சென்னையைச் சேர்ந்தவர் ராதிகா (30) (பெயர் மாற்றம்) இவர், அம்பத்தூர் துணைக் கமிஷனர் தீபா சத்யனிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``எனக்கு திருமணமாகி, கணவர் இறந்து விட்டார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாதவரம் காவல் மாவட்டத்தில் உளவுப்பிரிவில் பணியாற்றும் காவலர் செல்வக்குமாருக்கும் எனக்கும் 10.11.2019-ம் தேதி அடையாறில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் எனது கணவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தற்போது, ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனவே செல்வக்குமாரை அழைத்து விசாரணை செய்து, என்னுடன் சேர்த்து வைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்த அம்பத்தூர் உதவிக் கமிஷனர் கனகராஜுக்கு துணைக் கமிஷனர் தீபா சத்யன் உத்தரவிட்டார். அதன்பேரில் ராதாகாவிடம் உதவிக் கமிஷனர் கனகராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு காவல் நிலையத்திலிருந்து வெளியில் வந்த ராதிகாவிடம் பேசினோம். ``நான், வடபழனியில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் வேலைப்பார்த்து வருகிறேன். கிண்டி காவல் நிலையத்துக்கு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு வழக்கு தொடர்பாக சென்றேன். பின்னர், பேருந்தில் வடபழனி அலுவலகத்துக்கு வந்துக் கொண்டிருந்தேன். பேருந்தை விட்டு இறங்கி அலுவலகத்துக்கு நடந்து சென்றபோது போலீஸ் யூனிபார்ம் அணிந்து பைக்கில் வந்த காவலர் ஒருவர், என்னிடம் பேசினார். அப்போது அவர், தன்னுடைய பெயரை செல்வக்குமார் என்று கூறியதோடு, உங்கள் செல்போனைக் கொடுங்கள், ஒரு போன் கால் பண்ண வேண்டும் என்று கேட்டார். நானும் போலீஸ் என்பதால் நம்பி என்னுடைய செல்போனைக் கொடுத்தேன்.
என்னுடைய செல்போனில் அவரின் நம்பரை டயல் செய்து என் செல்போன் நம்பரைத் தெரிந்துக் கொண்டார். அதன்பிறகு அவர் எனக்குப் போன் செய்து பேசினார். அப்போது உங்களைப் பார்த்ததும் எனக்குப் பிடித்துவிட்டது. ஐ லவ் யூ என்று கூறினார். அவரிடம் வீட்டில் வந்து முறைப்படி பேசுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர், முதலில் திருமணம் செய்து கொள்வோம். பிறகு உன்னுடைய வீட்டிலும் என்னுடைய வீட்டிலும் சொல்வோம் என்று கூறி அடையாறில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் என்னைத் திருமணம் செய்துக் கொண்டார். அதன்பிறகு நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். என் மீதும் குழந்தைகள் மீதும் பாசமாக இருந்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அவரின் நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மூன்று மாதங்களுக்கு முன் மதுபோதையில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரின் செல்போனை எடுத்துப் பார்த்தேன். அதில் சில பெண்களுடன் செல்வக்குமார் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் இருந்தன. வாட்ஸ்அப் மெசேஜ்களும் இருந்தன. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கடந்த ஒருவாரத்துக்கு முன்புதான் செல்வக்குமாருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த தகவல் எனக்கு கிடைத்தது. அதுகுறித்து கேட்டபோது, அந்தப் பெண்ணையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால் எங்களுக்குள் சண்டை வந்தது. அதன்பிறகு செல்வக்குமார் வீட்டுக்கு வருவதில்லை. என்னுடைய செல்போன் நம்பரையும் ப்ளாக் செய்துவிட்டார். அதனால்தான் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். என்னைப் போல இன்னொரு பெண், காவலர் செல்வக்குமாரிடம் ஏமாந்துவிடக் கூடாது. தற்போது புகாரை வாபஸ் வாங்கும்படி கூறுகிறார்" என்றார் கண்ணீர்மல்க
Also Read: என் லிஸ்ட்டுல நீ எத்தனையாவது பொண்ணுனே கணக்கு தெரியல! - காமாந்தகக் காவலர் கணேஷ்குமார்!
இதுகுறித்து காவலர் செல்வக்குமாரிடம் கேட்டதற்கு ``ராதிகாவின் அம்மா, தம்பி ஆகியோர் காவல் நிலையத்துக்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். புகாரை வாபஸ் வாங்கிவிட்டார்கள்" என்றார். உங்கள் மீது ராதிகா எதற்காக புகார் கொடுத்தார்கள் என்று கேட்டதற்கு, 'அது ஒரு சின்ன பிரச்னை சார்' என்று கூறிய அவர், 'விசாரணையில் இருக்கிறேன்' என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
காவலர் செல்வக்குமார் மீதான புகாரின் பேரில் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் நட்பில் இருந்த பெண்கள் யாரும் இதுவரை காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை. இந்தப் புகாருக்கு போலீஸார் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
source https://www.vikatan.com/news/crime/chennai-woman-complaint-against-her-husband
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக