அந்தக் காலத்தில் தெருக் கூத்துகள் முக்கிய பொழுதுபோக்காக விளங்கி இருக்கின்றன. கூத்துப் பட்டறைகள் பலவும். பல இடங்களில் சிறப்புப் பெற்று விளங்கி வந்தன. கூத்துக்களின் பரிணாம வளர்ச்சியில் நாடகங்கள் தோன்றி மக்களை மகிழ்விக்கப் புறப்பட்டன. நாடகங்களைத் தொடர்ந்து திரைப்படங்கள் ஆட்சி புரியத் தொடங்கின. இன்று வரை அவற்றின் ஆட்சி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. திரைப்படங்களில் கோலோச்சியவர்கள் ஆட்சிக் கட்டிலிலும் அமரத் தொடங்கினர். ஆட்சியில் இருப்பவர்கள் மேலும் மேலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க. சினிமாவில் நடிக்கத் தொடங்கினர். ஏனெனில், திரைப்படம் என்பது அநேக மக்களை எளிதில் சென்றடையும் ஒரு மீடியா. மக்கள் வாழ்வோடு அரசியல் இணைந்ததுபோல் திரைப்படங்களும் மக்களின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறி விட்டது. கோடிகளில் புரளும் பெருந் தொழிலாகவும் முன்னேறி விட்டது.
‘ஸ்டூடியோக்கள்’ என்றழைக்கப்படும் அந்தக் காலக் குறுநில மன்னர்கள் கோட்டைகள் போல் விளங்கிய இடங்களில்தான் முதலில் படப்பிடிப்புகள் நடைபெற்றன. கதாநாயகனும் நாயகியும் ஓடிப்பிடித்துப் பாடி மகிழ்வதாக இருந்தாலும் சரி. ஹீரோவும் வில்லனும் மோதுவதாக இருந்தாலும் சரி. எல்லாம் பாதுகாக்கப்பட்ட ஸ்டூடியோக்கள் உள்தான். நீதி மன்றம். வணிக வளாகம். கோயில். அரண்மனை இப்படி கதைக் களத்திற்கு வேண்டிய அனைத்தும் உள்ளேயே. ’செட்டுகளாக’ எல்லாமே ‘இன்டோரில்’தான். அப்புறம் விஞ்ஞான முன்னேற்றங்கள் மெல்லப்பெருகியதும். ‘அவுட்டோர்’ ஹூட்டிங் ஆரம்பமாகியது.
பறக்கும் விமானங்களில் பறந்தபடி காதல் புரிவதும். ஓடும் ரயிலின் உச்சியில் நின்று சண்டை போடுவதும். வணிக வளாகங்களில் எதேச்சையாக ஹீரோ. ஹீரோயின் சந்திப்பதும். இடையில் வரும் வில்லனைத் துரத்தித் துரத்தி அடிப்பதுமென்று, விரும்பும் இடங்களில் எல்லாம் படப்பிடிப்பை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
படப்பிடிப்புத் தளங்கள் மாறியது போலவே கதைகளிலும் மாற்றங்கள் வர ஆரம்பித்தன. சரித்திர நாயகர்களையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள். பின்னர் சாதாரணமானவர்களையும் கருப் பொருளாக்கிக் காட்ட முனைந்தன. ரிக்ஷா இழுப்பவரும். வேட்டைக்குச் செல்பவரும் மட்டுமல்ல. பிணத்தை எரியூட்டுபவரும் கூடக் கதையின் நாயகன் ஆனார்கள்.
ராமாயணத்தையும். மஹா பாரதத்தையும் பலமுறை. பலரும் படமாக்கினார்கள். ’சம்பூர்ண ராமாயணம்’ என்றும் ‘மஹா பாரதம்’ என்றும் திரைக்கு வந்து மக்கள் மனத்தில் இடம்பிடித்த அந்தக் காவியங்களின் வெற்றி. தயாரித்தவர்களுக்கு மேன்மேலும் ஊக்கம் தர. பின்னர் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனியான கதைக்களம் அமைத்துத் திரையில் நடமாட வைத்தார்கள். ’கர்ணன்’’வீர அபிமன்யு’’லவகுசா’ என்பவை. சில உதாரணங்கள்.
அப்பொழுதெல்லாம் கிராமங்களில் ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் தற்காலிகமான சினிமா அரங்குகள் இருக்கும். ’தரை’ ‘பெஞ்ச்’ ‘சேர்’ என்று மூன்று பிரிவுகளுக்கு டிக்கட் வழங்கப்படும். தரை என்பது மணல் கொட்டிய பகுதி. திரையின் அருகிலேயே இருக்கும். சுமார் ஒரு சாண் உயரத்திற்கு மணல் இருக்கும். தரை டிக்கட் மிகவும் குறைவான கட்டணம் கொண்டது. ஏதோ பீச் மணலில் உட்கார்ந்து திரைப்படம் பார்ப்பது போலிருக்கும். கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில். சிலர் பீச்சில் படுத்த படி உள்ளதைப் போல படுத்தபடியும் படம் பார்ப்பார்கள். சங்கந்தி டூரிங் டாக்கீஸில் அப்படிப் படம் பார்த்த அந்த நாட்கள்தான் எவ்வளவு இனிமையானவை!
சுமார் ஆறேழு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சங்கந்திக்கு. இரவு உணவு முடிந்தபின். எனது சித்தப்பாவின் பாரை வண்டியில் அடியில் வைக்கோலைப் போட்டு மெத்தையாக்கி. அதன்மேல் ஜமக்காளத்தை விரித்து அதன் மீது அமர்ந்து புறப்படுவோம்- நைட் இரண்டாவது ஷோவுக்கு. குடும்ப உறுப்பினர்கள் ஏழெட்டுப் பேர் போவோம். போகும் நேரம் நிலாக் காலம் என்றால் மகிழ்ச்சி கூடி விடும். இரவின் நிலா வெளிச்சத்தில் வெளியுலகைக் காண்பதில்தான் எத்தனை ஆனந்தம். அதையெல்லாம் வார்த்தைகளில் வர்ணிப்பது கடினம். அனுபவித்தவர்களாலேயே முழுமையாகப் புரிந்து கொள்ள இயலும். படம் முடிந்து திரும்பி வருகையில் சிறுவர்களெல்லாம் தூங்கி விழ ஆரம்பித்து விடுவோம்.
அந்தக் காலத்திலிருந்தே. நமது தமிழ்ப்படக் கதாநாயகர்கள் தன்னந்தனியாகப் பல பேரை அடித்து வீழ்த்துவது காட்டப்பட்டுத்தான் வருகிறது. அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும் கூட! தீயவர்களையும் கெட்டவற்றையும் எதிர்த்துப் போராட வேண்டுமென்ற வேகம் நம் ஒவ்வொருவரின் மனத்திலும் படக் கதாநாயகன் போலவே வீற்றிருப்பதனால்தான் நம் மனது அதனை ஏற்றுக் கொள்கிறது என்கின்றனர் மனவியல் வல்லுனர்கள். தனி மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களே!
முற்காலப் படங்களில் பாடல்களுக்குக் குறைவிருக்காது. 25. 30 பாடல்கள் என்பது சர்வ சாதாரணம். ஒரு படத்தில் கதாநாயகி தண்ணீர் எடுக்கத் தன் தோழிகளுடன் கிளம்பிப் பக்கத்திலுள்ள கிணற்றுக்குச்சென்று தண்ணீர் எடுப்பார். அதற்குள் 3. 4 பாடல்கள் வந்து விடும். அப்புறம் பாடல்களைக் குறைத்தார்கள். பாடல்களுக்காகச் சில படங்கள் நன்கு ஓடிய வரலாறும் உண்டு. பாடல்கள் திரையில் வரும் நேரங்களில் ரசிகர்கள் பீடி. சிகரெட் பிடிக்கவும். டீ குடிக்கவும் சென்று விடுவது அக்கால வழக்கம். அதனைக் குறைக்கும் விதமாகவும். பாடல்களின் காட்சிகள் எல்லோரையும் கவர வேண்டுமென்ற நோக்கிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாத்தலங்களில் பாடல் காட்சிகளைப் படமாக்க ஆரம்பித்தார்கள். கறுப்பு-வெள்ளை மாறி, கலர் வந்ததும் வெள்ளித்திரைகளில் வண்ணங்களின் வீச்சு அதிகரித்தது. பாடல்களை முன்பே கேட்டு விடும் ரசிகர்கள். அந்தப் பாடலுக்காகவே குறிப்பிட்ட சில படங்களைக் காண வருவதுண்டு.
நல்ல சரீரமும்(உடற்கட்டும்). சாரீரமும் (குரல் வளமும்) உள்ளவர்களும். இசை ஞானம் பெற்றவர்களும்தான் அப்பொழுதெல்லாம் திரையில் பிரகாசிக்க முடியும்; பிரகாசித்தார்கள். ’பின்னணி’ பிரபலமானதும். முதலில் பாடல்கள் மட்டும் பின்னணிக் குழுவினரால் பாடப்பட்டன. திரை நாயகர்கள் வாயசைப்போடு நிறுத்திக் கொண்டார்கள். கதாநாயகர்களின் குரலுக்கேற்ப பின்னணி பாடுபவர்களும் கொண்டு வரப்பட்டார்கள். அதன் பின்னர் வந்த அதிவேக முன்னேற்றங்களால் நடிக்க வருபவர்கள் கையைக் காலையும் உதட்டையும் அசைத்தால் போதுமென்ற நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு வகைக்கும் உதாரணங்களை வாசகர்களாகிய நீங்களே அறிந்திருப்பீர்கள் என்பதால் நான் எவரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.
கதைகளைக் கேட்டுச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பாடல் எழுதுவது ஒரு புறமிருக்க. கவிஞர்கள் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த பாடல்களைத் திரைப்படங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதும் பழக்கமானது. ”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்ற பாடல் தாய் குழந்தையைப் பார்த்துப் பாடுவது போலத்தான் எழுதப்பட்டதாம். அந்தப் பாடலே பின்னர் “லவ்” சாங் ஆகிப் போனது. திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமும் ஆகி, காலத்தைக் கடந்து. தலை முறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது.
-ரெ.ஆத்மநாதன், காட்டிகன், சுவிட்சர்லாந்து
source https://cinema.vikatan.com/tamil-cinema/tamil-cinema-theater-nostalgia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக