பாலாஜியை குத்தியது சிறப்பான காட்சி.

இந்த டாஸ்க்கில் ஷிவானிக்கும் அனிதாவிற்கும் நிகழ்ந்த மோதல் சுவாரஸ்யமானது. “ஏதோ ஒரு முறை ஷிவானி பெயரை நான் சொல்லிட்டேன் என்பதற்காக ஒவ்வொரு முறையும் என் பெயரை அவர் குறிப்பிடுகிறார்" என்று அனிதா சிணுங்க... ‘ஹலோ... ஊரே என்னை கூப்பிட்டு கூப்பிட்டு மறுபடி மறுபடி அடிச்சது” என்று அடிபட்ட ‘கைப்புள்ள’யாக பதிலளிக்க ஆரம்பித்த ஷிவானி, “அதுக்கெல்லாம் பழிவாங்கணும்னா முடியுமா... அனிதா பேசறது பல சமயங்கள்ல எரிச்சலை ஏற்படுத்துது. அதான் இப்பச் சொன்னேன். இதையும் பழிவாங்கறதா அவங்க எடுத்துக்கிட்டா. நான் ஒண்ணும் பண்ண முடியாது” என்று முகத்தில் அடிப்பது போல் சொல்லி விட்டுச் சென்றார் ஷிவானி. (யம்மா... நீங்க பேசாமயே இருக்கலாம் போல!)

(போச்சு... அனிதா இந்த விவகாரத்தை வைத்து இன்னமும் எட்டு எபிஸோடுக்கு புலம்புவாரே!)

“சின்னப் பையன். அதான் உனக்கு சான்ஸ் கொடுத்தாங்க –ன்ற மாதிரி சனம் சொன்னது எனக்குப் பிடிக்கலை. அதனால அவங்களுக்கு கொம்பு தர்றேன்” என்று நேர்மையான காரணத்தைச் சொன்னார் ஆஜித். இவர் சொல்வதும் பாலாஜி சொல்வதும் ஒன்றுதான். "என்னைக் குழந்தையா நடத்தாதீங்க”.

பிக்பாஸ் - நாள் 21
Love and hate உறவிற்கு சரியான உதாரணமாக சனத்தின் செயலைச் சொல்லலாம். கிரீடம், கொம்பு ஆகிய இரண்டையுமே பாலாவிற்கு பரிசளித்தார். "இனிமே என்கிட்ட சண்டை போட மாட்டேன்னு சொல்லியிருக்கார். பார்க்கலாம்” என்றார். (அடப்பாவிங்களா... இப்படில்லாம் உங்களுக்குள் காம்பரமைஸ் பண்ணீங்கன்னா... எப்படி நிகழ்ச்சியை ஓட்டறது. பிக்பாஸ் மைண்ட் வாய்ஸ் இது).

ரியோ, அர்ச்சனா, சோம். நிஷா போன்றவர்கள் அவர்களின் குழுக்களுக்குள் பாசத்தைப் பொழிந்து கொண்டார்கள். எதிர் தரப்பினருக்கு கொம்பு அணிவித்து மகிழ்ந்தார்கள். மீண்டும் தன் ‘அக்கா’தனத்தை வெளிப்படுத்திய நிஷா, “போடா. வாடா –ன்னு கூப்பிடக்கூடாதுன்னு சொன்னதுக்காகவே கடைசி வரைக்கும் உன்னை குத்துவேன்டா” என்று பாலாவிற்கு கொம்பு அணிவித்து விட்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டுச் சென்றது சுவாரஸ்யமான காட்சி.

(கட்டியணைப்பது, கன்னத்தில் செல்லமாக முத்தமிடுவது போன்றதெல்லாம் மிடில் கிளாஸ் கலாசாரத்தில் அதிகம் இல்லாத ஒன்று. வீட்டின் அறைக்குள் கூட அதிகம் செய்ய மாட்டோம். நாம் அன்பை வெளிப்படுத்தும் விதமே வேறு. (எரும... சோறு ரெடியாயிடுச்சு. எழுந்து கொட்டிக்க வா). ஆனால் அத்தனை கேமராக்கள் உள்ள பிக்பாஸ் வீட்டில் மக்கள் இதை சகஜமாக செய்து கொள்வது சற்று ஆச்சர்யமாக இருக்கிறது. மேலை நாட்டு கலாசாரத்தை நகலெடுக்க முயல்கிறார்களோ?!)

“நீங்க பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும்” என்று சத்ரியன் திரைப்படத்தையொட்டி சுரேஷிற்கு காரணம் சொல்லப்பட்ட போது, "எந்த பன்னீர்செல்வம்னு கரெக்ட்டா சொல்லிடுங்க. எனக்கு குழம்பிடும்” என்பது போல் தமிழ்நாட்டு பாலிட்டிக்ஸ் பக்கம் வண்டியை திருப்பியது கமலின் இன்றைய சுவாரஸ்யமான குறும்புகளுள் ஒன்று.

‘அவன் இவன்...’ என்று பாலாவைப் பற்றி கேப்ரியல்லா. இயல்பாக பேசிக் கொண்டிருக்கும் போது ‘சொல்லிடுவார்’ன்னு சொல்லுங்க கமல் இடைமறித்த போது சபை வெடித்து சிரித்தது. (இனிமேல் பாலாஜியை ‘அவர்ர்ர்... இவர்ர்ர்...'ன்னு சொல்லியே சாகடிக்கப் போறாங்க).

பிக்பாஸ் - நாள் 21

சுரேஷூடம் அதிகம் பழகுவதாலோ. என்னமோ அவரின் குசும்புக் குணம் பாலாவிற்குள்ளும் பரவி விட்டது போல. ரியோவிற்கு கீரிடத்தை அணிவித்த பாலா, அதற்கு சொன்ன காரணம் சர்காஸத்தின் உச்சம்.

“அவரை மாதிரி என்னால நாலு பேரை சம்பாதிக்க முடியல. 'எங்க ஒருத்தர் மேல கைவெச்சா கூட நாங்க நாலு பேரும் சேர்ந்து தாக்குவோம்’ன்ற மாதிரியான டீமை ரியோ சம்பாதிச்சு வெச்சிருக்காரு... அந்தத் திறமைக்காகவே இந்த க்ரீடம்” என்று நையாண்டியாக சொல்ல, "குத்தாம வைங்க. அதை முள்கிரீடமாவே மாத்திட்டீங்க” என்று கமலும் கூடுதல் நகைச்சுவையை சேர்த்தார். தன் சிஷ்யனின் சாமர்த்தியமான பேச்சைக் கண்டு குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார் சுரேஷ்.

இந்த வைபவம் முடிந்ததும் எவிக்ஷனுக்கான நேரம் வந்தது. அதுவரை காப்பாற்றப்பட்டவர்கள் போக மீதியிருப்பவர்கள் அனிதா, சுரேஷ் மற்றும் ஆஜித்.

“உங்க ஜோசியம் இப்ப என்ன சொல்லுது?” என்று ஆஜித்தின் வாயைக் கிளற ஆரம்பித்தார் கமல். "இது வரைக்கும் முள் சுரேஷ் பக்கம்தான் இருந்தது... ஆனா இப்ப திடீர்னு என் பக்கம் திரும்பிடுச்சு” என்று தயக்கத்துடன் சொன்னார் ஆஜித்.

“உங்க ஜோசியம் பலிச்சுடுச்சு” என்றபடி ஆஜித்திற்கான எவிக்ஷன் கார்டை காட்டினார் கமல். “நீங்க எவிக்ஷன் பாஸை யூஸ் பண்றீங்களா?” என்று கேட்டபோது சிறிது தயக்கத்திற்குப் பிறகு அதை ஆமோதித்தார் ஆஜித். அந்தத் துருப்புச் சீட்டை வைத்துக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.

ஒரு வகையில் இது ஆஜித்திற்கும் நிம்மதி. மற்றவர்களுக்கும் நிம்மதி. ஏனெனில் இந்த துருப்புச்சீட்டுதான் மற்றவர்களின் கண்களை உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆஜித்திற்கும் சங்கடமாக இருந்தது. இனி இரண்டு தரப்புமே அடித்து விளையாடலாம்.
பிக்பாஸ் - நாள் 21

ஆனால், இது ஆஜித்திற்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியும் கூட. இப்போது ஃப்ரீ பாஸை வைத்து தற்காத்துக் கொண்டாலும் மக்கள் அளித்த வாக்கின் படி தோற்றுப் போயிருக்கிறார் என்பதுதான் அவருக்கான கசப்பான உண்மை. இனிதான் அவர் களத்தில் துணிச்சலாக இறங்கி விளையாட வேண்டும்.

எனில் மீதமிருப்பவர்கள் சுரேஷ் மற்றும் அனிதா. இதை வைத்து சற்று நேரத்தை இழுத்தார் கமல். இது வேண்டாத வேலை. ஏனெனில் வரிசையின் கடைசியில் இருப்பவர்தான் வெளியேற வேண்டும். இந்த ரகசியம் ஆஜித்தின் மூலமாக முன்பே தெரிந்து விட்டது. எனில் அனிதாவும் சுரேஷூம் அதற்கும் முன்னால் இருக்கிறார்கள் என்றுதான் பொருள்.

ஆக, இருவருமே காப்பாற்றப்பட்ட விஷயம் அதிகாரபூர்வமாக பிறகு தெரிவிக்கப்பட்டது.

அடுத்ததாக வீட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம். ‘சரி... இதை அறிவுபூர்வமான தேர்தலாக மாற்றுவோம்’ என்று சற்று பில்டப் தந்த கமல், அடுத்த கணமே "‘சா பூ த்ரீ’ போட்டு தேர்ந்தெடுக்கலாமா?’ என்று குழந்தை ரேஞ்சுக்கு இறங்கினார். இந்த விளையாட்டு சிறிது நேரம் தொடர்ந்தது.

"'தலைவர்களை இப்படியெல்லாம் விளையாட்டுத்தனமாக தேர்ந்தெடுக்கக்கூடாது என்கிற செய்தியை உலகிற்கு தெரிவிக்கவே யாம் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினோம்" என்பதுதான் கமல் சொல்ல விரும்பிய அரசியல் குறும்பு. மறுபடியும் தமிழ்நாட்டு பாலிட்டிக்ஸ்.

பிறகு வாக்கெடுப்பின் மூலம் கேப்டன் தேர்தல் நடந்தது. வேட்பாளர்களாக இருந்தவர்கள் பாலாஜி, சனம் மற்றும் அர்ச்சனா.

பிக்பாஸ் - நாள் 21

‘சங்கம் முக்கியமா... சோறு முக்கியமா' என்று யோசித்த மக்கள் 'சோறுதான் முக்கியம்’ என்று புத்திசாலித்தனமாக யோசித்து அர்ச்சனாவை தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். (ரியோ குரூப் தீயா வேலை செய்யறாங்க).

கமல் விடைபெறும் போது, ஏதோ ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யப் போகிறவரைப் போல "தியேட்டர்லாம் திறந்துட்டாங்களா சார்?" என்று அதிமுக்கியமான சந்தேகத்தை எழுப்பினார் ரியோ. “அப்புறம் வேற என்ன வேணும்... சொல்லுங்க..?” என்று ஆர்டர் எடுக்கவிருக்கும் ஹோட்டல் சர்வர் மாதிரி கமல் குறும்பு செய்த பின் "அய்... நாளைக்கு எனக்கு லீவு.. ஜாலி... யப்பா... சாமி. கால் வலிக்குது. நடடா தம்பி” என்றபடி விடைபெற்றுச் சென்றார்.

திங்கள் அன்று நிகழ்ச்சி நான்கு மணி நேரம் நடைபெறுமாம். எனவே மாலை ஆறரை மணிக்கே தொடங்கி விடுமாம்.

“நேயர்களே.. ஆறரை மணிக்கு இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.. விஜயதசமியைக் கொண்டாடுங்கள்” (அந்த ‘உரத்த குரல்’ மாடுலேஷன்ல படிச்சுக்கங்க).

பின்குறிப்பு:

இந்த வாரம் கமல் அறிமுகம் செய்தது ஒரு தமிழ் புத்தகம். ‘புயலிலே ஒரு தோணி’ என்பது அதன் தலைப்பு. ப.சிங்காரம் எழுதியது. ‘அமெரிக்க எழுத்தாளர் ‘ஹெமிங்வே’க்கு நிகரான எழுத்து’ என்று சிங்காரத்தின் படைப்புலகை மதிப்பிட்டு மகிழ்ந்தார் கமல்.

புயலிலே ஒரு தோணி

இரண்டாம் உலகப் போரின் சூழல் இந்தியாவையும், தமிழகத்தையும் மறைமுகமாக நிறைய பாதித்தது என்றாலும் அது பற்றிய இலக்கியப் படைப்புகள் இங்கு நிறைய பதிவாகவில்லை. அந்தக் குறையை ப.சிங்காரத்தின் நாவல் ஈடு செய்திருக்கிறது. பொருள் ஈட்டுவதற்காக நிறைய தமிழர்கள் இந்தோனேசியா, மலேசியா போன்ற பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள். போரின் சூழல் அவர்களை எவ்வாறெல்லாம் பாதித்தது என்பது இந்தப் படைப்பு மிக இயல்பான மொழியில் விவரிக்கிறது.

ப.சிங்காரம் எழுதிய இன்னொரு நாவல் ‘கடலுக்கு அப்பால்'. இவரின் இந்த இரு புதினங்களுமே முக்கியமானவை. தமிழ் இலக்கியச் சூழலில் நெடுங்காலமாக அறியப்படாத எழுத்தாளராகவே சிங்காரம் இருந்தார். பிறகு சில எழுத்தாளர்களின் தேடல்களால் கண்டெடுக்கப்பட்டார். இப்படிப்பட்டதொரு அரிய ஆளுமையை வெகுசன வெளியில் கமல் அறிமுகப்படுத்தியது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/aajeedh-uses-eviction-free-pass-bigg-boss-tamil-season-4-day-21-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக