Ad

வெள்ளி, 23 அக்டோபர், 2020

#Vijay65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்... வெற்றிமாறன்தான் புதிய இயக்குநரா?!

விஜய்யின் 65-வது படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சன் டிவி தயாரிக்க, லாக்டெளனிலும் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தன. இந்நிலையில் திடீரென ஏ.ஆர்.முருகதாஸ் #Vijay65 படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்றும் விலகியிருக்கிறார் என்றும் செய்திகள். வெற்றிமாறன் விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கப்போவதாகவும் தகவல். உண்மை என்ன?!

விஜய்யின் 65-வது படத்தை முதலில் சுதா கொங்கரா இயக்குவதாக இருந்து பின்னர் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளுக்கே நாட்கள் அதிகமாகும் எனச் சுதாவே சொல்லி படத்தில் இருந்து விலகினார். அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் விஜய்யை சந்தித்து ஒன்லைன் சொன்னார். விஜய்க்கு ஒன்லைன் மிகவும் பிடித்துவிட உடனடியாக ஓகே சொல்லிவிட்டார். ஆனால், வெற்றிமாறனுக்கு சூர்யாவின் 'வாடிவாசல்' உள்பட இரண்டு படங்கள் பைப்லைனில் இருக்க, வெற்றிமாறனால் உடனடியாக விஜய் படத்தை தொடங்கமுடியாத நிலை. இந்நிலையில்தான் விஜய் 65 ப்ராஜெக்ட்டுக்குள் வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஏ.ஆர் முருகதாஸ்

முருகதாஸும் - விஜய்யும் ஏற்கெனவே 'துப்பாக்கி', 'கத்தி', 'சர்கார்' என மூன்று படங்கள் இணைந்து பணிபுரிந்திருக்கிறார்கள். இதில் 'சர்கார்' வெற்றிப்படமாக அமையவில்லை என்பதோடு முருகதாஸின் கடைசிப்படமான ரஜினிகாந்த்தின் 'தர்பார்' படமும் சுமாராகப்போகவே ஆரம்பத்தில் இருந்தே ஏ.ஆர்.முருகதாஸிடம் முழுக்கதையையும் கேட்டுக்கொண்டிருந்தது சன் டிவி.

விஜய்யிடம் ஒன்லைன் மட்டுமே சொல்லி ஓகே வாங்கியிருந்த முருகதாஸ் கடந்த பிப்ரவரியில் இருந்தே ஸ்கிரிப்ட் வேலைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தார். லாக்டெளனின் போதும் ஜூன் மாதவாக்கில் நடிகர் விஜய்யை அவரது அடையாறு அலுவலகத்தில் சந்தித்து கதை விவாதமும் செய்தார். ''அவசரம் எதுவும் இல்லை. முழு ஸ்கிரிப்ட்டையும் கொண்டுவாருங்கள். அதன்பிறகே பட அறிவிப்பை வெளியிடலாம்'' எனச் சொல்லியிருக்கிறார் விஜய்.

வெற்றிமாறன்

முருகதாஸ் சொன்னது முழுக்க முழுக்க அரசியல் கதை என்கிறார்கள். இதில் விஜய்க்கு சில சந்தேகங்கள் இருக்க, அவர் சன் டிவியிடம் முழுக் கதையையும் சொல்லச் சொல்லியிருக்கிறார். தமிழக அரசியலை மையப்படுத்திய இந்தக் கதையில் தயாரிப்பு தரப்புக்குச் சில விஷயங்கள் பிடிக்கவில்லை என்கிறார்கள். முருகதாஸும் தயாரிப்பு தரப்பு சொன்ன மாற்றங்களை செய்யவிருப்பமில்லை எனச்சொல்ல, அப்படியானால் உங்களுடன் பணியாற்ற எங்களுக்கும் விருப்பம் இல்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். விஜய்யிடம் விவரத்தை சொல்லிவிட்டு படத்தில் இருந்து விலகியிருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

வெற்றிமாறன் சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தை முடித்தப்பிறகே விஜய் படத்துக்குள் வரமுடியும் என்பதால் இப்போதைக்கு விஜய் - வெற்றிமாறன் படம் சாத்தியமில்லை. இதனால் வேறு இயக்குநர்களை இறுதிசெய்யும் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

'தடம்' படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி ஏற்கெனவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விஜய் தரப்போ ''எந்த இயக்குநரையும் நாங்கள் இன்னும் இறுதிசெய்யவில்லை. எந்த அவசரமும் இப்போதைக்கு இல்லை'' என்கிறது.



source https://cinema.vikatan.com/tamil-cinema/who-is-going-to-direct-vijay-65

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக