Ad

திங்கள், 3 ஜனவரி, 2022

திருவெம்பாவை 20: மார்கழி உத்சவம் - சிந்தையில் சிவத்தை வைத்து வாழ்வோருக்கு எந்த சிக்கலும் வருவதில்லை!

"போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்!"

சிவன்

எங்கும் நிறைந்த எம் ஈசனே! அனைத்துக்கும் ஆதியான நின் பாத மலர்களைப் போற்றுகிறோம். அனைத்துக்கும் முடிவாகியுள்ள நின் மெல்லியத் திருவடிகளைப் போற்றுகிறோம். சகல உயிர்களையும் தோற்றுவிக்கும் நின் பொற்பாதங்களைப் போற்றுகிறோம். சகல உயிர்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்வு தரும் நின் மலரடிகளைப் போற்றுகிறோம். அதேபோல் இறுதியில் உயிர்களை உன்னுள் இணைத்துக் கொள்ளும் இணையற்ற நின் திருவடிகளைப் போற்றுகின்றோம். அயனும் மாலும் காண முடியாத நின் தாமரைப் பாதங்களைப் போற்றுகிறோம். பிறப்பற்ற நிலையைத் தரும் பொன்மலர்கள் போன்ற நின் திருவடிகளைப் போற்றுகிறோம். போற்றுதலிலேயே பல்வேறு இன்பங்களைக் காணும் உங்கள் அடியார்களாகிய நாங்கள் உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம். எனவே நீயும் விரைந்து எழுந்து வா தோழி!

Also Read: திருவெம்பாவை - 19: நீங்கள் விரும்பிய வரனை அடைய இந்த பாடலைப் பாடுங்கள்! ஈசன் அருளால் நல்லது நடக்கும்!

எப்போதும் நிலைத்திருக்கக் கூடியதும் இணையற்ற இன்பத்தை அளிக்கக் கூடியதுமான ஈசனின் திருவடிகளைத் தவிர வேறு எதுவுமே போற்றுவதற்கு உரிய பெருமை கொண்டது இல்லை என்பது இந்த பாடலின் கருத்து. பிறவா இன்பப் பெருநிலையை அளிக்கக் கூடிய ஒரே இடம் ஈசனின் திருவடி மட்டுமே. இதை செல்வத்தாலோ கல்வியாலோ அடைய முடியாது என்பதன் உருவாகமே, நான்முகனும் திருமாலும் ஈசனின் அடி-முடியைத் தேடிய புராணக் கதை. படைக்கும் நான்முகனோ காக்கும் திருமாலோ கூட அளிக்க முடியாத முக்தியை அளிப்பவர் அந்த சதாசிவம் மட்டுமே என்று இந்த பாடல் குறிக்கின்றது. எனவே வழிபாட்டுக்கு ஏற்ற இந்த மார்கழி அதிகாலையில் சிவபெருமானை மட்டுமே எண்ணி மனம் மகிழ்ந்து நீராடி வழிபட வேண்டும் என்று இந்த பாடல் குறிக்கின்றது. 20 பாடல்களால் பாவையை எழுப்பி ஈசனைப் பணியப் பாடிய மாணிக்கவாசகர், தனது ஒவ்வொரு பாடலிலும் ஈசனின் கருணையை எண்ணி எண்ணி வியக்கிறார்.

சரணாகதி

நினைக்கும்தோறும் இன்பத்தை அளிக்கும் ஈசனின் திருவடிகளைப் பணிந்து சரணாகதி அடைந்தவர்கள் எதற்குமே அஞ்ச வேண்டியதில்லை. உண்மையில் அஷ்ட திக் பாலகர்களும், நவகோள்களும் தான் ஈசனின் பக்தர்களைக் கண்டு பணிவார்கள். இதைத்தான் ஆளுடைய அரசாம் நம் திருநாவுக்கரசர் வாழ்க்கை நமக்கு எடுத்துச் சொல்கிறது. மருள் நீக்கியாராகப் பிறந்து, காலச் சூழலால் தருமசேனராக மாறி புற சமயம் புகுந்தவர், ஈசனின் திருவருளால் நாவுக்கரசராக மீண்டார். அதுமுதல் சைவத்தின் காவலராக, திருமுறைச் சிங்கமாக தென்னாடு எங்கும் உலவி, சைவத்தை வளர்த்தெடுத்தார். சைவம் மீண்ட நாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் எத்தனையோ விதங்களில் துன்புறுத்தினான். 'என்னைக் கொல்ல கூட முடியும். ஆனால் மாற்றவே முடியாது' என்று சைவத்தில் உறுதியாக நின்றவர் நாவுக்கரசர்.

கொல்ல வந்த யானை பணிந்தது. கொதித்து சுட வேண்டிய சுண்ணாம்பு நீற்றறை குளிர்ந்து நம் தாண்டக வேந்தரை இளைப்பாற்றியது. கொடுக்கப்பட்ட விஷம் அமுதமானது. கல்லைக் கட்டி நீரில் தள்ள, கல்லும் நம் தேவார முதல்வரோடு மிதந்தது. இறுதியில் மன்னன் தோற்றான். சைவம் வென்றது. உறுதி கொண்ட வீரனாக திருநாவுக்கரசர் நாடெங்கும் திரிந்து உழவாரங்கள் செய்து மக்களைத் திரட்டி சைவம் வளர்த்தார். ஆளுடைய பிள்ளையாம் சம்பந்தரால் 'அப்பரே' என்று மரியாதையோடு விளிக்கப்பட்டார். அப்பரின் உறுதியான பக்திக்கு மயங்கிய சிவம், பலமுறை அவருக்காக இறங்கி வந்து காட்சி தந்தது.

சிவன்

குவிந்து கிடந்த பொன்னும் மணியும் ஓடு எனக் கருதி ஒதுக்கித் தள்ளிய உத்தமர் நம் நாவுக்கரசர். அரம்பையர் ஆட அதைக் கண்டுகொள்ளாமல் கடமை செய்தவர் நம் அப்பர் பெருமான். இத்தனை பெருமைகளுக்கும் காரணம், அப்பர் பெருமான் ஈசனின் திருவடிகளை மட்டுமே சதம் என்று எண்ணி வாழ்ந்தததால் தான் எனலாம். படிக்காசு பெற்றது, உயிர் இழந்த அப்பூதி அடிகளின் பிள்ளையை மீட்டுக் கொடுத்தது, கயிலையில் மூழ்கி திருவையாறில் எழுந்தது, சிவலோகக் காட்சி கண்டது, திருக்கதவம் திறக்கப் பாடியது, பித்தை தெளிய வைத்தது என இவர் செய்த எத்தனையோ அற்புதங்களுக்கு காரணம் இவர் தொடர்ந்து ஜபித்த நமசிவாய மந்திரமே என்று தனது பாடல்களில் தெரிவிக்கிறார். எனவே சிந்தையில் சிவத்தை வைத்து வாழ்வோருக்கு எந்த சிக்கலும் வருவதில்லை. அவர் வாக்கு மந்திரமாகும், அவர் வாழ்வே தவமாகும் என்பதே நாவுக்கரசரின் வாழ்க்கை சொல்லும் பாடம்.

மாணிக்கவாசகர்

எனவே உறக்கம் என்ற சிற்றின்பத்தில் சிக்கிக் கொள்ளாமல் சீக்கிரமே விழித்து ஈசனைப் பணிந்து போற்றிட விரைந்து வா தோழி என்று இந்த பாடலில் குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர். எல்லையில்லாத இன்பம் அருளும் அந்த தாமரைப் பாதங்களைப் பற்றிக் கொண்டவர்களுக்கு என்றும் எங்கும் பேரின்பமே என்றும் சாட்சி சொல்கிறார்.

"ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி

பாகம் பெண் உரு ஆனாய் போற்றி

பராய்த் துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!"



source https://www.vikatan.com/spiritual/gods/margazhi-utsavam-day-20-thiruvempavai-song-20-for-lord-siva-by-manickavasagar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக