Ad

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

தேனி: ஆர்டிஐ தகவல் தரமறுத்த அதிகாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! - நடந்தது என்ன?

தேனி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கடந்த 2014-இல் ஆதிதிராவிடர்களின் நலப்பணிகளுக்கும் திட்டப்பணிகளுக்கும் பயன்படுத்துவதற்கான நிதி விவரம், நிதி கையிருப்பு, வங்கி கணக்கு பராமரிப்பு தொடர்பான தகவல்களை பெற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் முயன்றுள்ளார்.

குறிப்பாக தென்கரை, வடகரை ஜெயமங்கலம், தேவதானப்பட்டி காவல் நிலையங்களில் 2014-இல் முதல் எத்தனை எஸ்சி, எஸ்டி வழக்குகளுக்கு மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி அலுவலகம் வாயிலாக வழங்கப்பட்டுள்ள நிவாரணம், வழக்குகள் முடித்து வைக்கப்பட்ட நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த வழக்குகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை குறித்த விவரங்களை பெற தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களும் விசாரணைக்கு வந்தபோது, பொதுத்தகவல் அலுவலர் பங்கேற்கவில்லை.

ஆர்.டி.ஐ

மனுதாரரின் விண்ணப்பத்திற்கு முழுமையான தகவல் வழங்காத காரணத்தால், சம்பந்தப்பட்ட தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக பொதுத்தகவல் அலுவலருக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 20(1) கீழ் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 20(2) ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப் பரிந்துரைக்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எழுத்துப் பூர்வமான விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இருப்பினும் ஆதிதிராவிடர் நலப்பணிகள் அலுவலர் உரிய விளக்கத்தை அளிக்கவில்லை என்பதால், தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகக் கண்காணிப்பாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் உத்தரவிட்டார்.

மேலும், இதில் 10 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் இருந்தும், மீதத் தொகையான 15 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் நேர்முக உதவியாளரிடம் இருந்தும் வசூலிக்க உத்தரவிட்டு, மொத்தத் தொகையை 30 நாள்களுக்குள் அரசு கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் மனுதாரர் கோரிய தகவல்களை 10 நாள்கள் கொடுக்கவும் உத்தரவிட்டார்.

பாண்டியராஜன்

இதுகுறித்து வழக்கறிஞர் பாண்டியராஜனிடம் பேசினோம். '``காவல் நிலையங்களில் எஸ்சி, எஸ்டி தொடர்பான புகார் மனுக்கள் அளிக்கப்படுகின்றன. அவ்வாறு புகார் கொடுக்கும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழக்கை தன்மையைப் பொறுத்து குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் போது 25 சதவிகித தொகையும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் போது 50 சதவிகித தொகையும் மீத தொகை மனுதாரருக்கும் தீர்ப்பு சாதகமாக கிடைக்கும் போதும் வழங்கப்படும். இந்த நடைமுறைகள் முறையாக வழங்கப்படுவது இல்லை. இதுதொடர்பான விவரங்களைப் பெற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் முறையாக தகவல்கள் வழங்கவில்லை. இதனால் மேல்முறையீடு செய்தேன். விசாரணைக்கு ஒத்துழைக்காத அதிகாரிகளுக்கு தகவல் ஆணையர் அபராதம் விதித்துள்ளார். மேலும் நான் கோரிய தகவல்களை மீண்டும் தரமறுத்தால் உயர் நீதிமன்றத்தை நாட தயாராக உள்ளேன்'' என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/fine-against-the-officials-who-were-refused-to-give-information-in-rti

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக