திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் அருகே உள்ள சு.கம்பப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாபூப்கான் - தில்ஷாத் தம்பதியினர். மாபூப்கான் அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநராக பணி செய்து வருகிறாராம். இந்தத் தம்பதிக்கு மொத்தம் 5 பெண் பிள்ளைகளாம்.
தில்ஷாத், நேற்று அதே பகுதியில் கூலி வேலைக்கு சென்றிருந்தாராம். அப்போது, தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை குளிப்பாட்டுவதற்காக, மாபூப்கான் - தில்ஷாத் தம்பதியினரின் ஐந்து மகள்களில் மூன்று மகள்கள் ஒன்றாக இணைந்து அருகிலுள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு ஆடுகளை குளிப்பாட்டும்போது, இளைய மகள் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியிருக்கிறார். அதைக் கண்ட மற்ற சிறுமிகள் இருவரும் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அந்த முயற்சியில், துரதிஷ்டவசமாக அவர்களும் சேற்றில் சிக்கி மூழ்கிப் போனார்கள். இந்தச் சம்பவத்தில் ஆடுகளை குளிப்பாட்டச் சென்ற சிறுமிகள் மூவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Also Read: விழுப்புரம்: குட்டையில் மூழ்கி அக்கா, தங்கை உட்பட 3 சிறுமிகள் உயிரிழப்பு! - செஞ்சி அருகே சோகம்
அதையடுத்து, சிறுமிகளை காணவில்லை என்று பதறிப்போன குடும்பத்தினர், கிராம மக்களின் உதவியுடன் ஏரியில் இறங்கித் தேடி சேற்றில் சிக்கி இறந்து போன மூவரின் உடல்களை மீட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வெறையூர் காவல்துறையினர், 3 சிறுமிகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
Also Read: பட்டுக்கோட்டை: ஆற்றுக்குள் கிடந்த மின்கம்பி - மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/3-children-died-in-a-lake-near-thiruvannamalai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக