"போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!"
பெருமானது பூங்கழல்களைப் போன்ற செந்தாமரைகள் பூத்திருக்கும் தடாகங்களும் செந்நெல் வயல்களும் நிறைந்திருக்கும் திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருக்கும் எம் சிவபெருமானே! நந்திக் கொடியோனே! எம்மையும் ஆட் கொண்டு அருளியவனே! எம் வாழ்வின் முதல் பொருளே உமக்கு வந்தனம்! புலர்ந்தது பொழுது! எமது வினைகள் யாவும் தீர உமது பொன் திருவடிகளில் மலர் தூவி போற்றிப் பணிய வந்துள்ளேன். எம்பிரானே! உமது அழகிய திருவதனத்தில் புன்னகை மலர எமக்கு அருள் செய்து எழுந்தருள்வாயே!
சதாசர்வ காலமும் இயங்கிக் கொண்டிருக்கும் சிவமே, உனக்கு உறக்கம் என்பது கற்பிதமே. நீ எப்போதும் உறங்குவதில்லை. அதனால் உன்னை எழுப்ப வேண்டிய அவசியமும் இல்லை. இந்த திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் என்பது உன் வழியே எங்களுக்குள் இருக்கும் ஆன்மாவை விழித்தெழச் செய்யும் முயற்சியே. சகல ஜீவன்களுக்கும் தலைவனான உம்மை இந்த அதிகாலையில் போற்றிப் பணிந்து பாட வந்திருக்கிறோம். ஆன்மாக்களின் தலைவனே, எமை ஆண்டருளும் ஈசனே! நாங்கள் யார்? எங்கிருந்து வந்திருக்கிறோம், எதற்காக வந்திருக்கிறோம் என்பதை எல்லாம் அறியாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும் இந்த ஆன்மாவை விழித்தெழச் செய்து உம்மை காட்டி, உம திருவடிகளைச் சூட்டி ஏற்றுக் கொள்வாய். இதுவே இந்த வேளையில் எங்கள் பிரார்த்தனை.
விழித்துக் கொண்ட ஆன்மா இறைவனை உணர்ந்து கொள்ளும். திருப்பெருந்துறையில் ஈசனைக் கண்டு கொண்ட வாதவூராரின் ஆன்மா, ஈசனது திருவடிகளை ஏற்றுக்கொண்டது. அதனால் ஈசன் வாதவூராருக்கு குருவானார். குருவை கண்டு கொண்ட மாணிக்கவாசகரும் திருவாசகத்தின் உயர்ந்த பகுதியான சிவபுராணத்தை உடனே உணர்ந்து பாடினார். அப்போது 'தென்னவன் பிரம்மராயன்' எனும் வாதவூரார் மாணிக்கவாசகராக மாறினார். இப்படித்தான் ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனைக் கண்டு கொண்டு உயர்ந்த நிலையை எட்ட வேண்டும். அதற்கு ஆன்மா விழிக்க வேண்டும். அதற்கே பள்ளியெழுச்சிகள்.
"வரையறைக்குட்பட்ட சட்டத்துக்குள் உட்பட்டிருக்கும் நானே, சகலமுமாய் இருக்கிறேன். அனைத்துக்கும் அப்பால் இருக்கிறேன். நானே மலைகள், நானே நதி, நானே நட்சத்திரங்கள், நானே அண்டங்கள், நானே சகலத்தின் பேருயிர், நானே மலர்ச்சி, நானே புன்னகை. நானே சகல படைப்புகளையும் உள்வாங்கும் ஞானமும் சக்தியும்...!' என்பதை ஆன்மா உணர இறைவனை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்து கொண்ட பாரதி,
"காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்!" என்று பிரகடனப்படுத்தினான்.
ஆன்மிகத்தின் பயன் இதுதான், வழிபாட்டின் நோக்கம் இதுதான். சிவத்தை உணர்ந்து சிவமாக மாறிப்போவதுதான் பக்தியின் உச்சம். அந்த நிலைக்கு உயர வழிபாடும் பக்தியும் வழிகாட்டுகின்றன. ஒழுக்கமும் உயர்ந்த சிந்தனையும் கொண்ட ஆன்மா இறைவனை எளிதில் கண்டுகொள்ளும். சிவத்தை அறிய சிவமே அருள் புரியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஆன்மாக்களின் தலைவனான ஆத்மநாதன், திருப்பெருந்துறை எனும் தலத்தில் எழுந்தருளி அருளுகிறான். துறை என்பது நீர் வழியே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்திச் செல்ல ஏறும் பகுதி. அப்படித்தான் நம் ஆன்மாவை சிவலோகம் நோக்கி அழைத்துச் செல்லும் புண்ணிய துறைகளில் திருப்பெருந்துறை முதலாவதாக உள்ளது. எனவே பெருந்துறையில் அருளும் ஈசனைப் பற்றிக் கொண்டால் ஆன்மா விழித்துவிடும். பிறகு மாயையில் சிக்காமல் பிழைத்தும் விடும் என்கிறார் மாணிக்கவாசகர்.
"ஏவப் பட்ட மனம் யாருடைய விருப்பத்தால் செல்கிறது, ஏற்கனவே சிக்கிக் கொண்ட ஆன்மா ஏன் தவிக்கிறது, முக்கியப் பிராணனைச் செலுத்துவது யார், யாருடைய சங்கல்பத்தால் வாக்கு பேசப் படுகிறது, கண்களையும் காதுகளையும் எந்த இறைவன் செயல்படுத்துகிறான்!" என்று விளக்கம் கேட்டு பதிலும் சொல்கின்றன உபநிஷதங்கள். எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான். நம்மை ஆட்டுவிப்பதும், ஆன்மாக்களை கூட்டிவிப்பதும் ஈசன் ஒருவன் தான். அவனே தலைவன். அவனை அறிந்து கொண்ட ஆன்மா, ஷாந்தி அடைந்துவிடுகிறது என்பதே. எனவே இன்னமும் தாமதிக்காமல் ஒவ்வொரு ஆன்மாவும் ஈசனை உணர்ந்து கொள்ள முற்பட வேண்டும். அதற்கு திருமுறைகளும் ஆழ்ந்த தியானமும் உதவி செய்யும். அதற்கும் மேலாக தாயைத் தேடும் கன்றாக நம் ஆன்மா ஈசனைத் தேட வேண்டும். தேடினால் கண்டு கொள்ளலாம்.
ஆன்மா எனும் தும்பி ஈசனின் பூங்கழல்களைப் பற்றிக்கொண்டால் எல்லா காலங்களிலும் இன்புற்று இருக்கும் தேனைப் பருகலாம் என்பது மாணிக்கவாசகரின் கருத்து. அதற்கு இந்த மார்கழி மாத விரதம் பெரிதும் உதவும் என்பதும் அவர் கூற்று!
"நானார்என் உள்ளமார் ஞானங்களார் என்னையார றிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ!"
source https://www.vikatan.com/spiritual/gods/margazhi-utsavam-day-21-thiruppalli-yezhuchi-song-1-by-manickavasagar-about-soul-and-god-relationship
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக