`விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தவறானது’ என இங்கிலாந்து நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, `இந்தியாவிலும் தடை நீக்கப்படுமா?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
2009-ல் சர்வதேச உதவியோடு இலங்கை சிங்கள அரசால், ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இறுதிப்போர் எனும் இனப் படுகொலையில், விடுதலைப் புலிகளும் அப்பாவித் தமிழர்களும் அழித்தொழிக்கப்பட்டனர். இந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு உலகெங்கிலும் தமிழர்கள் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர்.
இந்தநிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக சித்திரித்து தடைவிதிக்கப்பட்டிருப்பதோடு, தொடர்ந்து அந்தத் தடை நீட்டிக்கப்பட்டும்வருகிறது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில், `விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்’ எனக் கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், `விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து அரசின் தடை தவறானது’ என நேற்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்தத் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தீர்ப்பைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசும், தடையை விலக்கி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, `இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை விலக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களும், ஈழ ஆதரவாளர்களும் இது குறித்த கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசும் தமிழ்த் தேசிய வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, ``2009-க்குப் பிறகு இந்தியாவுக்குள் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த நடவடிக்கைகள் எதுவுமே இல்லை. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றுகூட ஒருவரும் கைதுசெய்யப்படவும் இல்லை. ஆனாலும்கூட, இங்கே விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது.
இதனால், இங்கிருக்கக்கூடிய இலங்கை அகதிகள் பெரும் பாதிப்புக்காளாகிவருகின்றனர். இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் அகதிகளாக இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் ஈழ மக்கள். ஆனால், இங்கேயே அகதிகளாகப் பார்க்காமல், அவர்களைத் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களாகவே இந்திய அரசும் பார்த்துவருகிறது.
அதனால், அகதி முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் இந்த மக்கள், தங்கள் பண்பாட்டு உரிமை மற்றும் குடியுரிமையைக்கூட மீட்டெடுக்க முடியாமல் வருடக்கணக்கில் துயரம் அனுபவித்துவருகின்றனர். அடுத்து தங்கள் அரசியல் உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் `நாடு கடந்த தமிழீழ அரசாங்க'மாக பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டுவரும் சூழலில், இந்தியாவில் இன்னும் தடை நீடிக்கும் காரணத்தால் செயல்பட முடியாத சூழலே நிலவுகிறது.
செயல்பாட்டில் இல்லாத ஓர் அமைப்பு, இந்தியாவின் இறையாண்மையும் பாதிக்காத ஓர் அமைப்புக்குத் தடை மட்டும் தொடருவதால், இங்கிருக்கக்கூடிய அகதிகள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிவருவது எந்த வகையில் நியாயம்?
உதாரணமாக, திருச்சியிலுள்ள `சிறப்பு அகதிகள் முகாமில்' மட்டும் 62 பேர் இருக்கிறார்கள். அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்கள் ஏதேனும் சிறு குற்ற வழக்குகளில் சிக்கினால்கூட, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்களில் அடைத்துவைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையல்லவா... `இவர்களும் விடுதலைப் புலிகள்தான்' என்ற தவறான யூகத்தின்பேரால் கைது நடவடிக்கைக்கு உள்ளாகும் இவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லி மாளாது.
நம்மை நம்பி அடைக்கலம் தேடிவந்தவர்களை வெறும் யூகத்தின் பெயரால் கைதுசெய்யக் கூடாது. `வாழும் உரிமை' எல்லோருக்குமே உண்டு. ஆனால், இப்படி உளரீதியான தொடர் அச்சுறுத்தல்களை இந்திய அரசு தந்துகொண்டேயிருப்பதால், அந்த மக்கள் தங்கள் கல்வி, உணவு, வாழ்விடம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கையைக்கூட இங்கே எழுப்ப முடியவில்லை. எனவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா இனிமேலாவது விலக்கிக்கொள்ள வேண்டும்'' என்றார் கோரிக்கையாக.
இதையடுத்து, `இந்தியாவில், விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை விலக்குவது சாத்தியம்தானா' என்ற கேள்விக்கு பதில் கேட்டு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமாக ஜெயின் கமிஷனில் வாக்குமூலம் அளித்தவருமான திருச்சி வேலுச்சாமியிடம் பேசியபோது, ``முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கைத் தொடர்ந்துதான் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் தடை விதித்தன.
விடுதலைப் புலிகளின் வழிமுறைகள் வேறாக இருந்தாலும், அவர்களின் போராட்டம் என்பது, சுதந்திரத்துக்கான போராட்டம்தான். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களுக்கு இந்தியா உதவியிருக்கிறது. உதாரணமாக, தென்னாப்பிரிக்காவில் இனவெறி தலைவிரித்தாடியபோது, அன்றைக்கு இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, தென்னாப்பிரிக்காவின் இனவெறியை எதிர்த்து, அந்த நாட்டோடு இந்தியாவுக்கு இருந்த உறவையே துண்டித்துக்கொண்டார்.
இலங்கையில் சிங்களம் - தமிழ் என்ற இன வாதத்தின் அடிப்படையில் நடைபெற்ற போராட்டத்திலும் தமிழ்ப் போராளி அமைப்புகளுக்கு இந்தியா பெருமளவில் உதவி செய்துவந்திருக்கிறது. ஆனால், ராஜீவ் காந்தி கொலை வழக்குக்குப் பிறகு இந்த நிலைமை அப்படியே மாறிப்போனது. ராஜீவ் கொலையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்பது குறித்து நான் தெரிவித்த கருத்துகளை ஜெயின் கமிஷன் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் `பல்முனை நோக்கு புலனாய்வு' மூலமாக இன்றளவிலும் விசாரணை நடைபெற்றுவருவதாக இந்தியத் தரப்பிலும் சொல்லப்படுகிறது.
20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவதோ அல்லது இதுவரை விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்கள் குறித்து கேட்டறிந்தாலோ போதும்... இங்கிலாந்து இப்போது எடுத்திருக்கும் முடிவைத்தான் இந்தியாவும் எடுக்க வேண்டி வரும் என்பது என்னுடைய தனிப்பட்ட, அழுத்தமான எண்ணம்.
இந்தியா, ஜனநாயகத்தை நேசிக்கக்கூடிய நாடு. இன்றைக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க., `இந்து மதப் பாதுகாவலன்' என்று சொல்லித்தான் பொறுப்புக்கு வந்திருக்கிறது. இலங்கையில் நடைபெற்றது இனவாதம் என்றாலும்கூட, அங்கே கொல்லப்பட்டவர்கள் அனைவருமே இந்துக்கள். கொன்று குவித்தவர்கள் பௌத்தர்கள். இந்தச் சூழலில், மற்ற கட்சிகளுக்கோ இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசியல் காரணங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், பா.ஜ.க-வுக்கு அரசியல் காரணத்தைத் தாண்டி, அவர்கள் சொல்லிவரும் 'இந்து மதப் பாதுகாவலன்' என்ற காரணமும் அடங்கியிருக்கிறது. இப்போதும் இலங்கையிலேயே இந்துக் கோயில்கள் இடிக்கப்படுவதும், புத்த விஹார்கள் கட்டப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.
Also Read: ``பயமா இருக்குங்க!''- பஞ்சாயத்துத் தலைவர் செல்வியை அச்சுறுத்தும் சாதி ஆதிக்கம்
பா.ஜ.க இதுநாள் வரையிலும் சொல்லிவருவது உண்மையென்றால், அந்த உண்மையை உலகறியச் செய்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். எனவே, உடனடியாக மத்திய பா.ஜ.க அரசு, பல்முனை நோக்கு புலனாய்வுக்குழுவின் விசாரணை முடிவுகளைப் பெற்று, அதன்பேரில் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து, இங்கிலாந்து காட்டும் வழியில் இந்தியாவை பயணப்படவைக்க வேண்டியது அதன் கடமை!' என்கிறார் அழுத்தமாக.
பா.ஜ.க-வின் தமிழக துணைத் தலைவரும், வழக்கறிஞருமான வானதி சீனிவாசன் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``இங்கிலாந்து நாட்டிலுள்ள நீதிமன்றத் தீர்ப்பு, `விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தவறானது' என அமைந்திருக்கிறது. இந்தநிலையில் அந்த நாடு இது குறித்து என்ன முடிவெடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.
2009-க்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கம், இலங்கையிலேயே செயல்பட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இயங்காத ஓர் இயக்கத்தின் மீதான தடையை நீக்கம் செய்வதால், எந்த மாதிரியான பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும் என்பதை எங்களால் சொல்ல முடியவில்லை. இந்தச் சூழலில், தடையை நீக்குவதற்கான முயற்சியை யார் எடுக்கவிருக்கிறார்கள் என்பதையெல்லாம் கவனித்துத்தான் இந்திய அரசும் இதில் ஒரு முடிவெடுக்க முடியும்.
Also Read: ஆஸ்திரேலிய இணையதளத்தில் ஆயுதங்கள் ஆர்டர்! - என்.ஐ.ஏ ரேடாரில் சிக்கிய ஒடிசா இளைஞரின் `பிராங்க்’
இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கே வந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் வெளியில் சென்று வேலை பார்க்கும் வசதிகளெல்லாம் அளிக்கப்பட்டேவருகின்றன. `விடுதலைப் புலிகள்' என்ற பார்வையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாக சமீபகாலங்களில் எந்தச் செய்தியும் கிடையாது. ஈழத் தமிழ் மக்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வது உள்ளிட்ட விஷயங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க அரசு செய்துதான் வருகிறது. மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் மற்றும் பயணத் தொடர்பு உள்ளிட்ட விஷயங்களில் இலங்கை அரசுடன் வலுவான தொடர்பையும் ஏற்படுத்தியிருக்கிறோம். இதற்கான அழுத்தங்களையும் தமிழக பா.ஜ.க தொடர்ந்து கொடுத்துவருகிறது.
தடையை இன்னும் நீட்டிப்பது அர்த்தமுள்ளதாக இருக்குமா அல்லது தடையை விலக்குவதால் இங்கிருக்கும் அகதிகளுக்கு புதிய வாழ்க்கை கிடைக்குமா என்பதையெல்லாம் இந்த சமயத்தில் சொல்ல முடியவில்லை. உலக நாடுகளில், தீவிரவாதத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. எனவே, இந்த விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையான முடிவை எடுக்கவே வாய்ப்பிருக்கிறது'' என்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/india-to-handle-carefully-ltte-ban-lift-order-of-uk-tribunal-says-bjp-vanathi-srinivasan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக