திருமண வரம்தரும் தைப்பூசம்
முருகன், தமிழ்க்கடவுள் என்று தமிழர்கள் சொந்தம் கொண்டாடி மகிழும் தெய்வம். அப்படிப்பட்ட முருகனைக் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானவை வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலியன. இவற்றில் தைமாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் சிறப்புடையது. தைப்பூச நாளில்தான் இந்தப் பிரபஞ்சத்தில் நீரும் பின் அவற்றிலிருந்து பிறவும் தோன்றின என்கின்றன புராணங்கள். அப்படிப் பட்ட தைப்பூசத்தின் சிறப்புகள் அநேகம் அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
முருகப்பெருமான் வள்ளியை மணந்துகொண்ட நாள் தைப்பூசம் என்பது நம்பிக்கை. எனவே அந்த நாளில் முருகப்பெருமானை மனமுருக வேண்டிக்கொண்டால் திருமண வரம் கிடைக்கும் என்பார்கள் பக்தர்கள்.
முருகப்பெருமானுக்கு சூரனை அழிக்க தேவியானவள் தன் சக்தி முழுவதையும் கொண்டு ஒரு வேலை உருவாக்கி வழங்கி அருளி நாள் தைப்பூசம். முருகன் தேவியிடமிருந்து பெற்ற அந்த வேல் 'பிரம்ம வித்யா' சொரூபமானது.
கவலை தீர்க்கும் காவடி
முருக வழிபாடுகளில் முக்கியமானது 'காவடி' எடுத்தல். 'காவுதல்' என்றால் 'தூக்குதல்' என்று பொருள். முருகப்பெருமானுக்கான காணிக்கைகளைத் தூக்கிச் செல்லும் ஒரு தண்டாகவே காவடி அமைக்கப்பெற்றது.
இடும்பன் 'சிவகிரி', 'சந்திரகிரி' என்னும் இரண்டு மலைகளையும் அகத்தியரின் வழிபாட்டுக்காகக் கொண்டுவர முயன்ற நிகழ்வே பிற்காலத்தில் காவடி தூக்கும் வழக்கத்துக்குக் காரணமானது. முருகன் இடும்பனோடு திருவிளையாடல் புரிந்து அவருக்கு அருள்பாலித்ததால் அவனுக்குப் பின் காவடி எடுத்துவந்து வணங்கும் பக்தர்கள் அனைவருக்குமே அவன் கவலைகள் தீர்த்து அருள் பாலிப்பவன் ஆனான்.
காவடிகளில் பால், பன்னீர், புஷ்பம், தானியம், சந்தனம், சேவல், சர்ப்பம் எனப் பல்வேறு பொருள்களையும் உயிர்களையும் சுமந்துவந்து சமர்ப்பணம் செய்வது வழக்கம்.
காவடியின் தத்துவப் பொருள் ஒன்றும் சொல்லப்படுகிறது. சிவகிரி என்பது ஞான வாழ்க்கை, சக்திகிரி என்பது மனம் சார்ந்த உலக வாழ்க்கை. ஜீவாத்மாக்கள் இரண்டையும் சம அளவில் கொண்டு சுமக்க வேண்டும். தனிப்பட்ட அகவாழ்வுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இறை வழிபாட்டுக்கும் வழங்க வேண்டும் என்று கூறுவர்.
கல்வி வரம்தரும் குருபூசம்
தைப்பூச தினத்தன்று மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் சுவாமிக்குத் தேன் அபிஷேகம் செய்வார்கள். அந்தத் திருக்காட்சியைக் கண்டால் இனிய குரல் வளம் வாய்க்கும் என்று சொல்வார்கள்.
தைப்பூசத்தை குருபூசம் என்றே சொல்வார்கள். காரணம் அது திருவருளும் குருவருள் நிறைந்த நாள். பூச நட்சத்திரத்தின் பிரதான தேவதை குருபகவான். நவ கோள்களில் ஞானம் தருபவர் பிரகஸ்பதி எனப்படும் குருபகவான். அதுபோல் நட்சத்திரங்களிலும், பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. அதனால் தைப்பூசத் திருநாளில் புனித நீராடுவதும், குருபகவானாகிய பிரகஸ்பதியையும், குருவின் குருவான தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதும் மிகவும் அவசியம் என்று போற்றுகின்றன ஞான நூல்கள். எனவே இன்று தவறாமல் அனைவரும் தாங்கள் விரும்பி வணங்கும் மகானையோ அல்லது சிவபெருமானின் ஞான சொருபமான தட்சிணாமூர்த்தியையோ தவறாமல் வணங்க வேண்டியது அவசியம்.
புதிய கல்வியில் சேர, ஏற்கெனவே இருக்கும் கல்வியில் மேன்மை அடைய முயல உகந்த தினம் தைப்பூசம். இன்று தொடங்கும் கல்வி மிகுந்த வெற்றியைக் கொடுக்கும்.
மெய்ஞ்ஞானம் அருளும் ஜோதி தரிசனம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள், தன் தங்கையான சமயபுரத்து அம்மனுக்குக் காவிரிக் கரையில் தகுந்த மரியாதையுடன் சீர்வரிசைகள் கொடுப்பார். இந்த நிகழ்ச்சியை ஒட்டி சமயபுரத்தில் பத்து நாள்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் நடைபெறும்.
தைப்பூசம் என்றதும் நம் நினைவுகளில் வருவது வடலூர் வள்ளல் பெருமான். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய அந்த மாதவர் ஜோதி வடிவம் எடுத்து இறைவனோடு கலந்த தினம் தைப்பூசம். இந்த நாளில் வடலூரில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். வழக்கமாக ஆண்டின் பிற மாதங்களிலெல்லாம் ஆறு திரைகள் மட்டுமே விலக்கிக் காட்டப்படும் ஜோதிதரிசனம் தைப்பூச திருநாளில் மட்டுமே ஏழு திரைகளும் முழுமையாக நீக்கப்பட்டு முழுமையாக ஜோதி தரிசனம் காண வழி செய்யப்படும்.
வெற்றிகள் குவிய...
தைப்பூச நன்னாளில்தான் திருஞானசம்பந்தர், பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து பூம்பாவையை எழுந்து வரும்படி பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.
மேலும் இந்தத் தைப்பூச புனித நாளில் தொடங்கும் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில் ஏதேனும் சுபகாரியப் பேச்சுவார்த்தையையோ அல்லது வாழ்க்கை சார்ந்த வேலை சார்ந்த புதிய முன்னெடுப்புகளையோ மேற்கொள்பவர்களுக்கு அவை நல்ல முறையில் கைகூடி வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை.
ஆரோக்கியம் சிறக்க...
இன்று (18.1.2022) தைப்பூசம். இந்த நாள் முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையாகவே அமைந்திருப்பது விசேஷம். செவ்வாய் பகவானின் அனுகிரகம் கிடைக்க நாம் வணங்க வேண்டியது முருகப்பெருமானையே. முருகனுக்கு உகந்த நாளாகவும் செவ்வாய்க்கிழமை விளங்குகிறது. நம் உடலில் ஓடும் குருதிக்கு செவ்வாயே அதிபதி. அப்படிப்பட்ட செவ்வாய்பகவானின் அருள் பரிபூரணமாக இருந்தால் நாம் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.
இந்த ஆண்டு தைப்பூசம் செவ்வாய்க்கிழமையில் வருவது மிகவும் சிறப்புடையது. இந்த நாளில் நாம் வீடுகளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி திருநீறு அணிந்து கந்த சஷ்டிக்கவசம் பாடி முருகப்பெருமானை வணங்குவோம். அதன்பின் இயன்றவர்கள் விரதம் இருந்து வழிபடலாம். முடியாதவர்கள் எளிய உணவுகளை உட்கொண்டு முருகப்பெருமானின் துதிகளைப் பாடிப் பயிலலாம். மாலை மீண்டும் ஒருமுறை நீராடி முருகனைத் துதித்துப் பின் விரதம் முடிக்கலாம். புதிய முயற்சிகளைத் தொடங்க உகந்த நாள் தைப்பூசம். நமக்கு எத்துறையில் வெற்றிக்காண வேண்டும் என்று விரும்புகிறோமோ அத்துறையில் வெல்ல முதல் அடியை இந்தத் தைப்பூச தினத்தன்று எடுத்துவைக்கலாம். அனைத்தும் அந்த முருகப்பெருமானின் கருணையால் வெற்றியாகும்.
source https://www.vikatan.com/spiritual/gods/the-glory-of-thaipusam-and-a-guide-to-worship-lord-murugan-on-this-day
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக