சட்டசபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கட்சிகளுக்கிடையே மல்லுக்கட்டு தொடங்கிவிட்டது. சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருந்த தி.மு.க, அ.தி.மு.க-வினர் போஸ்டர் சண்டையைத் தொடங்கியுள்ளனர். `தன்னம்பிக்கை மிக்க தலைமையா..? துண்டுச்சீட்டு தலைமையா..?’, `உழைப்பை நம்பலாமா..? பிறப்பை நம்பலாமா..?’ என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து, கோவை மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
Also Read: ``ஆட்சியைப் பிடிப்போமா, தலைவரே?!" - ஸ்டாலினைத் திகைக்கவைத்த தி.மு.க நிர்வாகி
அ.தி.மு.க-வின் இந்த போஸ்டர் அரசியலால் கடுப்பான, தி.மு.க-வினர் அந்த போஸ்டர்களைத் தேடித்தேடி கிழித்தனர். இதை போட்டோ எடுத்து, அ.தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் தி.மு.க-வினரை, `கழுதை’ என கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி போஸ்டர்களை கிழித்தவர்களை கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க-வினர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதைத்தொடர்ந்து, தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் 7 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். காவல்நிலையங்களில் குவிந்த தி.மு.க-வினர், ``கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும், போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பினர்.
கைது செய்யப்பட்ட தி.மு.க-வினர் காவல்நிலைய பெயிலில் ரிலீஸாகிவிட்டனர். இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக, கோவையில் நாளை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்த தி.மு.க-வினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கழகத்தை அவதூறுசெய்யும் நோக்கில் அடிமைகள் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்த கோவை இளைஞரணியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோடி காலை பிடிப்பவர் எடப்பாடி. அவரின் காலை தொழுபவர் வேலுமணி.
அவர் சொல்வதைக் கேட்டு கரைவேட்டி கட்டாத அ.தி.மு.க-வாக செயல்படும் கோவை காவல்துறையை கண்டிக்கிறோம்” என்று விமர்சித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக, சமூகவலைதளங்களில் தி.மு.க, அ.தி.மு.க- வினர் பரஸ்பரம் விமர்சித்து வருகின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/coimbatore-dmk-admk-poster-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக