சென்னை சூப்பர் கிங்ஸில் தமிழக வீரர்கள் இல்லையே, இருக்கும் வீரர்களுக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்கிற புலம்பல்களுக்கு இடையே மற்ற அணிகளில் இருக்கும் தமிழக வீரர்கள்தான் இந்த 2020 ஐபிஎல்-ன் கேம் சேஞ்சர்ஸ்!
ஸ்பீட் கிங் பிரட் லீயே, "இவர்போலத்தான் பந்து வீசவேண்டும்... அவுட்ஸ்டாண்டிங்" என நடராஜனைப் பாராட்டிப்பேசுகிறார். வாஷிங்டன் சுந்தர் பவர்ப்ளே ஓவர்களில் பந்தை சுழலவிட்டு எதிர் அணியின் பேட்ஸ்மேன்களை ரன் எடுக்கவிடாமல் தடுக்கிறார். வருண் சக்ரவர்த்தியோ இந்த ஆண்டின் முதல் ஃபைபர் (5 விக்கெட்கள்) எடுத்து சாதனைப்படைத்திருக்கிறார் என இது தமிழக வீரர்களின் டாப் சீசனாக இருக்கிறது. இந்த தமிழக வீரர்கள் இன்று ஐபிஎல்-ன் சாதனை நாயகர்களாக இருப்பதற்கு முக்கியக் காரணம் தமிழ்நாடு பிரிமியர் லீக். இதற்கு விதை போட்டவர் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.
பெட்டிங் பிரச்னைகளால் சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டதோடு, என்.சீனிவாசனை சுற்றி பல்வேறு சர்ச்சைகள். அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது, சீனிவாசன் பதவி விலகல், ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இரண்டு ஆண்டு தடை என எல்லா எதிர்முறை செய்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டேயிருந்தன. இனி சென்னை இந்தியக் கிரிக்கெட்டின் தலைமையிடமாக இருக்காது, சீனிவாசன் காணாமல் போய்விடுவார் என்கிற பேச்சுகள் வந்தபோதுதான் 'தமிழ்நாடு பிரிமியர் லீக்' அறிவிப்பு வந்தது. சென்னை போனால் என்ன தமிழ்நாடே திரும்ப வரும் என்பதுதான் சீனிவாசன், மும்பை லாபிக்கு கொடுக்கவிரும்பிய பதிலடி.
முதல்முறையாக ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாத 2016 சீசனில் தொடங்கியது தமிழ்நாடு பிரிமியர் லீக். சென்னை மட்டுமல்லாது திருநெல்வேலி, திண்டுக்கல் என தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் கிரிக்கெட் கொண்டு செல்லப்பட்டது. பொதுவாக உள்ளூர் போட்டிகளைப் பார்க்க நம்மூரில் கூட்டம் கூடாது. பிசிசிஐ நடத்தும் ரஞ்சி கோப்பை, முஷ்டாக் அலி தொடர் என இந்தியாவின் டாப் வீரர்கள் விளையாடும் போட்டித்தொடர்களுக்கே இதுதான் நிலைமை. ஆனால், 2016-ல் நடந்த தமிழ்நாடு பிரிமியர் லீகின் முதல் மேட்சைக் காணவே சேப்பாக்கம் மைதானத்துக்கு 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்திருந்தார்கள்.
அடுத்து நத்தம், திருநெல்வேலி மைதானங்களில் போலீஸைக் கொண்டு கட்டுப்படுத்தும் அளவுக்குக் கூட்டம். "தமிழ்நாட்ல, கிரிக்கெட்டை கிராமங்களுக்கு எடுத்துட்டுப் போயிட்டாங்க" என்றார் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேடன். முதல் ஆண்டே ஸ்டார் ஸ்போர்ட்ஸும் கைகோக்க உலகமே தமிழ்நாடு பிரிமியர் லீகைப் பார்த்தது.
தினேஷ் கார்த்திக், லட்சுமிபதி பாலாஜி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பங்களிப்பால் முதல் ஆண்டு தூத்துக்குடி அணி சாம்பியனானது. முதல் சீசனில் இருந்தே ஜெகதீசன், கெளஷிக் காந்தி, பாபா அபராஜித் ஆகியோர் பேட்டிங்கில் கலக்க, ஆண்டனி தாஸ், முருகன் அஷ்வின், அஷ்வின் க்ரிஸ்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பெளலிங்கில் மிரட்டினார்கள்.
முதல் சீசனில் திண்டுக்கல் அணிக்காக விளையாடினார் தங்கராசு நடராஜன். இதில் தூத்துக்குடி அணிக்கு எதிரானப் போட்டிதான் நடராஜனை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தூத்துக்குடி அணி 120 ரன்கள்தான் அடித்திருந்தது. 4 ஓவர்கள் போட்டு 22 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்திருந்தார் நடராஜன். இந்தப்போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்ததோடு பேட்ஸ்மேனாகவும் டாப் ஆர்டரில் களமிறங்கி 51 பந்துகளில் 61 ரன்களை அடித்து தோல்வியைத் தவிர்த்து மேட்சை டை ஆக்கினார் திண்டுக்கல் அணியின் முருகன் அஷ்வின்.
இப்போது மேட்ச் சூப்பர் ஓவருக்குப் போனது. முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 12 ரன்களை அடிக்க அதை டிஃபெண்ட் செய்யப் பந்து நடராஜனிடம் கொடுக்கப்பட்டது. ஒரு விக்கெட் எடுத்ததோடு, அபினவ் முகுந்த், வாஷிங்டன் சுந்தர் என இருவரையும் யார்க்கர்களால் அச்சுறுத்தி, வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் நடராஜன். இந்த ஓவரில் மட்டுமே 4 யார்க்கர்கள். நடராஜன் பிரபலமானதோடு, பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே கலக்கிய முருகன் அஷ்வினும் அடையாளம் காணப்பட்டார். இப்போது 2020 ஐபிஎல் சீசனில் முருகன் அஷ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்காக சிறப்பான பங்களிப்பைக் கொடுக்க, ஹைதராபாத்தின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்டாக சாதித்துக்கொண்டிருக்கிறார் நடராஜன்.
2018 தமிழ்நாடு பிரிமியர் லீக் சீசனில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்குக்கு முக்கிய காரணம் வருண் சக்ரவர்த்தி. டென்னிஸ் பால் கிரிக்கெட்டரான வருண் சக்ரவர்த்தி 2018 வரை டிவிஷன் கிரிக்கெட் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தவர். விக்கெட் கீப்பராக, வேகப்பந்து வீச்சாளாராக என என்னவெல்லாமோ முயற்சி செய்துவிட்டுப் பிறகு கிரிக்கெட்டுக்கே குட்பை சொல்லிவிட்டு தான் படித்த ஆர்க்கிடெக்சர் வேலைக்குப் போனவரை, கிரிக்கெட் கனவுகள் தூங்கவிடவில்லை. மீண்டும் கிரிக்கெட் களத்துக்குள் இந்தமுறை லெக் ஸ்பின்னராக வந்தார்.
டிவிஷனல் ஆடிக்கொண்டிருந்தவருக்கு, மதுரை அணிக்காக 2018 தமிழ்நாடு பிரிமியர் லீகில் ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது. முதல் சீசனே இவரின் பர்ஃபாமென்ஸ் "யாருப்பா இந்தப் பையன்?" எனப் பலரின் புருவங்களை உயர்த்தியது. அந்த ஆண்டு 10 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்கள்தான் எடுத்தார் வருண். ஆனால், எக்கனாமியில் அவரை வீழ்த்த ஆளே இல்லை. 10 போட்டிகளிலும் இவரது எக்கானமி 5 ரன்களைத்தாண்டவில்லை. திண்டுக்கல் அணியுடனான இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜெகதீசனின் விக்கெட்டை எடுத்தவர், அடுத்து சிலம்பரசனின் விக்கெட்டையும் எடுத்தார். வருணின் 4 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே அடித்தது திண்டுக்கல். இதில் ஒரு மெய்டன் ஓவர்.
Also Read: விக்கெட் சக்ரவர்த்தி... வருணின் மாயாஜாலத்தில் வீழ்ந்த டெல்லி! #KKRvDC
மிஸ்ட்ரி ஸ்பின்னர் என மீடியாக்கள் கொண்டாட, வருணின் இந்த பர்ஃபாமென்ஸைப் பார்த்த கிங்ஸ் லெவன் அணி 8.4 கோடி ரூபாய்க்கு எடுத்தது. ஆனால், காயம் காரணமாக கடந்த ஆண்டு ஒரே ஒரு போட்டியில்தான் விளையாடினார் வருண். இதனால் 2020 சீசனில் அவரை அணியில் இருந்து ரிலீஸ் செய்தது பஞ்சாப். ஒரு சீசனில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடிய வருணை யாருமே ஏலத்தில் எடுக்கமாட்டார்கள் என எதிர்பார்க்க, ஏற்கெனவே தங்கள் அணியில் நெட் பெளலராக இருந்த வருணை 4 கோடிக்கு எடுத்தது கொல்கத்தா. இவரை அணியில் எடுப்பதற்கு தினேஷ் கார்த்திக் மிக முக்கியக் காரணம். இந்த சீசனிலும் எக்கானமிக்கலாகப் பந்து வீசினாலும் விக்கெட்கள் சரியாக எடுக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்த வருண் சக்ரவர்த்தி, டெல்லி அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, கொல்கத்தாவுக்கு முக்கியமான கட்டத்தில் வெற்றியைப் பெற்றுத்தந்திருக்கிறார்.
இவர்கள் மட்டுமல்ல இன்னும் ஐபிஎல் களத்தில் தங்கள் திறமையை நிரூபிக்க ஜெகதீசனும், சாய் கிஷோரும் சரியான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு பெளலிங்கில் அசத்திய பெரியசாமி தற்போது நெட்பெளலராக கொல்கத்தா அணியில் இருக்கிறார். அடுத்த ஆண்டு பெரியசாமிக்குப் பெரிய வாய்ப்பு கிடைக்கலாம். ஐபிஎல்-க்கு கேம் சேஞ்சர்களைத் தந்திருக்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்- செப்டம்பரில் நடக்கும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக தள்ளிப்போன தமிழ்நாடு பிரிமியர் லீக், ஐபிஎல் முடிந்ததும் நவம்பரில் தொடங்கயிருக்கிறது. இது தமிழ்நாடு பிரிமியர் லீகின் ஐந்தாவது சீசன்.
சென்னை போனால் என்ன, தமிழ்நாடே திரும்ப வந்திருக்கிறது!
source https://sports.vikatan.com/ipl/how-tamilnadu-premier-league-helped-youngsters
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக