Ad

வியாழன், 22 அக்டோபர், 2020

`பீகாரில் மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா?’ - சர்ச்சையான பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தோடு கூட்டணியில் பா.ஜ.க போட்டியிடுகிறது. மத்தியில் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்திக் கட்சி, பீகாரில் நிதிஷ்குமாருக்கு எதிராகக் களமிறங்குவதாக அறிவித்து தேர்தலை சந்திக்கிறது. இந்தநிலையில், பா.ஜ.க-வின் பீகார் மாநில தேர்தல் வாக்குறுதியை மத்திய நிதியமைச்சரும் பா.ஜ.க மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் பாட்னாவில் இன்று வெளியிட்டார்.

நிர்மலா சீதாராமன் - பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியிருந்ததை பா.ஜ.க விமர்சித்திருந்தது. ஆனால், இன்று வெளியிடப்பட்ட பா.ஜ.க தேர்தல் வாக்குறுதியில் 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், கொரோனா தடுப்பூசி தயாராகிவிட்டால், தாங்கள் ஆட்சிக்குவரும் நிலையில் பீகார் முழுவதும் இலவசமாக தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் உலகின் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. பரிசோதனை கட்டத்திலேயே அவை இருக்கும் நிலையில், ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவது இதுவே முதல்முறை. பா.ஜ.க தேர்தல் அறிக்கை அறிவிப்பை விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, `பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் நிலை என்ன?, பா.ஜ.க-வுக்கு வாக்களிக்காத இந்தியர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்காதா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸின் ஜெய்வீர் ஷெர்ஜில், ``கொரோனா தடுப்பு மருந்து என்பது உயிர்காக்கும் நடவடிக்கை என்பதை விடுத்து, அதைத் தேர்தல் லாபத்துக்காகப் பயன்படுத்தும் உலகின் ஒரே ஒரு கட்சி பா.ஜ.க மட்டும்தான். கொரோனாவைப் போலவே பா.ஜ.க-வினரின் மனநிலைக்கும் மருந்து வேண்டும்’’ என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

Also Read: பீகார்: 'பரபரப்பு நிலவரமும், பதறவைக்கும் சம்பவங்களும்' - எப்படியிருக்கிறது தேர்தல் களம்?

பீகாரில் இருக்கும் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி சௌபே-யிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் விளக்கம் கேட்டனர். அவர் கூறுகையில், ``கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பு உலக அளவில் நடந்து வருகிறது. அது தயாராகும் நிலையில், நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை விநியோகிக்க மத்திய அரசு தெளிவான திட்டத்தை வகுத்து வருகிறது.

கொரோனா

எல்லா மாநிலங்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக விநியோகிக்கப்படும்’’ என்று கூறினார். ஆனால், அமைச்சர் விளக்கம் அளித்தும், இதுகுறித்த விமர்சனங்கள் நிற்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Also Read: பீகார்: `பா.ஜ.க - நிதீஷ் குமார் கூட்டணி, சச்சின் - சேவாக் ஜோடியைப் போன்றது!' - ராஜ்நாத் சிங்

இந்தநிலையில், பா.ஜ.க ஐ.டி பிரிவைச் சேர்ந்த அமித் மால்வியா, அக்கட்சி சார்பில் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ``இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. மற்ற திட்டங்களைப் போலவே, மத்திய அரசு குறைந்த விலையில் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும்.

அந்தத் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும். சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால், பீகாரில் இலவச கொரோனா தடுப்பூசி வழங்க பா.ஜ.க முடிவு செய்திருக்கிறது’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/free-corona-vaccine-bjps-bihar-poll-manifesto-irks-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக