`மகாராஷ்டிராவில் எந்தவொரு வழக்கின் விசாரணையையும் நடத்த மாநில அரசிடம் சி.பி.ஐ முன் அனுமதி பெற வேண்டும்’. சிபிஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதியைத் திரும்பப் பெறுவதாக உத்தவ் தாக்கரே அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
சிபிஐ-யின் அதிகாரவரம்பு, டெல்லி சிறப்பு காவல் நிறுவனச் சட்டத்தின் (Delhi special police eshtablishment - DSPE 1946) மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் மத்திய ஆட்சிப் பகுதிகளின் காவல்துறைக்கு இருக்கும் அதே அதிகாரங்களையும், பொறுப்புகளையும் சி.பி.ஐ-க்கும் வழங்குகிறது. டெல்லியைத் தவிர, நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் சி.பி.ஐ, தனது அதிகாரத்தைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசின், பொது ஒப்புதல் (General consent) பெற்றிருப்பது அவசியம். சி.பி.ஐ-க்கு பொது ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ள மாநிலங்களில், சி.பி.ஐ. வழக்கு விசாரணை செய்ய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் ஆகியவை சி.பி.ஐ-க்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை ஏற்கெனவே திரும்பப் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிராவும் தற்போது இணைந்திருக்கிறது.
டி.ஆர்.பி. வழக்கில் முக்கிய திருப்பமாக உ.பி-யில் பதிவாகியிருந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மகாராஷ்டிராவில் டி.ஆர்.பி. வழக்கை மும்பை காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில், டி.ஆர்.பி கணக்கிடுவதில் முறைகேடு நடந்திருப்பதாக கோல்டன் ராபிட் கம்யூனிகேஷன்ஸ் (Golden Rabbit Communications) என்ற ஊடக மற்றும் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கமல் ஷர்மா புகார் அளித்தார். இதன் அடிப்படையில் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் (Hazratganj) காவல்நிலையத்தில் உத்தரப்பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அம்மாநில அரசின் பரிந்துரையின் பெயரில் அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டிருக்கிறது.
Also Read: ரிபப்ளிக் டிவி: வீட்டுக்கு மாதம் ரூ.400; `இந்தியா டுடே' பகை - டி.ஆர்.பி விவகாரத்தில் என்ன நடக்கிறது?
இதற்கு முன்னதாக, டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளைப் பெறுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டி.வி, மராத்தி சேனல்களான `Fakt Marathi', `பாக்ஸ் சினிமா' உள்ளிட்ட சேனல்கள் மீது மும்பை காவல்துறை, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், மாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க மகாராஷ்டிரா மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு அளித்த பொது ஒப்புதலை உத்தவ் தாக்கரே அரசு நேற்று வாபஸ் பெற்றது. இதனால், மகாராஷ்டிராவில் எந்தவொரு வழக்கு விசாரணையையும் மேற்கொள்ள மாநில அரசின் அனுமதியை சிபிஐ பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, டி.ஆர்.பி வழக்கை மும்பை போலீஸ் விசாரித்து வருகையில், அதில் சி.பி.ஐ தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காகவே பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ரிபப்ளிக் டிவி-க்கு எதிரான வழக்கை நீர்த்துப்போகச் செய்யவே, சி.பி.ஐ வழக்கு பதிவு செய்வதாக மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியின் தலைவர்கள் கருதுகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் டி.ஆர்.பி வழக்கில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், உடனடியாக வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, மகாராஷ்டிரா அரசாங்கம் உடனடியாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா அரசாங்கத்தின் இந்த முடிவு, சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான சி.பி.ஐ. விசாரணையை பாதிக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டு வருவதால், மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/news/india/uddhav-thackeray-blocks-cbi-from-probing-cases-in-maharashtra
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக