Ad

வெள்ளி, 23 அக்டோபர், 2020

`அப்பா சொல்லிட்டாரு; ஆட்சிக் கட்டிலில் அமர வைப்போம்!' - போஸ்டரில் அதகளப்படுத்தும் விஜய் ரசிகர்கள்

`ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு தகுதியான தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. அந்த இடத்தை தளபதி நிரப்புவார்’ என்றும், `நாளைய முதல்வரே’, `இளம் தலைவரே’ எனத் திருச்சி மாவட்டம் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர்

2021ல் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நடிகர் விஜய்-யின் ரசிகர்கள் அவ்வப்போது தங்களது போஸ்டர்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். `விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் விருப்பப்படும்போது மாறும். மக்கள் கூப்பிடும்போது நாங்கள் வருவோம். நாங்களாக வந்து மக்களைக் கூப்பிடுவதை விட, மக்கள் 'வா' என்று கூப்பிடும் போது இன்னும் பவர்ஃபுல்லாக இருக்கும்" என்று இயக்குநரும், மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர் மன்றத்தினர் தற்போது திருச்சி மாவட்டம் முழுவதும் `நாளைய முதல்வரே! இளம் தலைவரே!’ என போஸ்டர் ஒட்டியுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

நடிகர் விஜய்

இதே போல், மதுரை, பாண்டிச்சேரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் விஜய் ரசிகர்களின் போஸ்டர் ஒட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஸ்டர் விவகாரம் குறித்து திருச்சி விஜய் ரசிகர்கள் சிலரிடம் பேசினோம். ”ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு தகுதியான தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. இரும்பு பெண்மணியாக இருந்து தமிழகத்தையும், கட்சியையும் வழிநடத்தி வந்தவர் ஜெயலலிதா. ஆனால், இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் எல்லாவற்றையும் பி.ஜே.பி-யிடம் அடமானம் வைத்துவிட்டு அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் வாழ்ந்தால் போதும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

போஸ்டர்

தி.மு.க-வைப்பற்றி சொல்லவேண்டிய தேவையில்லை. தற்பொழுது தகுதியே இல்லாதவர்கள் எல்லாம் ஆட்சி கட்டிலில் அமரும் போது என்நேரமும் மக்களைப்பற்றி யோசிக்கும் எங்களது தளபதி ஆட்சியில் கட்டிலில் அமர்ந்தால் என்ன தவறு. எங்க தலைவருடைய அப்பா சொல்லிட்டாரு. இனி எங்க தலைவரை ஆட்சிக் கட்டிலில் அமரவைப்போம்” என்று உணர்வு பொங்கப் பேசினர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/trichy-vijay-fans-political-poster-after-vijays-father-statement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக