பீகார் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக இருந்துவரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சிக்காலம், வரும் நவம்பர் 29-ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதன் காரணமாக புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர் 28-ம் தேதி மற்றும் நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.
பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் ரீதியாக பல்வேறு வன்முறைகள் அங்கு நடந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முன்னாள் பட்டியலினத் தலைவர் சக்தி மாலிக் (37) பீகாரின் பூர்னியா மாவட்டத்திலுள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அக்டோபர் 1-ம் தேதி பாட்னாவில் பா.ஜ.க தலைவர் ராஜேஷை, காலை நடைப்பயிற்சி சென்றபோது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சுட்டுவிட்டுத் தப்பி ஓடினர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இப்படி தேர்தல் தொடர்பான க்ரைம் சம்பவங்கள் பீகாரை பதறவைத்து வந்தது.
Also Read: பீகார்: 'பரபரப்பு நிலவரமும், பதறவைக்கும் சம்பவங்களும்' - எப்படியிருக்கிறது தேர்தல் களம்?
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் ஷியோகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஷியோகர் தொகுதியில் ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி சார்பில் ஸ்ரீநாராயன் சிங் என்பவர் களத்தில் இருந்தார். அந்த தொகுதிக்கு நவம்பர் 3-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார் ஸ்ரீநாராயன் சிங். நேற்று ஹத்சார் என்னும் கிராம பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென ஸ்ரீநாராயன் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் ஸ்ரீநாராயன் சிங் உள்ளிட்ட 3 பேர் குண்டுபாய்ந்து பலத்த காயமடைந்தனர். 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீநாராயன் சிங், மற்றும் அவரது ஒரு ஆதரவாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
Also Read: பீகார் தேர்தல்: 375 கோடிஸ்வரர்கள்... 61 `ரெட் அலர்ட்' தொகுதிகள் - அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பேசிய ஷியோகர் மாவட்ட எஸ்.பி சந்தோஷ் குமார், `` இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியவர்கள் ஸ்ரீநாராயன் சிங்கின் ஆதரவாளர்கள் போலவே பிரசாரத்தில் தொடர்ந்து கலந்து கொண்டனர். வாய்ப்பு கிடைத்த போது துப்பாக்கியல் சுட்டனர். ஸ்ரீநாராயன் சிங்கின் நெஞ்சு பகுதி உள்ளிட்ட 3 இடங்களில் குண்டுகள் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் உறுதியாக தெரியவில்லை.
ஒரு குற்றவாளி, ஆதரவாளர்களாலும் கிராம மக்களாலும் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டார். அவரையும் மருத்துவமனை அழைத்து சென்றோம். ஆனால் அவர் அங்கு மரணமடைந்து விட்டார். அவரிடம் இருந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார் என்பது குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை. போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்” என்றார்.
சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்ரீநாராயன் சிங் மீது 30 -க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதாக் தெரிவித்த எஸ்.பி, அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/crime/bihar-candidate-was-killed-during-campaign
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக