Ad

வியாழன், 22 அக்டோபர், 2020

பெரம்பலூர்: ஏரியில் கிடைத்த உருண்டை வடிவிலான படிமங்கள்! - டைனோசர் முட்டைகளா?

பெரம்பலூர் மாவட்டத்தில் தோண்டத் தோண்ட `டைனோசர் முட்டைகள்’ போன்ற உருண்டைகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அதனைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கத் தொடங்கியிருப்பதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

உருண்டை வடிவிலான படிமங்கள்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசுப் பள்ளிக்கு அருகே இருக்கும் வெங்கட்டான் ஏரியில், குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிக்காக உள்ளூர் மக்கள் ஏரியில் உள்ள வண்டல் மண்ணைத் தோண்டிய போது, அதில் உருண்டை வடிவிலான படிமங்கள் சில கிடைத்தன. மக்கள் பலர் அதனை டைனோசர் முட்டைகள் என்று சொல்ல, அப்பகுதியை பரபரப்பு தொற்றிக்கொண்டது.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டதாக, அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ஏற்கெனவே சாத்தனூரில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல கல் மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலமாக, அந்த பகுதி முந்தைய காலத்தில் கடலாக இருந்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உருண்டை வடிவிலான படிமங்கள்

இந்தநிலையில், இந்த முட்டைகள் மாமிச கார்னோட்டரஸ் (Carnotaurus), இலைகள் மட்டும் உண்ணும் சைவ சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என அந்தப் பகுதியினர் சிலர் தெரிவிக்கிறார்கள். இங்கு கிடைத்த படிமங்களின் மூலம் இப்பகுதியில் ஒரு காலத்தில் டைசோனர்கள் பெருமளவில் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

அதேபோல, கடல் வாழ் உயிரினங்களின் படிமங்களும் பாசில்ஸ்களும், கடல் நத்தைகள், கடல் ஆமைகள், கடல் சங்கு உள்ளிட்டவைகளின் புதைபடிமங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், இந்த உருண்டைகள், சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை எனவும் கூறப்படுகிறது. இந்த உருண்டைகளைப் பார்ப்பதற்காக அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இதற்கு முன்பு அரியலூர் மாவட்டம் செந்துறையில் 44 டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசுகையில்,``அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் வரலாற்று ஆய்வாளர்களின் சொர்க்க பூமியாக கருதுகிறார்கள். கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் செந்துறையில் 44 டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. அதுவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கல்மரம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குன்னம் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மற்றொரு கல்மரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வரும் தலைமுறைக்கு இப்பகுதி ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்பதனை சான்றாக உள்ளது. இதனைப் பாதுகாக்க வேண்டும். இந்தப் பகுதியை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்றனர்.

உருண்டை வடிவிலான படிமங்கள்

Also Read: மருமகள் உயிருடன் இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய உறவுகள்! பெரம்பலூர் சர்ச்சை

உருண்டை வடிவிலான படிமங்களை வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதனை ஆய்வு செய்தால்தான் உண்மை என்ன என்று தெரியவரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள் சிலர். சில பகுதிகளில் உள்ள மண் வகைகள், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இது போன்று உருண்டையாக மாறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள். `உண்மை என்ன என்பதனை அரசு உரிய நடவடிக்கை எடுத்து, ஆய்வு செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்’ என்கிறனர் அப்பகுதியினர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/round-shaped-specimen-found-near-perambalur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக