Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

தேசிய வண்ணத்துப் பூச்சியைத் தேர்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள்... நீங்களும் வாக்களிக்கலாம்!

அது கேமராக்களே கண்டுபிடிக்கப்படாத காலகட்டம். மரியா சிபில்லா மெரியன் (1647 - 1717) என்ற அந்தப் பெண், தன்னுடைய ஆர்வத்தையும் வாழ்க்கை லட்சியத்தையும் இயற்கையின் தனி உலகமான பூக்கள், தாவரங்கள் மற்றும் சிற்றுயிர்களின் பக்கமாகத் திருப்பியிருந்தார். அவர் வாழ்ந்த 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுக் காலகட்டத்தில், பூச்சிகள் என்றாலே சாத்தானின் மிருகங்களாகக் கருதப்பட்டன. அந்தச் சூழலில், மரியா பூச்சிகள் குறித்த ஆய்வில் ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது மிகவும் கடினமான காரியம்தான். அவற்றுடைய வாழ்வியல் சுழற்சியைப் பற்றி அவர் மேற்கொண்ட ஆய்வுகள், சிற்றுயிர்கள் குறித்த ஆய்வுத்துறையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றது.

Common rose butterfly/ Pachliopta aristolochiae

அவர் வாழ்ந்த நேரத்தில், இவை மீது பல்வேறு மூடநம்பிக்கைகள் இருந்தன. ஆனால், இன்று சுற்றுச்சூழலுக்கு அவை செய்கின்ற நன்மைகளைப் புரிந்துணர்ந்து அவற்றைக் கொண்டாடுகிறோம். அவற்றுடைய இனப்பெருக்கம், அன்றாட வாழ்க்கை, உணவுப் பழக்கம் அனைத்துமே அவை வாழ்கின்ற பகுதியிலுள்ள மற்ற உயிரினங்கள்மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் தாக்கத்தையும் பட்டாம்பூச்சிகளுடைய முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக, இந்தியாவின் தேசிய வண்ணத்துப்பூச்சியைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் 52 ஆய்வாளர்களைக் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அணில் நகர், பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கத்தைச் சேர்ந்த சொஹைல் மதன் ஆகியோர் உட்படப் பல்வேறு நிபுணர்கள் அந்தக் குழுவில் அடக்கம்.

தேசிய அளவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு இந்த அங்கீகாரம் ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள முதலில், அவற்றுடைய இருப்பு சூழலுக்கு எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றுடைய இருப்புதான் இங்கு இதர பல உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் இருப்புக்கு அடிநாதமாக விளங்குகிறது.

தேனீக்களைப் போலவே வண்ணத்துப்பூச்சிகளும் தாவரப் பெருக்கத்தில் தனித்துவமான பங்கு வகிக்கின்றன. சுற்றுச்சூழலின் தரத்தை அளவிடுவதற்கான குறியீடாக, அவை திகழ்கின்றன. பூமியில் சுமார் 20,000 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வாழ்கின்றன. அதில் இந்தியாவில் மட்டுமே, 1,300-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 32 வகையான ஓரிடவாழ் வண்ணத்துப்பூச்சிகள் வாழ்கின்றன. ஆனால், கடந்த சில வருடங்களில் அவற்றுடைய எண்ணிக்கை பெருமளவில் குறைந்துகொண்டிருக்கின்றன.

தாவரப் பெருக்கத்தில், மகரந்தச் சேர்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்ற இவற்றுடைய எண்ணிக்கையில் நிகழும் வீழ்ச்சி நிச்சயம் பூமியின் பல்லுயிரிய வளத்தின் மீதே தாக்கம் செலுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இறுதியில், வண்ணத்துப்பூச்சி விளைவு (ஓரிடத்தில் ஏற்படுகின்ற பாதிப்பு, சங்கிலித் தொடராக அடுத்தடுத்து மேலும் பல இடங்களுக்குப் பரவுவதே வண்ணத்துப்பூச்சி விளைவு என்று கூறப்படுகிறது), வண்ணத்துப்பூச்சிகள் விஷயத்திலேயே நடந்துகொண்டிருப்பது அச்சப்பட வேண்டிய ஒன்று.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 வகைகள். இதில் ஏதாவது ஒன்றுக்கு மக்கள் வாக்களிக்கலாம்.

Indian Nawab/ Polyura athamas
Five-bar swordtail/ Graphium antiphates
Northern Jungle Queen/ Stichophthalma camadeva
Krishna Peacock/ Papilio krishna
Yellow Gorgon/ Dabasa amphis
Orange Oakleaf/ Kallima inachus
Common Jezebel/ Delias eucharis

அப்படிப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி, தமிழக அரசு மாநில வண்ணத்துப்பூச்சியை அறிவித்தது. தமிழகத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தமிழ் மறவன் (Tamil Yeoman) என்ற வகையைத் தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவித்தார். இந்நிலையில், தற்போது தேசிய வண்ணத்துப்பூச்சியைத் தேர்ந்தெடுப்பதற்காக 52 பேரைக் கொண்ட குழு நாடு முழுவதும் பரிந்துரைகளையும் மக்களின் வாக்குகளையும் சேகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா முழுக்கப் பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகளை நம்மால் காண முடியும். சமீபத்தில்கூட, நீலகிரியிலுள்ள கோத்தகிரியின் சரிவுப் பகுதியில் பிராண்டட் ராயல் (Branded Royal, Tajuria melastigma) என்ற வகையைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சியை 130 ஆண்டுகள் கழித்து மீண்டும் பதிவு செய்துள்ளனர். இந்த வகையைக் கடைசியாக 1888-ம் ஆண்டு டி.எஃப்.ஹாம்ப்சன் என்பவர் பதிவு செய்திருந்தார். அதற்குப் பிறகு தற்போதுதான் அது நம் கண்களில் தென்பட்டுள்ளது. இவையனைத்துமே, நம்மைச் சுற்றியுள்ள சூழலியல் சமநிலையைப் பேணிப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இப்படிப் பல்வேறு வகைகள் நம் கண்முன்னே காணாமல் போய்க்கொண்டும் புதிதாகத் தென்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. இதனாலேயே தேசிய வண்ணத்துப்பூச்சியை அறிவிப்பது மிகவும் அவசியமானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் வண்ணத்துப்பூச்சி ஆய்வாளர்களையும் ஆர்வலர்களையும் உள்ளடக்கிய 52 பேர் கொண்ட ஒரு குழு தற்போது நாட்டின் தேசிய வண்ணத்துப்பூச்சியைத் தேர்ந்தெடுப்பதற்கான பணியில் இறங்கியுள்ளது. முதலில் இதற்கான அவசியம் என்ன? தேசிய வண்ணத்துப்பூச்சியாகக் குறிப்பிட்ட ஒரு வகையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் என்ன பயன்?

Mr. Divakar Thombre, தேசிய வண்ணத்துப்பூச்சிக்கான தேர்வுக் குழுவின் உறுப்பினர்

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண, அந்தக் குழுவில் ஒருவரான மும்பையைச் சேர்ந்த திவாகர் தாம்ப்ரேவிடம் பேசினோம். அவர், ``தேசிய பட்டாம்பூச்சியை அறிவிப்பது தேசியளவிலும் சர்வதேச அளவிலும் பலரை நம் நாட்டுடைய பல்லுயிரியவளத்தின் பக்கமாக ஈர்க்கும். மேலும், அது நாட்டின் சூழலியல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும். இவற்றைவிட முக்கியமாக, சராசரி மக்களுக்கு இவற்றுடைய வாழ்வியல் சுழற்சிகூட முழுவதுமாகத் தெரிவதில்லை. இவை, ஆண்டாண்டுக் காலமாகப் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. இந்த முயற்சி அதை மாற்றும். மக்களுக்கு வண்ணத்துப்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். அவற்றுடைய வாழ்வியல் சுழற்சி, பல்வகைக் குடும்பங்கள், அவை வாழும் தாவரம், தேன் எடுக்கும் தாவரம் என்று அனைத்தைப் பற்றியும் மக்கள் தெரிந்துகொள்ளத் தூண்டும். இதன்மூலம், அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகள் மேலும் அதிகரிக்கும்" என்று கூறினார்.

சரி, இதற்கான வேலைகள் எப்படி நடக்கின்றன, இதைத் தேர்ந்தெடுப்பது யார் என்று தெரிந்துகொள்ள அந்தக் கமிட்டியில் இருக்கின்ற ராஜபாளையத்தைச் சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர் சரண் என்பவரிடம் பேசினோம். அப்போது அவர், ``இதில் மக்களுடைய பங்குதான் மிக முக்கியமானது, அவர்களுடைய வாக்குகளின் அடிப்படையில்தான் நாங்கள் தேசிய பட்டாம்பூச்சியையே தேர்ந்தெடுக்கிறோம்" என்று கூறினார். மேற்கொண்டு பேசியவர், ``முதல்கட்டமாக கமிட்டியில் இருப்பவர்கள் அனைவரும் ஒரு சந்திப்பு நிகழ்த்தினோம். இந்தியாவில் 1,300-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த ஆலோசனைகளை அதில் மேற்கொண்டோம். குழுவிலிருந்த 52 பேரிடமும் அவரவர் தேர்ந்தெடுக்கும் பட்டாம்பூச்சி வகைகளை முன்வைக்கச் சொன்னோம். அனைவருமே குறைந்தபட்சம் இரண்டு வகைகளைப் பரிந்துரைத்தார்கள். அதில் மொத்தமாகச் சுமார் 48 வகைகள் வந்தன. அதில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதில், கமிட்டிக்கு உள்ளாகவே வாக்கெடுப்பு நடத்தினோம். அந்த வாக்கெடுப்பு மூலமாக ஏழு வகைகளைத் தேர்ந்தெடுத்தோம்.

Mr. Sharan V, தேசிய வண்ணத்துப்பூச்சிக்கான தேர்வுக் குழுவின் உறுப்பினர்

தேசிய வண்ணத்துப்பூச்சியைத் தேர்ந்தெடுப்பதில், 8 விதிகளை வகுத்துக் கொண்டோம். அந்தத் தகுதிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பட்டாம்பூச்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவை, ஏதேனும் ஒரு இந்திய மாநிலத்தின் வண்ணத்துப்பூச்சியாகவோ, வேறு நாடுகளின் தேசிய பட்டாம்பூச்சியாகவோ இருந்துவிடக் கூடாது, கலாசாரம் மற்றும் சூழலியல் ரீதியிலான முக்கியத்துவம் போன்ற தகுதிகள் சில. இறுதியாக 7 வகைப் பட்டாம்பூச்சிகளைத் தேர்ந்தெடுத்த பின்னர், கடந்த மாதம் செப்டம்பர் 10-ம் தேதியன்று பொதுமக்கள் வாக்கெடுப்பைத் தொடங்கினோம். கடந்த 20 நாள்களாக நடந்துகொண்டிருக்கும் வாக்கெடுப்பு, அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறும். அதற்குப் பிறகு, எவையெல்லாம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள பட்டாம்பூச்சிகள் என்ற பட்டியலை வெளியிட்டு, அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்" என்று கூறினார்.

இறுதியாக ஒரு பட்டாம்பூச்சியைத் தேர்ந்தெடுத்த பின்னர், அதைத் தேசிய வண்ணத்துப்பூச்சியாக அறிவிப்பது குறித்துப் பேசினார், அந்தக் குழுவில் ஒருவரும் மும்பையைச் சேர்ந்த முக்கியமான வண்ணத்துப்பூச்சி ஆர்வலருமான திவாகர் தாம்ப்ரே, ``ஏற்கெனவே, மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். இப்போது நடந்துகொண்டிருக்கும் தேர்வு முயற்சிகள் மற்றும் அதில் சேகரிக்கப்படும் தரவுகள், வாக்குகள் அனைத்தைப் பற்றியும் விரிவான அறிக்கையைத் தயார் செய்வோம். பின்னர், அதை அமைச்சகத்திடம் சமர்ப்பித்து, அதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரோடு ஆலோசிப்போம். அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, மக்களுடைய வாக்குகளை அடிப்படையாக வைத்து, தேசிய வண்ணத்துப்பூச்சியை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் பின்னர் எடுக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் நம்முடைய தேசிய வண்ணத்துப்பூச்சி அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.

Blue Mormon/ Papilio polymnestor

தேசியப் பறவை, தேசிய விலங்கு, தேசியப் பூ, தேசிய மரம் அனைத்துமே நம்மிடம் உள்ளது. அவற்றைப் போலவே சிற்றுயிர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகத் தேசிய வண்ணத்துப்பூச்சியையும் அறிவிக்க வேண்டுமென்று நாட்டின் முக்கிய ஆய்வாளர்களையும் ஆர்வலர்களையும் கொண்ட இந்தக் குழு முயன்றுகொண்டிருக்கிறது. ஒரு பட்டாம்பூச்சியைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் சில வரையறாக்களைக் கவனிக்க வேண்டுமென வலியுறுத்துகிறார்கள். அதன் அடிப்படையில் நீங்களும்கூட, அவர்கள் இறுதிப்படுத்தியுள்ள ஏழு வகைகளைக் கொண்ட பட்டியலிலிருந்து ஒரு பட்டாம்பூச்சியைப் பரிந்துரைத்து அக்டோபர் 8-ம் தேதிவரை வாக்களிக்கலாம்.

இந்த வாக்கெடுப்பில் நீங்களும் பங்கேற்கலாம். அதற்கு, https://forms.gle/u7WgCuuGSYC9AgLG6 என்ற இணையதள முகவரியில் சென்று அதில் குறிப்பிட்டிருக்கும் ஏழு பட்டாம்பூச்சிகள், அவர்கள் குறிப்பிடும் வகையறாக்களுக்குள் அடங்குகின்ற, உங்களுக்கு விருப்பமான வகையைத் தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும்.

அக்டோபர் 1-ம் தேதி வரைக்கும் மொத்தம் 42,798 பேர் வாக்களித்துள்ளனர். அதில் அதிகளவிலான வாக்குகளை மகாராஷ்டிர மக்கள் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து மட்டுமே இதுவரை 16,230 பேர் வாக்களித்துள்ளனர். இரண்டாவதாக 3,040 வாக்குகளைப் பதிவு செய்து மேற்கு வங்கம் இரண்டாவது இடத்திலும், 2,455 வாக்குகளோடு கர்நாடகா மூன்றாவது இடத்திலும் உள்ளது. தமிழகம் 2,268 வாக்குகளோடு 6-வது இடத்தில் இருக்கிறது.

மலேசியா, தைவான், இந்தோனேசியா, பூட்டான் ஆகிய சில நாடுகளே பட்டாம்பூச்சிகளுக்குத் தேசிய அங்கீகாரம் வழங்கியுள்ளன. இந்தியா, வளமை மிகுந்த பல்லுயிர்ச்சூழலைக் கொண்ட நாடு. இங்கு, வடகிழக்கு இந்தியா, மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் இதர மலைப்பகுதிகள், பீடபூமிகளில் இதுவரை 6 உயிரியல் குடும்பங்களைச் சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய உயிரியல் வளத்தைக் கொண்டுள்ள இந்தியாவிலும் இந்த அங்கீகாரத்தை அவற்றுக்கு வழங்குவது, அவற்றின் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Common psyche/ Leptosia nina

காலநிலை மாற்றத்தால், வாழ்விட மாற்றம், வாழ்விட இழப்பு ஆகியவற்றை வண்ணத்துப்பூச்சிகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனால், பல்வேறு அரிய வகைகளின் இருப்பு ஆபத்துக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்கள், அவை முட்டையிலிருந்து வளர்ச்சியைந்து வண்ணத்துப்பூச்சியாக உருப்பெறும் வரை வாழக்கூடிய சூழ்நிலையைப் பல பகுதிகளில் குறைத்துக் கொண்டிருக்கிறது. இவற்றோடு மனித நடவடிக்கைகளும் அவற்றுடைய வாழிடங்களுக்குச் சிக்கலை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், வண்ணத்துப்பூச்சிகளுக்குத் தேசிய அங்கீகாரம் வழங்குவது சரியாக இருக்கும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.



source https://www.vikatan.com/news/environment/expert-team-working-on-to-choose-national-butterfly-via-public-voting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக