கொரோனா ஊரடங்குகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்குக்கு பிறகு முதன்முதலாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ள மாநிலம் பீகார். தேர்தல் காரணமாகப் பீகார் மாநிலக் கட்சிகள் அனைத்தும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது பீகார் மாநிலச் சட்டசபைத் தேர்தல். இந்தநிலையில், முதற்கட்டமாக நடைபெறவுள்ள பீகார் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆராய்ந்து, வேட்பாளர்களின் சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளது Association Of Democratic Reforms (ஏ.டி.ஆர்) அமைப்பு.
இந்தியாவில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இயங்கிவரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்புதான் ஏ.டி.ஆர். 1999-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வரும் இந்த அமைப்பு, தேர்தல் ஆவணங்கள், அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் ஆவணங்கள், வேட்பாளர்களின் பிராமணப் பத்திரங்களை ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
Also Read: சுஷாந்த் வழக்கு: `காக்கி' டு `காவி' குற்றச்சாட்டு... பீகார் டி.ஜி.பி குப்தேஷ்வர் ஓய்வு ஏன்?
பீகார் முதற்கட்ட தேர்தலில் போட்டியிடப் போகும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1066 வேட்பாளர்களில், 1064 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ள ஏ.டி.ஆர் அமைப்பின் அறிக்கை நமக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது.
கிரிமனல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள்!
1064 வேட்பாளர்களில், 328 பேர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த 328 பேரில், 244 பேர்மீது தீவிரமான கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 29 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளன. இதில், 3 பேர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. 21 வேட்பாளர்கள்மீது கொலை வழக்கும் 62 வேட்பாளர்கள்மீது கொலை முயற்சி வழக்கும் பதிவாகியுள்ளன.
ரெட் அலர்ட் தொகுதிகள்!
ஒரு தொகுதியில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள்மீது கிரிமனல் வழக்குகள் இருக்கிறதென்றால் அது ரெட் அலர்ட் தொகுதியாக அறிவிக்கப்படும். பீகார் மாநிலத்தில் முதற்கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள 71 தொகுதிகளில் 61 தொகுதிகள் ரெட் அலர்ட் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எந்தக் கட்சி நம்பர் 1?
பீகார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி, காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள்தான் முக்கியக் கட்சிகளாக இயங்கி வருகின்றன. இதில், லல்லு பிரசாத் யாதவின் தலைமையில் இயங்கி வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிதான் கிரிமினல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்களை அதிகம் தேர்வு செய்துள்ள கட்சியாக உள்ளது. மொத்தம் 30 (மொத்த ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர்களில், 73 சதவிகித வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன) ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர்களின்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்கிறது ஏ.டி.ஆர் அறிக்கை.
அதிக கிரிமினல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலில், பா.ஜ.க-வைச் சேர்ந்த 21 (72%) வேட்பாளர்கள் மீதும் மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமை தாங்கும் லோக் ஜனசக்தி கட்சியில் 24 (59%) வேட்பாளர்களும் காங்கிரஸ் கட்சியில் 12(57%) வேட்பாளர்களும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 15(43%) வேட்பாளர்களும் பகுஜன் சமாஜ் கட்சியில் 8(31%) வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
Also Read: சுஷாந்த் புகைப்படத்துடன் 30,000 மாஸ்க்குகள்... அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறதா பா.ஜ.க?
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் 22(54%) வேட்பாளர்கள் மீதும், லோக் ஜனசக்தி கட்சியில் 20(49%) வேட்பாளர்களும் பா.ஜ.க-வில் 13(45%) வேட்பாளர்கள் மீதும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் தீவிர கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல, தீவிர கிரிமினல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலில், காங்கிரஸில் 9(43%) வேட்பாளர்களும் ஐக்கிய ஜனதா தளத்தில் 10(29%) வேட்பாளர்களும் பகுஜன் சமாஜ் கட்சியில் 5(19%) வேட்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மொகாமா (Mokama) தொகுதி வேட்பாளர் அனந்த் குமார் சிங் மீது அதிகபட்சமாக 38 கிரிமினல் வழக்குகள் உள்ளன.
பணக்கார வேட்பாளர்கள்!
1064 வேட்பாளர்களில், 375(35%) வேட்பாளர்கள் கோடிஸ்வரர்கள் என்று ஏ.டி.ஆர் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இதில் 93 வேட்பாளர்கள் 5 கோடிக்கும் அதிகமாகச் சொத்துகளை வைத்துள்ளனர்.
குறைந்து சொத்துகள் அல்லது சொத்துகளே இல்லாத வேட்பாளர்களின் பட்டியலில், பீகார் மாநிலத்தின் முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த ஒரு வேட்பாளர்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.டி.ஆர் அறிக்கையில், ``உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை, பீகார் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில், எந்தவொரு அரசியல் கட்சியும் பின்பற்றவில்லை. பீகார் முதற்கட்ட தேர்தலில் பங்குபெற உள்ள முக்கியக் கட்சிகளில் 31-70 சதவிகித வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களாகவே இருக்கிறார்கள். பிப்ரவரி 13, 2020 அன்று உச்ச நீதிமன்றம், `ஏன் கிரிமினல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்களைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியும் விளக்க வேண்டும். உங்கள் கட்சியிலேயே கிரிமினல் வழக்குகள் இல்லாத ஒருவரை ஏன் வேட்பாளராகத் தேர்வு செய்ய முடியவில்லை என்பதையும் விளக்க வேண்டும். மேலும், இந்த காரணங்களைக் குறிப்பிடுவதோடு, வேட்பாளர்களின் சாதனை, தகுதி உள்ளிட்டவற்றையும் பட்டியலிட வேண்டும்' என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அரசியல் கட்சிகள் எதுவும் இதைப் பின்பற்றவேயில்லை'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: பீகார்: 'பரபரப்பு நிலவரமும், பதறவைக்கும் சம்பவங்களும்' - எப்படியிருக்கிறது தேர்தல் களம்?
``எந்த அரசியல் கட்சியுமே வேட்பாளர்கள் தேர்வில் நியாய தர்மங்களைப் பின்பற்றாது. கட்சித் தலைமை ஒருவர்மீது, ஜெயித்து விடுவார், செலவு செய்வார் என்று நம்பிக்கை வைத்து விட்டால், அவர் கிரிமினல் வழக்குகளைக் கொண்டவராக இருந்தாலும் சரி பெரிய ரவுடியாக இருந்தாலும் சரி, அவரைத்தான் வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பார்கள். கட்சிகளுக்கு முக்கியம் வெற்றிதானே தவிர, வேட்பாளர் நல்லவரா கெட்டவரா என்பதல்ல'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/election/criminal-record-reports-of-bihar-election-candidates-released-by-adr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக