புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை அதனை அடக்கும் வீரர் சிலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு திறந்து வைத்தார். முன்னதாக, காலையில் முதலமைச்சர் திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய போது, அவரை அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் உட்பட அ.தி.மு.க தொண்டர்கள் பலரும் வரவேற்றனர். இந்த நிலையில், முதலமைச்சரை வரவேற்கச் சென்ற அறந்தாங்கி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
உள்ளே விடுவோர் பட்டியலில் ரத்தினசபாபதி பெயர் இல்லை என்று கூறி வாசலிலேயே நிறுத்தப்பட்டார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி வாசலிலேயே காத்திருந்துள்ளார். அப்போது எம்.எல்.ஏ-வுக்கும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்குமிடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதே போல், மீண்டும் மாலையிலும் முதல் அமைச்சரை வழி அனுப்ப விமான நிலையத்திற்குள் செல்ல முயன்ற ரத்தினசபாபதிக்குப் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. ஆளும்கட்சி எம்.எல்.ஏவாக இருந்தும் முதலமைச்சரைப் பார்த்து வழி அனுப்ப முடியவில்லையே எனக் கொதிப்படைந்து போய் உள்ளார்.
இதுபற்றி அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதிடம் பேசினோம், "விமான நிலையத்திற்கு உள்ளே நுழைவுவாயிலிலேயே காரை நிறுத்திட்டாங்க. அங்கிருந்து ரொம்ப தூரம் நடந்து சென்று உள்ளே செல்ல முயன்ற போது உள்ளே விடுவதற்கு மறுத்துட்டாங்க. விமான நிலையத்திற்குள் உள்ளே போகக்கூடாதுன்னா, எல்லாரையும் போக விடாம தடுத்திருக்கணும். என்னைத் தவிர மற்ற எம்.எல்.ஏக்கள் எல்லாரும் போயிட்டாங்க. எனக்குக் கீழே உள்ள பொறுப்பில் உள்ளவர்களும் போயிட்டு வந்திட்டாங்க. உங்க பேரு லிஸ்ட்லேயே இல்லைன்னு சொல்லி, என்னை மட்டும் அனுமதிக்க மறுத்துட்டாங்க.
1 மணி நேரம் காத்திருந்தோம். கடைசியாக முதலமைச்சரே வெளியே வந்துட்டாரு. எங்க ஊரில் திட்டங்களைத் துவக்க வந்த முதலமைச்சரை வரவேற்று, நிகழ்வுகளில் எல்லாம் கூடவே தான் நின்றேன். நான் தடுக்கப்பட்டது குறித்து காலையிலேயே புகார் வாசிக்கிறதா என்று அவரிடம் சொல்லலை. இந்த நிலையில தான், முதலமைச்சரை வழி அனுப்பி நன்றி செல்ல மாலை விமான நிலையத்திற்குள் செல்ல முயன்றபோதும் தடுத்து நிறுத்திட்டாங்க. இந்த முறை என்னோடு சேர்த்து கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ ஆறுமுகத்தையும் நிறுத்திட்டாங்க. ஏன் என்னை அனுமதிக்கலைன்னு தெரியலை. இதுபற்றி முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். விரைவில் இதுகுறித்துப் பேசுவேன்" என்றார்.
Also Read: `தமிழகத்தின் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி #NowAtVikatan
source https://www.vikatan.com/news/politics/aiadmk-mla-denied-permission-to-meet-chief-minister
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக