இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸாக `விகடன் டெலிவிஸ்டாஸ்' மற்றும் `மோஷன் கன்டென்ட் குரூப்' இணைந்து தயாரிக்கும் `வல்லமை தாராயோ' யூடியூபில் வெளியாகவிருக்கிறது. ஷாலி நிவேகாஸ், கௌஷிக், விஜே பார்வதி, சரண்யா ரவிச்சந்திரன், சுபாஷினி கண்ணன், ஸ்வேதா சேகர் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர்.
`கோலங்கள்' புகழ் திருச்செல்வம் கதை மற்றும் திரைக்கதை எழுயிருக்கிறார். 80 எபிசோடுகளைக் கொண்ட இந்த டிஜிட்டல் சீரிஸ், திங்கள் முதல் வெள்ளிவரை வாரத்துக்கு 5 நாள்கள் யூடியூப் சேனலான விகடன் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.
இதன் இயக்குநர் சிதம்பரம் மணிவண்ணன். இவர் அனிதா சம்பத் நடித்த `எமர்ஜென்சி' வெப் சீரிஸை இயக்கியவர். `வல்லமை தாராயோ' கதைக்களம் குறித்தும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்களுக்கும், யூடியூபில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸுக்கும் உள்ள வித்தியாசம் குறித்தும் இயக்குநரிடம் பேசினோம்.
``பொதுவாக வெப் சீரிஸ் என்றாலே அது ஓடிடி தளங்களில்தான் வெளியாகும் என்று பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஏனென்றால் தொலைக்காட்சியில் வெளியாகும் நெடுந்தொடர்களோடு ஒப்பிடுகையில் வெப் சீரிஸ்களில் அந்த அளவுக்குக் கதையோட்டம் இருக்காது. விறுவிறுப்பும் குறைவாக இருப்பதுபோல தோன்றலாம். ஆனால் `வல்லமை தாராயோ' டிஜிட்டல் டெய்லி சீரிஸ் இந்த எண்ணத்தை மாற்றும் விதமாக அமையும்.
நான் `புட் சட்னி' யூடியூப் சேனலில் பணிபுரிந்தபோது `எமர்ஜென்சி' என்ற வெப் சீரிஸை இயக்கியுள்ளேன். மொத்தமாக இரண்டரை மணி நேரம் கொண்ட அந்த சீரிஸ் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. அடுத்ததாக எனக்கு `வல்லமை தாராயோ' டிஜிட்டல் டெய்லி சீரிஸை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. 80 எபிசோடுகளைக் கொண்ட இந்த சீரிஸ் தினமும் யூடியூபில் வெளியாக உள்ளது. `எமர்ஜென்சி’ வெப் சீரிஸோட டெக்னிக்கல் டீம்தான், இதுலயும் வொர்க் பண்ணியிருக்காங்க.
இதுபோன்ற தொடர்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் மக்கள் எல்லாரும் பார்ப்பார்கள். யூடியூபில் வெளியானால் இதற்கு வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கு எழலாம். தொலைக்காட்சிக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதுபோல் யூடியூபுக்கென்றும் கணிசமான அளவில் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். அவர்களை மையமாகக் கொண்டே இந்த சீரிஸ் வெளியிடப்பட உள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பலரும் யூடியூபுக்கு பழகிய முகங்களே. யூடியூபில் வெளியான குறும்படங்களில் நடித்துப் பிரபலமானவர்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பணிபுரிபவர்கள். `வல்லமை தாராயோ' சீரிஸில் நடிக்கும் நடிகர்களைப் பார்த்து ரசிகர்களுக்கு அந்நியத்தன்மை ஏற்படாமல் இருக்கவே ஏற்கெனவே யூடியூபில் பிரபலமடைந்தவர்களைக் கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்துள்ளோம்.
இது தவிர, `வல்லமை தாராயோ' முழுக்க முழுக்க பெண்களுக்கான கதைக்களம். கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டுப்பாடு மிகுந்த குடும்பத்தில் வசிக்கும் பெண்ணின் இளமைக்கால மற்றும் திருமண வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு விறுவிறுப்பான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களோடு கதை பயணிக்கிறது. கதாநாயகியைத் தவிர்த்து ஆறு, ஏழு முக்கியமான பெண் கதாபாத்திரங்கள் உள்ளனர். இந்தப் பெண்கள் அனைவரும் வெவ்வேறு சூழல்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள். இவர்களின் மனநிலையும், எண்ண ஓட்டங்களும்தான் கதையின் கரு. 80 எபிசோடுகளில் முதல் எபிசோடிலிருந்து கடைசி எபிசோடு வரை சுவாரஸ்யத்துக்குக் குறைவிருக்காது" என்கிறார் இயக்குநர் சிதம்பரம் மணிவண்ணன்.
வரும் 26-ம் தேதி, திங்கள்கிழமை, இரவு 7 மணி... வல்லமை தாராயோவை மிஸ் செய்யாமல் பார்க்க விகடன் டிவிக்கு வாங்க!
source https://cinema.vikatan.com/web-series/director-chidambaram-manivannan-speaks-about-vallamai-tharayo-digital-daily-series
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக