முந்தைய சீசன்களில் `அவ்வை சண்முகி' டெல்லி கணேஷைப் போல் தெளிந்து தெளிந்து அடிவாங்கிக்கொண்டிருந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி, இந்த சீசனில் `அபூர்வ சகோதரர்கள்' டெல்லி கணேஷைப் போல் சீரியஸ் அவதாரம் எடுத்து ஆச்சர்யம் கூட்டி வருகிறது. என்ன, அவ்வப்போது அந்த துப்பாக்கி பின்னாடியும் சுடும் என்பதுதான் சீரியஸ் காமெடி!
அபுதாபியில் நடைபெற்ற 2020 ஐபிஎல்-ன் 42வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. நான்கு போட்டிகளில் இரண்டில் ஜெயித்தாலே போதும். டெல்லி அணி ப்ளே ஆஃப் நுழைவது நிச்சயம். முதல் இரண்டு இடங்கள் என்பது லட்சியம்! கொல்கத்தா அணி அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் ஜெயித்தால் கவலையே இல்லை. ஆனால், ஒன்றில் தோற்றால் கூட, கையில் கால்குலேட்டரோடு அமர வேண்டியதுதான்.
டாஸ் வென்ற ஷ்ரேயாஸ், கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். பான்ட்டனுக்கு பதிலாக நரைனும், குல்தீப்புக்கு பதிலாக நாகர்கோட்டியும் கொல்கத்தா அணிக்குள் நுழைந்தனர். டெல்லி அணியில், சாம்ஸுக்கு பதிலாக நார்க்கியாவும், ஷாவுக்கு பதிலாக ரஹானேவும் இணைந்தனர். கில் மற்றும் ராணா கொல்கத்தாவின் இன்னிங்ஸை ஓப்பன் செய்ய, முதல் ஓவரை வீசினார் துஷார் தேஷ்பாண்டே.
"டாஸ் ஜெயிச்சு பெளலிங் எடுக்குற, முதல் ஓவரையே துஷாருக்கு கொடுக்குற. இன்னா தல" என வெறித்துப்பார்த்தார்கள் டெல்லி வாலாக்கள். முதல் ஓவரின் 2-வது பந்தை பாயின்ட் திசையிலும் 4-வது பந்தை மிட்-ஆன் திசையிலும் பவுண்டரிக்கு விரட்டினார் கில். வெறித்து நின்ற டெல்லி வாலாக்கள், வெறுத்துப்போனார்கள். 2வது ஓவரை வீசவந்தார் `மின்னல் முரளி' நார்க்கியா. 5-வது பந்தில், கில் விக்கெட் காலி. மீண்டும் வந்தார் துஷார். ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரியை விரட்டினார் ராணா. 4-வது ஓவரை வீசவந்தார் கத்தரிப்பூ கலர் தொப்பி அணிந்த ரபாடா. பவுண்டரிகள் ஏதுமில்லை.
அக்ஸர் படேல் வீசிய 5-வது ஓவரில், இன்னொரு பவுண்டரியை விளாசினார் ராணா. தானும் மேட்சில் இருப்பதை இந்த உலகிற்கு தெரியப்படுத்த நினைத்து, நார்க்கியா வீசிய 6-வது ஓவரில் ஒரு பவுண்டரியை விரட்டினார் த்ரிபாதி. ஆனால், த்ரிபாதி நினைத்தது சரிபாதிதான் சரியாக நிகழ்ந்தது. அதே ஓவரில், அசுர வேக யார்க்கர் ஒன்றில் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். பவர்ப்ளேயின் முடிவில், 2 விக்கெட்களுக்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபகரமான நிலையில் இருந்தது கொல்கத்தா அணி.
தினேஷ் கார்த்திக் வந்தார். 6 பந்துகளை சாப்பிட்டார். `ஃப்ளே ஆஃப் தேசம் அடைந்தவுடன், அடியேனை ஒருநொடி நின்று நினையுங்கோள்' என சொல்லிவிட்டு ரபாடா வீசிய பந்தில் அவுட்டாகி கிளம்பினார். அப்போதுதான், தூதுவன் சுனில் நரைன் வந்தார். அஷ்வின் வீசிய 9வது ஓவரில், டமாரென ஒரு சிக்ஸரும், மடாரென ஒரு பவுண்டரியும் வெளுத்தார். `தூதுவன் வருவான். சிக்ஸ் மழை பொழியும்' என காத்திருந்த கொல்கத்தா அணி குஷியானது. அடுத்த 8 ஓவர்கள், டெல்லி அணியை வெச்சி செய்தது.
துஷார் வீசிய 10வது ஓவரில், பேக்வார்ட் பாயின்டில் பவுண்டரியை விரட்டிய நரைன், உஷாராக துஷாரை ராணாவின் கையில் ஒப்படைத்தார். `உனக்கும் பிடிக்குமா, எனக்கும் பிடிக்கும்' என அவரும் அவர் பங்குக்கு ஒரு சிக்ஸரைப் போட்டார். `போன மேட்ச் பத்து பவுண்டரி, இந்த மேட்ச் எட்டுதான். எப்படி பார்த்தாலும் நமக்கு ரெண்டு லாபம். அவிய்ங்களுக்கு அம்புட்டும் நட்டம்' என தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பந்து வீசினார் துஷார். பேக்வர்ட் திசையில் இன்னொரு பவுண்டரியை விரட்டினார் நரைன்.
`திருப்பி அடிக்குற மாதிரி தெரியுதே' என அலார்ட்டான ஸ்ரேயாஸ், ஸ்டாய்னிஸை பந்து வீச அழைத்தார். அவர் ஓவரிலும் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ராணா. 12வது ஓவரை வீசவந்தார் அன்ப்ரெடிக்டபிள் அஷ்வின். ஷார்ட் தேர்ட் மேன் திசையில் ராணா ஒரு பவுண்டரி, மிட் விக்கெட் திசையில் நரைன் ஒரு சிக்ஸர், எக்ஸ்ட்ரா கவர் திசையில் ராணா இன்னொரு பவுண்டரி என பொறித்து அனுப்பியது கொல்கத்தா. `புள்ள பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கணவா கண்டேன்' என நொந்துப்போனார் அஷ்வின்.
நார்க்கியா வீசிய 13வது ஒவரின் கடைசிப்பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ராணா, அரைசதத்தை எட்டிப்பிடித்தார். அந்த அரைசதத்தை தனது மாமனாருக்கு சமர்ப்பணம் செய்தார். அரைசதம் அடிக்கும் ஆசை நரைனுக்கும் வந்துவிட, தெரியாத்தனமாக வந்து சிக்கினார் ஸ்டாய்னிஸ். மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸர், எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி என பௌலரை கதிகலங்கவைத்தார் நரைன். அதே ஓவரில், ராணாவும் ஒரு பவுண்டரியை விரட்டிவிட்டார். அடுத்த ஓவர் அஷ்வின். ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி அரைசதம் கடந்தார் நரைன்.
6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் என ஊர்ந்துக்கொண்டிருந்த கொல்கத்தா அணி, 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் என உசைன் போல்ட் போல ஓடிக்கொண்டிருந்தது. `ரபாடா, நார்க்கியா... ரெண்டு பேரும் எங்கய்யா?' என டெல்லி ரசிகர்கள் தரையில் உருண்டுக்கொண்டிருக்க, துஷாரை அழைத்து ஓவர் கொடுத்தார் ஸ்ரேயாஸ். நங்கென ஒரு பவுண்டரியை விரட்டினார் நரைன். 17வது ஓவரில்தான் தலையைக் காட்டினார் ரபாடா... அப்பாடா!
முதல் பந்தில் ராணாவுக்கு ஒரு பவுண்டரியை விட்டுக்கொடுத்தாலும், ஐந்தாவது பந்தில் நரைனின் விக்கெட்டைக் கழட்டி கத்திரிப்பூ கலர் தொப்பிக்கு நியாயம் சேர்த்தார். ஆனாலும், ராணா அசரவில்லை. மீண்டும் ஒரு பவுண்டரியை தட்டிவிட்டார். `என்னய்யா ஃபீல்டிங் இது. எங்கய்யா இந்த கேப்டன்?' என டெல்லி வாலாக்கள் வெறிக்கொண்டு தேட, கேப்டன் ஷ்ரேயாஸே எங்கோ தொலைதூரத்தில் ஃபீல்டிங்கில் நின்றுகொண்டிருந்தார். பிறகு, ராணாவுடன் மார்கன் ஜோடி சேர்ந்தார். 53 பந்துகளில் ராணா 81 ரன்களும், 9 பந்துகளில் மார்கன் 17 ரன்களும் வெளுத்துவிட்டு, `நட்புக்காக' விஜயகுமார் - சரத்குமாரைப் போல ஒன்றாக பெவிலியனுக்கு கிளம்பினர். 20 ஓவரின் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எனும் எதிர்பாராத இலக்கை நிர்ணயித்தது கொல்கத்தா.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு, தசம ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாய் ஓப்பனிங் இறங்கியது ரஹானே - தவான் ஜோடி! முதல் ஓவரை வீசவந்தார் கம்மின்ஸ். இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ரஹானே அவுட். எல்.பி.டபிள்யு! `இதைத்தானே ப்ரித்விஷாவும் பண்ணான். இதுக்கு எதுக்கு யூ-டர்ன் அடிச்சு, டேபிளை உடைச்சு' என தலையில் கைவைத்தார்கள் டெல்லி ரசிகர்கள். `நான் பண்ண தப்ப, நானே சரி பண்றேன்டா' என உள்ளே நுழைந்தார் ஷ்ரேயாஸ்.
ப்ரசித் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரில், ஒரு பவுண்டரியை விரட்டி ஆசைக்காட்ட தொடங்கினார் தவான். `மூணாவது சென்சூரி இன்னைக்கு இருக்குடோய்' என டெல்லி ரசிகர்கள் சிரிப்பை உதிர்க்க, கம்மின்ஸ் வீசிய மூன்றாவது ஓவரிலேயே போல்டாகி கிளம்பினார் தவான். நம்பிக்கை வைத்த இருவரும் கையை விரித்த கோபத்தை, சின்னஞ்சிறுவன் நாகர்கோட்டியிடம் காண்பித்தார் கேப்டன் ஷ்ரேயாஸ். பொளேர் பொளேரென இரண்டு பவுண்டரிகள். `எனக்கும் ஆத்திரம் அடங்கலை பரமா' என பன்ட்டும் ப்ரஷித் ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசினார். பவர்ப்ளேயின் முடிவில், டெல்லியும் 2 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்தது.
அதன்பிறகு ஃபெர்குசனும் நரைனும் இணைந்து வீசிய ஐந்து ஓவர்களில், ஃபெர்குசன் ஓவரை மட்டும் கரை வைத்து அடித்தது ஸ்ரேயாஸ் - பன்ட் இணை. நரைன் ஒருபக்கம் இறுக்கிப்பிடிக்க, இந்தப்பக்கம் ஃபெர்குசனை இறுக்கிப்பிடி, முறுக்கிசுத்து, அடி என பவுண்டரிகளை பறக்கவிட்டுக்கொண்டிருந்தார்கள். `நம்ம அருமை பெருமைக்கு சோதனை வந்துடும் போலயேடா இனா மோனா' என அரண்டுபோய் வருண் சக்கரவர்த்தியை வரச்சொன்னார் இயான் மோர்கன். வீசிய முதல் ஓவரிலேயே, பன்ட்டைக் கழற்றினார். கொல்கத்தா அணி பெருமூச்சு விட்டது.
Also Read: விக்கெட் சக்ரவர்த்தி... வருணின் மாயாஜாலத்தில் வீழ்ந்த டெல்லி! #KKRvDC
நரைன் வீசிய அடுத்த ஓவரில், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு பொன்னிற முடியை கோதிவிட்டார் ஹெட்மையர். `வருண் இங்கே வரும்' என மீண்டும் வருணை அழைத்தார் மோர்கன். வருண் சக்கரவர்த்தியும் தினேஷ் கார்த்திக்கும் சங்கத்தமிழில் திட்டம் தீட்டி டெல்லியின் சங்கை நெறித்தார்கள். ஒரே ஓவரில், ஹெட்மயரையும் ஸ்ரேயாஸையும் அடுத்தடுத்த பந்தில் அவுட்டாக்கினார் வருண். நரைன் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசினார் அக்ஸர் படேல். `அவசரப்பட்டியே அக்ஸரு' என தலையில் அடித்துக்கொண்டார் ஹெட்மயர். அவர் பயந்ததுபோலவே, வருண் வீசிய அடுத்த ஓவரில் அக்ஸரும் அவுட். செவனேனு இருந்த ஸ்டாய்னிஸும் அவுட். ஏக் மார் பான்ச் துக்கடா! ஐந்து விக்கெட்களை அள்ளினார் வருண் சக்கரவர்த்தி.
`பாஸ், எங்களுக்கு ஒண்ணு ரெண்டு விக்கெட்டை விட்டு வைங்க' என கம்மின்ஸும், லாக்கியும் ஓடிவந்து ஆளுக்கு ஒரு விக்கெட்டை அள்ள, 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸை முடித்துக்கொண்டது டெல்லி அணி. 59 ரன்கள் வித்தியாசத்தில் கெத்தாக ஜெயித்தது கொல்கத்தா அணி. டெல்லியை விட, பஞ்சாப், ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள்தான் பெரும் சோகத்தில் மூழ்கின. என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் என முதலிடத்தில் மும்பை அணியும், கடைசி இடத்தில் சென்னை அணியும் ஆரவாரமில்லாமல் அமர்ந்திருந்தன.
"நீங்களே பார்த்தீங்கள்ல. நாங்க சூப்பராதானே ஆரம்பிச்சோம். ஆனா, இந்த சுனில் நரைன் இப்படி ஆடுவார்னு யார் கண்டா? நாங்க எதிர்பார்க்கவே இல்லை. இந்த மேட்ச்ல இருந்து நிறைய கத்துகிட்டோம். அதை அடுத்தடுத்த மேட்ச்ல செயல்படுத்துவோம். நன்றி, வணக்கம்" என கிளம்பினார் ஷ்ரேயாஸ். "மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு. கீழ இறங்க சொன்னா எகிறும் பல்லு. சுனிலை நாலாவதா இறக்கிவிடணும்னு முடிவு பண்ணது எங்க கோச் திரு.பிரெண்டன் மெக்கல்லம் அவர்கள்தான். எல்லாப் புகழும் அவருக்குதான்" என குருமரியாதை செய்தார் மார்கன். அன்றைய மேட்ச், அப்படி அரைகுயர் நோட்டே தீருகிற அளவிற்கு அப்படி என்ன எழுதினார் மெக்கல்லம் என்பதன் பதில், இந்த மேட்சில் தெரிந்தது. உன் கையிணே... இஷ்டத்துக்கு எழுதுணே!
source https://sports.vikatan.com/ipl/ipl-2020-kolkata-knight-riders-vs-delhi-capitals-match-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக