ஐ.ஐ.எஃப்.எல் மற்றும் ஹருண் இந்தியா இணைந்து (Hurun-IIFL Wealth report) பணக்கார இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. உலகப் பணக்காரர்களின் செல்வ நிலை பற்றி ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் அறிக்கைக்கு அடுத்த நிலையில் இருக்கிறது இந்த ஹருண் நிறுவனம் வெளியிடும் அறிக்கை.
இந்தியாவில் 1,000 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்து வைத்திருக்கும் 828 நபர்களை (ஆகஸ்ட் 31,2020 வரை உள்ள புள்ளிவிவரங்களின்படி) இந்த நிறுவனம் தற்போது பட்டியலிட்டு வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்த ஆண்டு புதிதாக 162 நபர்கள் இணைந்திருக்கிறார்கள். இதில் 217 நபர்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள். இந்தப் பட்டியலில் 40 நபர்கள் மட்டுமே பெண்கள் என்பது வருத்தம் தரும் விஷயமே!
இந்தப் பணக்காரர்கள் பட்டியலில் லேட்டஸ்ட்டாக என்ட்ரி ஆகி, எல்லோரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான அசோக் சூட்டா. 77 வயதில் அவர் இந்தப் பட்டியலில் இணைந்திருப்பதைப் பார்க்கும்போது, சாதிப்பதற்கு வயது என்றும் ஒரு தடையல்ல என்பதையே காட்டுகிறது. இவருடைய சொத்து மதிப்பு ரூ.3,700 கோடி. (ஹருண் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் இவர் 282-வது இடத்தில் உள்ளார்) யார் இந்த அசோக் சூட்டா, இவருடைய சொத்து மதிப்பு திடீரென உயர்ந்ததற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
யார் இவர்?
1942-ல் பாகிஸ்தானில் பிறந்தார் அசோக் சூட்டா. இவரின் அப்பா ராணுவ டாக்டராக இருந்ததால், பல்வேறு பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். ஐ.ஐ.டி ரூர்கேலாவில் இன்ஜினீயரிங் முடித்தவர். டெல்லியில் உள்ள ஸ்ரீராம் குழுமத்தில் பணியைத் தொடங்கினார். இடையே பிலிப்பைன்ஸில் எம்.பி.ஏ படித்தார்.
1984-ம் ஆண்டு முதல் 89-ம் ஆண்டு வரை விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றினார். விப்ரோ நிறுவனத்திலிருந்து வெளியேறும்போது தலைமைப் பொறுப்பில் இருந்தார். விப்ரோ நிறுவனம் பல தொழில்முனைவர்களை உருவாக்கியிருக்கிறது. அசோக் சூட்டாவுக்கும் விப்ரோவில் பணியாற்றிய பிறகுதான், சொந்தமாகத் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
நண்பர்களுடன் தொடங்கிய மைண்ட் ட்ரீ..!
விப்ரோவில் இருந்தபோது தனியாக நிறுவனம் தொடங்குவதற்காக முதலீட்டைத் தேடி வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களுடன் பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரைப் போலவே வேறு சிலரும் அப்படிப்பட்ட ஒரு முயற்சியில் இருப்பது தெரியவந்தது. ஒரே மாதிரியான சிந்தனையும் செயல் திட்டமும் கொண்ட நண்பர்கள் ஒன்று சேர, மைண்ட் ட்ரீ நிறுவனம் உதயமானது. நிறுவனத்தின் புராஜெக்ட்டுகளை நிறைவேற்றத்தான் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் என்ற சிந்தனையை மாற்றி, ஊழியர்களின் அறிவுக்குத் தீனி போடும் நிறுவனமாக மைண்ட் ட்ரீ இருக்க வேண்டும் என்று நினைத்து அந்த நிறுவனத்தை வித்தியாசமாக உருவாக்கினார்கள் அசோக் சூட்டாவும் அவரின் நண்பர்களும்.
விலக வைத்த கருத்துவேறுபாடு..!
வேகமாக வளர்ச்சி கண்டுவரும் `மிட்சைஸ்’ ஐ.டி நிறுவனம் என்ற பெயருடன் மைண்ட் ட்ரீ வளர்ந்து கொண்டிருந்த நிலையில், 2011-ம் ஆண்டு ஹார்டுவேர் நிறுவனம் ஒன்றை மைண்ட் ட்ரீ நிறுவனம் வாங்கியது. இதை எதிர்த்த அசோக் சூட்டா, அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். சமரசம் இல்லாத சிந்தனைதான் அவரை இயக்கும் உந்துசக்தியாக எப்போதும் இருந்திருக்கிறது. அதே நேரம், இந்தக் கருத்து வேறுபாட்டை யாரிடமும் சொல்லாமல், அமைதியாக வெளியேறினார் அசோக் சூட்டா.
அசோக் சூட்டா தொழில் தொடங்குவதற்கு முதலீடு செய்ய பல வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் தயாராக இருந்தன. எனவே, சத்தமில்லாமல் தன் அடுத்த நிறுவனத்தை ஆரம்பித்தார். வேலையை மகிழ்ச்சியாகச் செய்ய வேண்டும் என்பதுதான் சூட்டாவின் எண்ணம். எனவே, தனது புதிய நிறுவனத்துக்கு `ஹாப்பியஸ்ட் மைண்ட்’ என்று பெயர் வைத்தார். அது மட்டுமல்ல, மற்ற ஐ.டி நிறுவனங்களிலிருந்து சற்று வித்தியாசமாகத் தெரிகிற மாதிரி தனது நிறுவனத்தின் பிசினஸ் மாடலையும் உருவாக்கினார். ஹாப்பியஸ்ட் மைண்ட் நிறுவனத்தின் வருமானத்தில் 97% அளவுக்கு டிஜிட்டல் மூலமாகவே கிடைக்கிறது. இந்திய அளவில் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் அதிகளவு டிஜிட்டல் மூலம் வருமானம் ஈட்டுவது இந்த நிறுவனமே.
ஐ.பி.ஓ ஸ்டார்
கடந்த எட்டு ஆண்டுகளாக சத்தமில்லாமல் சாதனை படைத்து வந்த ஹாப்பியஸ்ட் மைண்ட் நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட வேண்டும் என்கிற ஆசை அசோக் சூட்டாவுக்கு இருந்தது. இந்த ஆண்டு அவரது ஹாப்பியஸ்ட் மைண்ட் நிறுவனத்தின் பங்குகளை ஐ.பி.ஓ மூலம் வெளியிட நினைத்தபோது, அவரது யோசனைக்கு பலரும் முட்டுக்கட்டை போட்டனர். ``கொரோனா நோய்த் தொற்றால் பொருளாதாரமே நிலைகுலைந்து போயிருக்கும் இந்த நிலையில் முதலீட்டாளர்களிடம் பங்கு வாங்க பணம் இல்லை. இப்போது ஐ.பி.ஓ வெளியிட்டால், அது தோல்வியில்தான் முடியும்’’ என அவரை நோக்கிப் பாய்ந்த கருத்துகளுக்கு அவர் பெரிய கவனம் எதையும் தரவில்லை. நிறுவனத்தின் மதிப்பை நன்கு உணர்ந்தவர்கள் நிச்சயம் முதலீடு செய்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் ஐ.பி.ஓ வந்தார்.
கொரோனா நோய்த்தொற்று காலத்தில் வெளியான முதல் ஐ.பி.ஓ இது என்பதால், முதலீட்டாளர்களிடம் நிறைய ஆர்வம் இருந்தது. தவிர, ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்ய முடியாதவர்கள் இந்தப் பங்கு நிறுவனத்தின் பிசினஸையும் நிதிநிலையையும் நன்கு அறிந்துகொண்டு இதில் முதலீடு செய்தனர். இதனால் இந்த ஐ.பி.ஓ-வில் பங்குகள் வேண்டும் என்று கேட்டு 151 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. கடந்த பத்தாண்டுகளில் வெற்றிகரமான எட்டாவது ஐ.பி.ஓ இதுவாகும். இதனால்தான் ஹருண் நிறுவனம் அசோக் சூட்டாவை `ஐ.பி.ஓ ஸ்டார்’ எனப் புகழ்ந்துள்ளது.
முதல் நாளில் 100% லாபம்
ஹாப்பியஸ்ட் மைண்ட் நிறுவனப் பங்கின் விலை ஐ.பி.ஓ-வில் ரூ.166 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பங்கு, சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாள் அன்றே 111% உயர்ந்து, ரூ.351-ல் வர்த்தகத்தைத் தொடங்கியது. அந்த நாளில் அதிகபட்சமாக ரூ.391 வரை இந்தப் பங்கு உயர்ந்தது. நேற்று முன்தினம் வர்த்தகத்தில் (செப்டம்பர் 30) 348 ரூபாயில் முடிந்திருக்கிறது.
ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் என்பது அசோக் சூட்டா வெளியிட்ட இரண்டாவது ஐ.பி.ஓ. அவர் ஏற்கெனவே மைண்ட் ட்ரீ என்னும் நிறுவனத்தைத் தொடங்கி 13 ஆண்டுகளுக்கு முன் அதை வெற்றிகரமாக ஐ.பி.ஓ-வுக்கு கொண்டுவந்தவர். அந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கும் முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு இருந்தது. அந்தப் பங்குகளுக்கு 103 மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் குவிந்தன.
ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி வெற்றி காண்பதே பெரிய சாதனையாக இருக்கும்போது, இரண்டு நிறுவனங்களைத் தொடங்கி, அந்த இரு நிறுவனங்களையும் ஐ.பி.ஓ கொண்டுவந்து சாதனை படைத்திருக்கிறார் `ஹாப்பியஸ்ட் மைண்ட்’ நிறுவனத்தின் நிறுவனரான அசோக் சூட்டா.
கொசுறு தகவல்:
சிறு, குறு நிறுவனங்கள் மிகப் பெரிய வளர்ச்சி காண `ஆந்தரபிரினர்ஷிப் சிம்பிளிஃபைடு... ஃப்ரம் ஐடியா டு ஐ.பி.ஓ’ என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார் அசோக் சூட்டா.
source https://www.vikatan.com/business/finance/success-story-of-happiest-minds-technologies-founder-ashok-soota
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக