பீகார் மாநிலம், பாகல்பூரில் (Bhagalpur) பேரணி ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங், அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வரும், பா.ஜ.க தலைவருமான சுஷில் குமார் மோடி ஆகியோரைப் பாராட்டிப் பேசினார். மேலும், ``பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி, கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் ஜோடியைபோல் சூப்பர்ஹிட் கூட்டணி’’ என்றார்.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் பதவிக்காலம் நவம்பர் 29-ம் தேதியோடு நிறைவடையும் நிலையில், `பீகார் மாநிலத் தேர்தல் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு, நவம்பர் 10-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
பீகார் மாநிலத் தேர்தல், கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் நடத்தப்படுவதால், இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை அறிவித்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகிவருகின்றன.
இந்தநிலையில், பீகார் மாநிலம், பாகல்பூரில் பேரணி ஒன்றில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகாரில் பல ஆண்டுகளாக இல்லாத மின்சாரம், சாலை மற்றும் நீர் அடிப்படை வசதிகளை நிதிஷ் அரசாங்கம் வழங்கியிருப்பதாகக் கூறினார்.
மேலும், ``பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் - சேவாக் ஆகியோரின் தொடக்க ஜோடியைப்போலவே சூப்பர்ஹிட் கூட்டணி. இரு தலைவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை யாரும் முன்வைக்க முடியாது” என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Also Read: பீகார்: 'பரபரப்பு நிலவரமும், பதறவைக்கும் சம்பவங்களும்' - எப்படியிருக்கிறது தேர்தல் களம்?
தொடர்ந்து, ``ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியின் 15 ஆண்டுக்கால ஆட்சியை பீகார் மக்கள் கண்டிருக்கிறார்கள். மேலும், பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசாங்கத்தின்போது பீகாரின் வளர்ச்சியையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு அரசாங்கங்களின் செயல்திறனை ஒப்பிட முடியாது. என்.டி.ஏ அரசாங்கத்தின் கீழ் மாநிலம் முழுமையாக மாற்றம் பெற்றிருக்கிறது” என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேலும்,``நிதிஷ் குமார் பீகார் மாநிலத்துக்காக எல்லாவற்றையும் செய்திருக்கிறார் என்று நான் கூறவில்லை. அவர் போதுமான வேலை செய்தாரா அல்லது குறைவான வேலையைத்தான் செய்தாரா அல்லது இன்னும் அதிகமாக செய்ய வேண்டுமா என்பது பற்றி அதிகம் விவாதிக்கப்படலாம். ஆனால் அவர்களின் நேர்மை குறித்து எந்த விவாதமும் இருக்க முடியாது’’ என்று கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் நடந்த மோதலின்போது உயிரைத் தியாகம் செய்த பீகார் ராணுவ வீரர்கள் குறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், ``கல்வான் பள்ளத்தாக்கில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நம் தாய்நாட்டின் பெருமையைக் காப்பாற்றியது பீகார் ரெஜிமென்ட் வீரர்கள்தான். அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள். அவர்கள் செய்த தியாகத்துக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி’’ என்று உருக்கமாகப் பேசினார் ராஜ்நாத் சிங்.
வரும் பீகார் தேர்தலில் பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பெரும் கூட்டணியிடமிருந்து மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/news/politics/rajnath-singh-campaign-for-bihar-assembly-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக