Ad

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

சிஏஏ:`எந்த மதத்தினருக்கும் எதிரானது இல்லை!’ - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் இன்று தசரா விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். கொரோனா பரவல் காரணமாக, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விழா நடத்தப்பட்டது. 50 நபர்களுக்கு மட்டுமே சமூக இடைவெளியுடன் விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய மோகன் பகவத், ``கோவிட் -19 தொற்றுநோயின் பின்னணியில் சீனாவின் பங்கு சந்தேகத்திற்குரியது என்று கூறலாம். ஆனால் பொருளாதார சக்தியின் காரணமாக, இந்தியாவின் எல்லைகளை சீனா ஆக்கிரமிக்க முயன்ற விதம் முழு உலகிற்கும் தெளிவாக இருந்தது. இந்திய பாதுகாப்புப் படைகள், அரசாங்கம், மக்கள் என அனைவரும் ஒன்றாக இருந்தனர். நமது பிராந்தியங்களை ஆக்கிரமிப்பதற்கான சீனாவின் கடுமையான முயற்சிகளுக்கு கடுமையாக பதிலளித்தனர். வியட்நாம், அமெரிக்கா ஜப்பான் என பல நாடுகளுடன் சீனா மோதி வருகிறது. இந்தியாவின் பதிலடி நடவடிக்கை சீனாவை பதற்றம் அடையச்செய்துள்ளது. இனி சீனா எவ்வாறு நடந்து கொள்ளும் என நமக்கு தெரியாது. எனவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசிய மோகன் பகவத், ``சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நாம் கண்டோம். இது நாட்டில் பதற்றத்தை உருவாக்கியது. இது பற்றி மேலும் விவாதிக்கப்படுவதற்கு முன்பு, கொரோனாவில் கவனம் செலுத்தப்பட்டது. கொரோனா மற்ற எல்லா விவகாரங்களையும் மறைத்தது. குடியுரிமை திருத்த சட்டம் எந்த ஒரு மத சமூகத்தினருக்கும் எதிரானது இல்லை. எனினும், சில போராட்டங்கள் இதற்கு எதிராக நடைபெற்றன. இஸ்லாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. நமது இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். போராட்டங்களை மீண்டும் தூண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

தொடர்ந்து, ``2019 -ம் ஆண்டில், 370 -வது பிரிவு பயனற்றதாக மாறியது, தொடர்ந்து உச்சநீதிமன்றம் நவம்பர் 9 -ம் தேதி அன்று அயோத்தி தீர்ப்பை வழங்கியது. முழு தேசமும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 5, 2020 அன்று, ராம் கோயிலின் பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளின் போது இந்தியர்களின் பொறுமையை நாம் பார்த்தோம்” என்றார்.

Also Read: `கல்வி, செல்வத்தால் ஆணவம் வருகிறது; விவாகரத்து நடக்கிறது!' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்



source https://www.vikatan.com/news/india/rss-chief-mohan-bhagwat-speech-regarding-caa-china-border-dispute

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக