Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

பாட்டில்கள், குப்பைகள்... விவசாயிகளை வதைக்கும் டாஸ்மாக்!

காலை எழுந்தவுடன் வாட்ஸ் அப் விவசாயக் குழுவில் ஒரு செய்தி பகிரப்பட்டிருந்தது. அதில்...

``இன்னும் சில நாள்களில் வட கிழக்குப் பருவமழை தொடங்க இருக்கிறது. இதனால் தெரியப்படுத்துவது என்னவென்றால் வயல் வெளிகளில், வயல் சார்ந்த சாலை ஓரங்களில் நீங்கள் தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை போதை உற்சாகத்தில் நீங்கள் வயல்வெளிகளில், தோப்புகளில் எறிந்து உடைத்துவிட்டுப் போய்விடுகிறீர்கள். வரும் நாள்களில் நாங்கள் விவசாயிகள் வயலில் தொழி அடிக்கும்போது பாட்டில்கள் உடைந்து, நாற்று நடும்போதும், உரம் மற்றும் மருந்து வைக்கும்போதும் கால்களில் குத்திவிடுகிறது. பீங்கான் குத்திய புண் சீக்கிரத்தில் ஆறாது.

குப்பைகள்

பொதுவாக வயல் வேலைக்கு முன்பு சாலை ஓரத்தில் உள்ள பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து விட்டுத்தான் வயலில் வேலைகளைப் பார்ப்போம். ஆனால் இந்தத் தலை முறை குடித்து விட்டுப் பாட்டில்களை உடைத்து வயல்வெளிகளில், கால்வாய்களில், கண்மாய்களில் போட்டு விட்டுச் செல்கின்றனர். அதுமட்டும் இல்லை, பிளாஸ்டிக் கவர்களில் நீங்கள் கொண்டு வந்து தின்றுவிட்டு எறியும் பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் டம்ளர் அனைத்தும் என்னுடைய வயல் வெளிகளில் சிதறிக் கிடக்கின்றன. வரப்பு வயல்களை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ரசாயனத்திலிருந்து மீட்டு வருகிறோம். ஆனால், நீங்கள் செய்யும் இந்தச் செயல் ஒரு விவசாயியைக் கண்ணீர் வடிக்கச் செய்கிறது. தயவுசெய்து மது அருந்தும்போது உங்கள் வீட்டின் உள் இருந்து மது அருந்தவும். கழிவுப் பொருள்களைப் போடுவதற்கு எனது வயல்வெளிகள் ஒன்றும் குப்பை மேடு இல்லை. எங்கள் வயல் வரப்புகளில் மது அருந்த வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப்படித்து முடிக்கும்போது எவ்வளவு மனவலி இருந்தால் ஒரு விவசாயி இவ்வாறு எழுதியிருப்பார் எனத் தோன்றியது. இதைப் பற்றிச் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரைச் சேர்ந்த `மரம்' மாசிலாமணி எனும் விவசாயி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதுபற்றி அவரிடம் இதுபற்றிப் பேசினோம்.

`மரம்' மாசிலாமணி

``ஒரு காலத்தில் ஆறுகள் வளமானதாக இருந்தன. விவசாயமும் செய்ய எளிதாக இருந்தது. அப்போது மாநிலம் முழுவதும் விவசாயமும் தொழில்துறையும் சிறந்து விளங்கியதற்குப் பல சான்றுகள் உண்டு. தற்போது பல ஆறுகளும் வற்றி, பருவமழையும் பொய்த்துப் போய் விட்டது. இதனால் வறட்சியின் பிடியில் விவசாயிகள் சிக்கித் தவித்து வருகிறார்கள். இந்த இன்னல்களுக்கு இடையேதான், கிடைக்கும் தண்ணீரை வைத்து விவசாயிகள் விவசாயத்தைச் செய்ய வேண்டியுள்ளது. ஏற்கெனவே ரசாயனங்கள் போட்டு நிலங்கள் மலடாகிவிட்டன. அதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். இந்த நிலையில் வயல்கள் முழுவதும் பாட்டில்கள் போடப்படுகின்றன. ஒரு முறை டிராக்டர்கள் நிலத்தில் இறங்கி உழும்போது, பாட்டில்கள் உடைந்து சிதறிவிடுகின்றன. அதற்குப் பின்னர் நிலத்தில் நாங்களும், எங்கள் குடும்பமும்தான் இறங்கி வேலை செய்ய வேண்டியுள்ளது. எங்களைப் பொறுத்தவரைக்கும் நிலம்தான் சாமி, கடவுள் எல்லாமே... அதனால் வெறும் கால்களோடுதான் வயலில் இறங்கி நாற்று நடுவதிலிருந்து அறுவடை வரை செய்து பணிகளைச் செய்து வருகிறோம். முன்பு நிலத்தில் இறைக்கும் எருவுக்குள் சின்னச் சின்ன பீங்கான்கள் இருக்கும். ஆனால், இப்போது நிலமெங்கும் மதுபாட்டில்கள் சிதறி எங்கள் கால்களை அடிக்கடி பதம் பார்க்கிறது. ஒருமுறை காயப்பட்டால் மீண்டும் அந்தக் காலில் வயலில் இறங்கக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகும்.

இன்னும் சிலர் டிராக்டர் விட்டுப் பாட்டிலை உடைக்க ஏன் சிரமப்படுகிறீர்கள். நாங்களே உடைத்துவிடுகிறோம் என நினைத்து வயல்களில் பாட்டில்களை உடைத்துவிட்டுச் செல்கின்றனர். காலையில் வயல் வேலைக்கு வரும் பெண்கள் மதுபாட்டில்களைப் பெருக்கி ஓரமாகப் போட்டுவிட்டு வேலையைப் பார்க்கும் அவலத்தை எங்கே போய்ச் சொல்வது எனத் தெரியவில்லை. இதுபோக இன்று கிராமங்களில் பெரும்பாலான மதுக்கடைகள் வயல் வரப்புகளில்தான் திறக்கப்பட்டிருக்கின்றன. நெடுஞ்சாலை ஓரமாக இருந்த மதுக்கடைகள் இப்போது சிறிது தூரம் தள்ளி வயலுக்குள் வந்துவிட்டன. இது ஒரு பிரச்னையா என்று பலரும் நினைக்கின்றனர். விவசாயியான எங்களுக்கு எப்போதுமே இது சிக்கல்தான். ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டு வருபவர், நான்கைந்து பிளாஸ்டிக் கவர்களில் தின்பண்டங்களை வாங்கி வருகிறார். அவற்றையும் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அவை எங்கள் கிணறுகளுக்குள் விழுந்து கிணறே குப்பையாக மாறிவிடுகிறது.

Farmer

விவசாயம் செய்யும்போது தம் வீட்டுப் பெண்கள் மதுப் பாட்டில்களை அப்புறப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது விவசாயி நெஞ்சம் என்ன பாடுபடும் என்பதைக் கொஞ்சம் உணருங்கள். அதற்காக உங்களை மதுகுடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களுக்கென்று ஒரு இடம் இருக்கும். அங்கே போய் நீங்கள் குடித்துக் கொள்ளுங்கள். உங்கள் நிலத்திலோ, வீட்டிலோ மூன்றாவது நபர் மது குடித்துவிட்டு பாட்டிலைப் போட்டுவிட்டுச் சென்றால், அதை உங்கள் வீட்டுப் பெண்மணிகள் பார்க்க நேர்ந்தால் உங்களுக்கு எப்படியிருக்குமோ அப்படித்தான் விவசாயியான எங்களுக்கும் இருக்கும். இதுபோக மதுக்கடைகளை படிப்படியாகக் குறைக்கிறேன் என அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால், நிலைமை எதுவும் மாறவில்லை. ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர். கால்வாயில் கை, கால்களைக் கழுவும்போதும் பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது. இதனால் ஒரு விவசாயியாக உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், இனி மதுபாட்டில்களை யாரும் வயலில் போட வேண்டாம்" என்றார், `மரம்' மாசிலாமணி.

மதுக்கடைகளை நடத்தும் அரசும், இப்படி பொறுப்பற்று செயல்படும் மனிதர்களும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.



source https://www.vikatan.com/news/agriculture/how-farmers-suffering-from-village-tasmac-shops-and-tipplers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக