Ad

சனி, 24 அக்டோபர், 2020

ரஜினிக்கொரு நீதி... நாற்காலியை எடைக்குப் போட்ட தி.மு.க எம்.எல்.ஏ..! கழுகார் அப்டேட்ஸ்

சமீபத்தில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின், வேலூர் மண்டல இணைத் தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டிலிருந்து மூன்று கோடிக்கும் அதிகமான பணத்தையும் தங்கம், வெள்ளிப் பொருள்களையும் அள்ளியது லஞ்ச ஒழிப்புத்துறை. இதையடுத்து, சுற்றுச்சூழல் துறையின் மேலிடத்துக்குச் சென்ற பணப்போக்குவரத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்திருக்கிறது. இதில் `சப்ளை’ பலமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, மேலிடத்தின் சொத்து மதிப்பையும் உளவுத்துறை தோண்டியெடுத்து ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது. இதில் சொத்து மதிப்பு பல மடங்கு எகிறியிருப்பதைக் கண்ட மேலிடமே அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாம்.

லஞ்சம் வாங்க தனி அலுவலகம் - பன்னீர்செல்வம்

ஏனெனில், சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற கட்சி ஆலோசனையின்போது, ``என்கிட்ட எங்கேங்க அவ்வளவு பணமிருக்கு... சம்பாதிக்குற துறையா எனக்கு ஒதுக்கி இருக்கீங்க... தேர்தல் செலவுக்குப் பத்து பைசா என்கிட்ட கேட்காதீங்க. சுத்தியும் கடனைத்தான் சேர்த்துவெச்சிருக்கேன்” என்று ஏகத்துக்கும் புலம்பியிருந்தாராம் அந்தச் சூழல் பிரமுகர். இப்போது விஷயம் அம்பலமாகிவிட்டதால், ‘ஒண்ணு... தேர்தல் செலவுகளை ஏத்துக்கோங்க... இல்லைன்னா சீட் கிடையாது’ என்று சுற்றுச்சூழலைச் சுற்றலில்விட்டிருக்கிறது தலைமை.

கட்டுத்சோத்தைக் கடைத்தெருவுல விரிச்சிட்டீங்களே பன்னீர்!

காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் சார்பாக நத்தம் தொகுதியில் ஆறு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் எம்.ஆண்டி அம்பலம். இவரின் மகன் எம்.ஏ.ஆண்டி அம்பலம் தற்போது நத்தம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பெயர் ராசி காரணமாக மூன்றாம் தலைமுறையாகத் தன் மகன் ஆண்டிச்சாமிக்கும் `ஆண்டி அம்பலம்’ என்றே பெயர் மாற்றிவிட்டாராம் எம்.எல்.ஏ-வான இரண்டாம் ஆண்டி அம்பலம்.

Also Read: ஐந்து `சி' வசூல் தி.மு.க(?), கிளம்பத் தயாராகும் சூரப்பா, கண்காணிப்பில் முருகன்... கழுகார் அப்டேட்ஸ்!

அதுமட்டுமா... அரசாங்கச் சம்பளத்தில், அலுவலக உதவிக்கு ஒருவரை எம்.எல்.ஏ-க்கள் பணியமர்த்திக்கொள்ளலாம். இந்தத் தகவல் தெரிந்தவுடன், தன் மகனையே தனக்கு அலுவலக உதவியாளராக அமர்த்திக்கொண்டாராம் இரண்டாம் ஆண்டி அம்பலம். இதைச் சொல்லி, ‘‘டெல்லி சுல்தான் மன்னர்களாக இருந்தவர்கள்தான் `முதலாம் துக்ளக்’, `இரண்டாம் துக்ளக்’ என்று பெயரிட்டுக்கொள்வார்கள். இவரும் `முதலாம் ஆண்டி அம்பலம்’, `இரண்டாம் ஆண்டி அம்பலம்’ என ஆரம்பித்துவிட்டார். பெயர் எப்படி வேண்டுமானாலும்... எத்தனை தலைமுறைகளுக்கு வேண்டுமானாலும் ஒரே மாதிரியாக வைத்துக்கொள்ளட்டும்... அதற்காக நத்தம் தொகுதியிலும் தலைமுறை தலைமுறையாக இவர்களே எம்.எல்.ஏ பொறுப்புக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவது என்ன நியாயம்?” என்று கொதிக்கிறார்கள் தி.மு.க உள்ளூர் நிர்வாகிகள்! தேர்தல் நெருக்கத்தில் இந்த விவகாரம் திண்டுக்கல் அரசியலில் புயலைக் கிளப்பலாம்.

இது என்ன புது வாரிசு அரசியலா இருக்கே!

வனவிலங்குகள் பாதுகாப்பில் முக்கியப் பங்குவகிக்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவர் கிடையாது. சொல்லப்போனால், வனத்துறையில் கால்நடை மருத்துவர் என்ற பணியிடமே இன்னமும் உருவாக்கப்படவில்லை. கால்நடை மருத்துவத்துறையிலிருந்தே டெபுடேஷனில் வனத்துறைக்கு மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மறைந்த `யானை’ டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி டாக்டர் மனோகரன், அவருக்குப் பிறகு வந்த கலைவாணன், விஜயராகவன் வரை இப்படி டெபுடேஷனில் வனத்துறைக்கு வந்தவர்கள்தான். இந்தநிலையில், இரு ஆண்டுகளாக வனத்துறைக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படாததால், ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் வன உயிரினங்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க முடியாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தவிர, இறந்துபோன விலங்குகளின் உடற்கூறாய்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்படுவதாகச் சர்ச்சை வெடித்தது.

தற்போது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவர் ராஜேஷ் என்பவரை முதுமலையின் வனக்காவல்நடை பொறுப்பு மருத்துவராக நியமித்திருக்கிறார்கள். இந்த நியமனமும் சர்ச்சையாகி இருக்கிறது. “வனவிலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதில் அனுபவம்மிக்க மருத்துவரையே இங்கு நியமிக்க வேண்டும். மாடுகளுக்கு மருத்துவம் பார்த்தவர் எப்படி வன விலங்குகளுக்கு மருத்துவம் பார்ப்பார்... வனத்துறை அதிகாரிகள் சொல்வதற்கேற்ப விலங்குகளின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்களை வழங்குவதற்காக இந்த நியமனம் நடைபெற்றதா?” என்றெல்லாம் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

அதேநேரத்தில், டாக்டர் சார்பாகப் பேசுபவர்களோ, “தற்போது தமிழகத்திலிருக்கும் சுமார் ஏழாயிரம் கால்நடை மருத்துவர்களில் எத்தனை பேருக்கு வனத்துறைக்கு வந்து பணிபுரிய ஆர்வம் இருக்கிறது... ஒருவர்கூட வருவதில்லை. மிகக் கடினமான பணி, குடும்பத்தைப் பிரிந்து காட்டுக்குள் வாழ்க்கை என்று கஷ்டப்பட்டாலும், இந்தத் துறையில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. தவிர, ஓய்வு பெறும்போதுகூட அலுவல்ரீதியாக கால்நடைத்துறைக்குத் திரும்பவும் பணி மாறினால்தான் முறைப்படி ஓய்வுபெற முடியும். இவ்வளவு கடுமையான சூழலிலும் சுய ஆர்வத்துடன் வனத்துறைக்குப் பணிக்கு வந்திருக்கும் ஒரேயொரு மருத்துவரை விமர்சிக்க வேண்டாம்” என்கிறார்கள். வழிவிடுங்கோ...

ஒரேயொரு மருத்துவர் வர்றாரு... வழிவிடுங்கோ!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வரும் சட்டமன்றத் தேர்தலைக் கணக்கில்கொண்டு பல அரசு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். சில தினங்களுக்கு முன்னர், குளவாய்ப்பட்டியில் நடமாடும் ரேஷன் கடையை அமைச்சர் தொடங்கிவைத்தார். விழா மேடையருகே அ.தி.மு.க கொடியேற்றப்பட்ட பிறகுதான் நிகழ்ச்சியே ஆரம்பமானது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அமைச்சர் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மேடையைவிட்டுக் கிளம்ப ஆரம்பித்தனர். இதுதான் சான்ஸ் என்று அ.தி.மு.க கரைவேட்டிகள் மேடையேறிவிட்டனர். சிறிது நேரத்தில், மாற்றுக்கட்சியினர் தங்களை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சியும் அந்த மேடையிலேயே நடைபெற்றது.

விஜயபாஸ்கர்

அரசு நிகழ்ச்சியை ஆளும்கட்சி நிகழ்ச்சியாக மாற்றிவிட்டது அமைச்சர் தரப்பு. இதேபோல, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்புவிழாவும் அ.தி.மு.க-வினரின் ஆக்கிரமிப்பால், அ.தி.மு.க மேடையாக மாறியது. தொடர்ந்து புதுக்கோட்டையில் அரசு விழாக்கள் அ.தி.மு.க விழாவாக மாறிவருவது விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

அரசாங்கச் சொத்தையே ஆட்டையப் போடுறவங்களுக்கு அரசு விழா மேடையெல்லாம் எம்மாத்திரம்!

சென்னை மத்திய மாவட்ட தி.மு.க எம்.எல்.ஏ அவர். தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பூங்கா அமைப்பதற்காக ஒரு கோடி ரூபாயில் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார். ஆனால், ஏற்கெனவே பூங்காவிலிருந்த பழைய நாற்காலிகள் சிலவற்றை எடைக்குப் போட்டுவிட்டு, இருக்கிற சில நாற்காலிகள், பூந்தொட்டிகளுக்கு பெயின்ட் அடித்து, புதிதாக வாங்கியதுபோல கணக்கு காட்டிவிட்டாராம். மொத்தச் செலவு 25 லட்சத்தைத் தாண்டியிருக்காது என்கிறார்கள். மீதி 75 லட்ச ரூபாய்க்கும் சேர்த்து பில் போட்டு பாக்கெட்டில் போட்டுக்கொண்டாராம்.

``சென்னை கிழக்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கப்போகிறார்கள். அடுத்த மாவட்டச் செயலாளர் நான்தான். இப்பவே வட்டச் செயலாளரெல்லாம் என் பின்னாடி வந்துடுங்க’’ என்று இவர் விடும் உதார்களைப் பார்த்து தலையிலடித்துக்கொள்கிறார்கள் உடன்பிறப்புகள். புகார் பெட்டிஷன்கள் அறிவாலயக் கதவைத் தட்ட ஆரம்பித்திருக்கின்றன. அரசியல்வாதிகள் நாற்காலிக்கு ஆசைப்படலாம்... ஆனால்,

நாற்காலியையே எடைக்குப் போட்டு விற்கலாமா?

தனது ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்துவரியைப் பாதியாகக் குறைக்கச் சொல்லி ரஜினி வழக்கு தொடர்ந்த விவகாரம் ஒருவழியாக ஓய்ந்திருக்கிறது. ரஜினியின் வரி விவகாரத்தில், `நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு’ என்றிருந்த சென்னை மாநகராட்சி, இதே போன்றதொரு விவகாரத்தில் சலுகை காட்டியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

சென்னை மாநகராட்சி

சென்னையில் பேருந்து நிறுத்தங்களைப் பராமரிக்கும் பணி, தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தனியார் நிறுவனத்துக்கு ஆறு மாதங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதாம். பல கோடி ரூபாய் மதிப்பிலான வரியை தாராள மனதுடன் விட்டுக்கொடுத்ததற்கு, அந்த நிறுவனத்தின் மேலிட சகவாசமே காரணம் என்று மாநகராட்சி வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள். இந்த விவகாரத்தைத் தோண்டியெடுத்திருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர், `எங்க தலைவருக்கு ஒரு நீதி... அவங்களுக்கு ஒரு நீதியா? இந்த விஷயத்தை அம்பலப்படுத்தாமல் விடமாட்டோம்’ என்று கொதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சிங்கமொன்று புறப்பட்டதே...

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட இப்போதே அடிதடி ஆரம்பமாகிவிட்டது. தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரான கல்யாணசுந்தரத்துக்கும், பாபநாசம் முன்னாள் ஒன்றியச் செயலாளரான தாமரைச்செல்வனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதால் தகித்துக்கிடக்கிறது தஞ்சை தி.மு.க. இதற்கிடையே கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவைச் சந்தித்த தாமரைச்செல்வன், தனக்குத்தான் சீட் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

கே.என்.நேரு

இன்னொரு பக்கம், கட்சியில் சீனியரான தனக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும் என்று கல்யாணசுந்தரம் அழுத்தம் கொடுக்கிறார். இதனால் இப்போதே இரு தரப்பு ஆதரவாளர்களுக்குமிடையே முட்டல் மோதல்கள் தொடங்கியிருக்கின்றன.

சீட்டை பாதிப் பாதியா பிரிச்சுக் கொடுக்க முடியாதா நேரு சார்!

ஆவடி மாநகராட்சியில் உயரதிகாரியாக இருக்கும் கடவுளின் பெயரைக்கொண்ட ஒருவரை, குப்பைகளை அகற்றும் டெண்டர் எடுத்திருக்கும் தனியார் நிறுவனம் ஒன்று சிறப்பாக கவனிக்கிறதாம். காலையில் பணிக்கு வந்தவுடன், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஃபேன்ஸி பதிவெண் கொண்ட சொகுசு காரில் கிளம்பும் அந்த உயரதிகாரி, பிற்பகலில் தள்ளாட்டத்துடன்தான் அலுவலகம் திரும்புகிறாராம்.

குடி நோயாளிகள்

இந்த ‘கவனிப்பால்’ நிறுவனத்தின் சிபாரிசில் அனுப்பப்படும் கோப்புகள், பில்களில் பெண்டிங் வைக்காமல் உடனடியாகக் கையெழுத்துப் போடுகிறாராம். ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் பினாமி நிறுவனம் என்பதால், உயரதிகாரியை யாராலும் ‘டச்’ செய்ய முடிவில்லை என்கிறார்கள்.

‘குப்பை’ அதிகாரியை ‘குட்பை’ சொல்லவைக்குமா அரசு?

தி.மு.க-வின் தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தங்க தமிழ்ச்செல்வன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம், கட்சி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி எனப் பரபரப்பாகிவிட்டார். ‘வரும் தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட மாட்டார்.

தங்க தமிழ்ச்செல்வன்

பன்னீர்செல்வம் அல்லது அவரின் இளைய மகன் ஜெயபிரதீப் தேனியில் போட்டியிட்டால், அவர்களைத் தோற்கடிக்கும் அசைன்மென்ட் தங்கத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த அசைன்மென்ட்டை முடித்துக் கொடுத்தால், ராஜ்யசபா சீட் கொடுப்பதாக கட்சித் தலைமை உறுதியளித்திருக்கிறதாம். அதனால், பம்பரமாய் சுழன்றுகொண்டிருக்கிறார் தங்கம்.

தங்கம் ஜொலிக்குமா... பல்லிளிக்குமா?!



source https://www.vikatan.com/news/politics/kazhugar-updates-on-rajini-issue-and-other-recent-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக