பாகிஸ்தானின் சிந்து மாகாண போலீஸ் ஐ.ஜி முஷ்தக் அகமது மஹார், துணை ராணுவப்படையினரால் கடத்தப்பட்ட சம்பவம் அம்மாகாண போலீஸாரிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக சிந்து மாகாண போலீஸார், ஒட்டுமொத்தமாக விடுமுறைக்கு விண்ணப்பித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் உள்நாட்டு அரசியல் விவகாரத்தில் அந்நாட்டு ராணுவம் தலையிடுவதாகக் கூறி, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, 11 எதிர்க்கட்சிகளோடு கைகோத்து கராச்சியில் பேரணி ஒன்றை நடத்தியது. முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் மரியம் நவாஸ் ஷெரீப், அவரின் கணவர் சஃப்தார் அவான் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இம்ரான் கான் அரசு, ராணுவத்தின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் கூறி `அவர் பதவி விலக வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பேரணி முடிந்ததும் மரியம் நவாஸ் ஷெரீப், சஃப்தார் அவான் ஆகியோர் தங்கியிருந்த ஹோட்டலில் துணை ராணுவப் படை அத்துமீறி நுழைந்தது. மேலும், சஃப்தார் அவானைக் கைதுசெய்து அழைத்துச் சென்றது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
சஃப்தாரின் கைது நடவடிக்கைக்குப் பிறகு அவர் மீது முதல் தகவலறிக்கை பதிவு செய்ய சிந்து மாகாண போலீஸாருக்கு ராணுவம் தரப்பில் அழுத்தம் தரப்பட்டது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அம்மாகாண போலீஸ் ஐ.ஜி முஷ்தக் அகமது மஹாரின் ஒப்புதல் தேவை என்பதால், கடந்த அக்டோபர் 19-ம் தேதி அவர் துணை ராணுவப் படையினரால் கடத்தப்பட்டு, ஆவணங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நான்கு மணி நேரம் பிணைக் கைதியாக வைக்கப்படடிருந்த ஐ.ஜி முஷ்தக் அகமது, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
Also Read: `எதிர்ப்புகளைச் சந்திக்கும் இம்ரான் அரசு!’ - அதிரடிகாட்டும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்
இதனால் சிந்து மாகாண காவல்துறை சார்பாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், ஐ.ஜி மற்றும் சிந்து மாகாண காவல்துறை உயரதிகாரிகள் உட்பட அனைவரும் ஒட்டுமொத்தமாக நீண்டநாள் விடுமுறைக்கு விண்ணப்பித்தனர். மேலும், இந்தக் கடத்தல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக சிந்து மாகாணக் காவல்துறை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. காவல்துறையினரின் இந்தச் செயலுக்கு எதிர்கட்சித் தலைவர் மரியம் நவாஸ் ஷெரீப் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் விஸ்வரூபமெடுத்திருக்கும் நிலையில், இது குறித்து விசாரிக்க புலனாய்வுத்துறைக்கு சிந்து மாகாண அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், `காவல்துறையினருக்கு அரசு என்றும் துணைநிற்கும்’ என்று முதல்வர் உறுதியளித்தார். இதையடுத்து, விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்த ஐ.ஜி உட்பட அனைத்துக் காவல்துறை அதிகாரிகளும் தங்களின் கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
மேலும், பாகிஸ்தானில் நிகழ்ந்துவரும் அசாதாரணச் சூழலைக் கட்டுப்படுத்தும் செயல்களில் இம்ரான் கான் அரசு ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று கராச்சியிலுள்ள இரண்டு மாடி கட்டடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை ஐந்து பேர் பலியாகியிருக்கிறார்கள். 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
போலீஸ் - துணை ராணுவப் படை மோதல், குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களால் பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துவருகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/international/pakistan-sindh-police-revolt-against-army-irks-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக