Ad

திங்கள், 17 ஜனவரி, 2022

ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகள் - ஓர் ஆபூர்வ திரைப்படம்! #MyVikatan

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்’ என்பது வள்ளுவன் வாக்கு.

மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், வானத்துள் வாழும் தெய்வம் போல மதிக்கப்படுவான்.

வள்ளுவன் வாக்கை வாழ்வியல் தத்துவமாக கொண்டு வாழும் ஒரு முதிய தம்பதியின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘வோர்டக்ஸ்’ எனும் திரைப்படம்,19-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நிறைவுத் திரைப்படமாக திரையிடப்பட்டது.

Vortex

இயக்குநர் கஸ்பர் நுயி முதியவர்களின் வாழ்வியலை மிகச்சிறப்பான திரைமொழியில் உருவாக்கி இருக்கிறார். இரண்டு சிசிடிவி கேமரா வழியாக காட்சிகளை பார்க்கும் வகையில் முழு திரைப்படத்தையும் கட்டமைத்து இருக்கிறார்.

திரையை இரு பாகமாக பிரித்து ஒரே சமயத்தில் இரண்டு காட்சிகளை ஒரு திரைப்படம் முழுக்க பார்வையாளர்கள் காண வைத்தது ஏன்? ஒரு இடத்தை கண்காணிக்கவும் பாதுகாக்கவும் சிசிடிவி கேமரா பயன்படுத்துகிறோம். அதே போன்று முதியவர்களை கண்காணித்து பாதுகாக்க வேண்டும் என்பதை புரிய வைக்கவே இது போன்ற காட்சியமைப்பை இயக்குனர் கஸ்பர் நுயி கட்டமைத்து இருக்கிறார்.

ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகளை காட்டுவதற்காக இயக்குனர் உருவாக்கிய சட்டகங்கள் பிரமிக்க வைக்கின்றன. அதே போன்று இரண்டு காட்சிகளுக்கு உரிய ஒலியையும் வடிவமைப்பதில் ஆளுமை செலுத்தி இருக்கிறார். ஒரே நேரத்தில் இடம் பெறும் இரண்டு ஒலிகளில் ஒன்றை மட்டுப்படுத்தி மற்றொன்றை கூட்டி வடிவமைத்து வழங்கியிருக்கிறார். இதனால் பார்வையாளர்கள் எந்த குழப்பமும் இன்றி ஒலியை உள்வாங்கி காட்சிகளோடு பொருத்திப் பார்க்க முடிகிறது.

முதிய தம்பதியின் கணவருக்கு இதயத்தின் செயல்திறன் குறைந்து வருகிறது. மனைவிக்கு மூளையின் செயல்திறன் மிகவும் குறைந்து விட்டது. அவரால் தனது கணவரையும் மகனையும் அடையாளம் காண முடிவதில்லை. இருவரையுமே வேற்று மனிதர்களாகத்தான் நினைக்கிறார். குறிப்பாக கணவரை அயல் மனிதனாக நினைத்து அச்சம் அடைகிறார். சொந்த வீட்டில் இருக்கும் போதே 'வீட்டிற்கு போகணும்' என அடம்பிடிக்கிறார். இது போன்ற காட்சிகளால் முதியவர்களின் அவலங்களை பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறார் இயக்குனர் கஸ்பர் நுயி.

முதியவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் திரைக்கதையில் போதை மருந்துக்கு அடிமையான மகன், இன்றைய விஞ்ஞான யுகத்தின் குழந்தையாக வாழும் பேரன் ஆகியோரது வாழ்க்கையும் ஹைக்கூ கவிதை போல் இடம் பெற்றுள்ளது.

Vortex

ஃபார்முலா திரைப்படங்களில் பால் குடித்து பழகிய பச்சிளம் பார்வையாளர்கள் வோர்டக்ஸ் திரைப்படத்தின் கட்டமைப்பை புரிந்துகொள்ள இயலாமல் தெறித்து ஓடினார்கள். அதுபோலத்தான் முதியவர்களின் சிக்கல்களை புரிந்துகொள்ள முயற்சிக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தவும் முதியவர்களின் வாட்டத்தை போக்கவும் வோர்டெக்ஸ் போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டும்.

இயக்குநர் கஸ்பர் நுயி
Vortex | Directed by: Gaspar Noe | Written by: Gaspar Noe | Cinematography: Benoit Debie | Edited by: Denis Bedlow | 2021 | French | 135 min |


source https://cinema.vikatan.com/tamil-cinema/vortex-french-film

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக