மண்டல வாரியாக தி.மு.க மாவட்ட, நகர, பகுதி, பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகளை அந்தக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில், தொகுதி வாரியாக சிட்டிங் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டு வருகிறார் ஸ்டாலின். ஏற்கெனவே கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் ஆய்வுக் கூட்டம் முடிந்துவிட்ட நிலையில், அக்டோபர் 23-ம் தேதி தென்மண்டல நிர்வாகிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அன்று காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களுக்கும், மாலையில் இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி நிர்வாகிகளிடம் விரைவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின் விவாதித்திருக்கிறார்.
“பா.ஜ.க-வோட செயல்பாடு மாவட்டத்துக்குள்ள ஆக்டிவ்வா இருக்கு. வர்ற தேர்தல்ல குறைந்தது இரண்டு தொகுதியிலாவது கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்ள போட்டியிட இருக்காங்க. இந்த நேரத்துல காங்கிரஸ் நம்ம கூட்டணிக்குள்ள இருக்குறதுதான் நமக்குப் பலம். கன்னியாகுமரி இடைத்தேர்தல்ல காங்கிரஸ் நிற்க விருப்பப்படலைனா, நாம போட்டியிடலாம். ஆனால், காங்கிரஸ் கூட்டணி அவசியம்” என்றிருக்கின்றனர் குமரி மாவட்ட நிர்வாகிகள்.
Also Read: அடுத்தடுத்து எடுபடாத 'திட்டங்கள்' - ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்?!
திருநெல்வேலி மாவட்டத்தினருடனான ஆய்வுதான் காரசார விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க வர்த்தக அணி மாநில துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியனின் ஆதரவாளரும், செங்கோட்டை ஒன்றியச் செயலாளருமான ரவிசங்கர் எழுந்து, “திருநெல்வேலி மேற்கு மாவட்டத்துக்குள் நான்கு தொகுதிகள் வருகின்றன. தலா இரண்டு தொகுதிகள் வீதம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தால், கட்சியின் செயல்பாடு சிறப்பானதாக அமையும்” என்றிருக்கிறார்.
டென்ஷனான ஸ்டாலின், “அப்படினா இப்ப சிறப்பா இல்லையா? எதை எப்ப பிரிக்கனும்னு எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று கர்ஜிக்கவும் ஒடுங்கிவிட்டாராம் ரவிசங்கர். ஏற்கெனவே, அய்யாதுரை பாண்டியனுக்கும் திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டு, போலீஸ் ஸ்டேஷன் வரையில் பஞ்சாயத்து கொண்டு செல்லப்பட்டதால், கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இரண்டு வாரத்துக்கு முன்னர் இருதரப்பையும் அறிவாலயத்துக்கு அழைத்த ஸ்டாலின், தன் முன்னிலையிலேயே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தான் ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்வுக்கும் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனை அய்யாதுரை பாண்டியன் அழைப்பதில்லை என்று கே.என்.நேருவே ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார். “மாவட்டச் செயலாளரின் தலைமையை ஏற்றுக் கொண்டு செயல்பட்டுத்தான் ஆக வேண்டும்” என்று ஸ்டாலின் சொல்லவும், கடுப்பாகிவிட்டாராம் அய்யாதுரை பாண்டியன். “என் ஸ்டேட்டஸ் என்ன, அந்தாளு ஸ்டேட்டஸ் என்ன?... இரண்டு பேரையும் ஒப்பிட்டுப் பேச்சுவார்த்தைக்கு அழைச்சதே தப்பு தலைவரே. அவரையெல்லாம் மாவட்டச் செயலாளரா என்னால ஏத்துக்க முடியாது” என்று சீறிவிட்டு, ஸ்டாலினின் பதிலுக்காகக் கூட காத்திருக்காமல் கும்பிடு போட்டுவிட்டு கிளம்பியிருக்கிறார் அய்யாதுரை பாண்டியன். தன் முன்னிலையிலேயே மாவட்டச் செயலாளரை அவமானப்படுத்தும் விதத்தில் அய்யாதுரை பாண்டியன் பேசியது ஸ்டாலினை கொதிப்படையச் செய்தது. கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்தாராம் ஸ்டாலின்.
“இப்ப அய்யாதுரை பாண்டியன் மீது நடவடிக்கை எடுத்தா, அவர் பா.ஜ.க பக்கம் போய்டுவாரு. கொஞ்சம் பொறுத்திருங்க. நேரம் வரும்போது நடவடிக்கை எடுக்கலாம்” என்று சீனியர்கள் ஸ்டாலினைச் சமாதானப்படுத்தியுள்ளனர். அந்தக் கடுப்பில்தான், மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க கோரிய ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் மீது ஸ்டாலின் சீறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வுக் கூட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர்களை அருகில் வைத்துக் கொண்டே குறைகளை ஸ்டாலின் கேட்பதால், தைரியமாக சொல்ல முடிவதில்லை என நிர்வாகிகள் புலம்புகிறார்கள்.
Also Read: அடுத்தடுத்து எடுபடாத 'திட்டங்கள்' - ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்?!
“மாவட்டச் செயலாளர்களுக்கு ஆதரவாகத்தான் துணைப் பொதுச் செயலாளர்கள் இருக்கிறார்கள். மாவட்டத்திலிருக்கும் குறைகளைப் பேச ஆரம்பிக்கும் முன்னரே, ‘சரிப்பா. இதெல்லாம் ஏற்கெனவே பேசி முடிச்ச விஷயம்தான். எல்லாரும் ஒற்றுமையா போனாத்தான் தலைவரை முதலமைச்சர் ஆக்க முடியும். நம்ம ஆட்சி அமையட்டும், எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம்’ என்று ஆஃப் செய்துவிடுகின்றனர். ஆட்சி அமைய வேண்டுமானால், அதற்கு முதலில் கட்சியிலுள்ள பிரச்னைகள் சரிசெய்யப்பட வேண்டுமே. இதை யாருமே கண்டு கொள்வதில்லை” என்று புலம்பித் தீர்க்கின்றனர் நிர்வாகிகள்.
இந்த ஆய்வுக் கூட்டங்களில், நிர்வாகிகளிடம் ஒரு படிவம் கொடுக்கப்படுகிறது. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நிர்வாகிகள் எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க வேண்டுமாம். இதைவைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. மண்டல வாரியாக நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டங்கள், வரும் அக்டோபர் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பிறகு மாவட்டங்களைப் பிரிக்கும் அறிவிப்பு வேகமெடுக்கும் என்கிறது அறிவாலய வட்டாரம்.
source https://www.vikatan.com/news/politics/dmk-chief-stalin-got-angry-during-regional-wise-party-meeting
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக