Ad

சனி, 1 ஜனவரி, 2022

காட்டேஜ் சீஸ் சாலட் | சில்லி பனீர்| சீஸ் பால்ஸ் | பட்டர் புட்டிங் - வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

பிறந்த குழந்தைகள் முதல் வளரும் பிள்ளைகள், பெண்கள் என அனைவருக்கும் பால் அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். அதிலுள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு உதவும். ஆனாலும், வெறும் பாலாகக் குடிப்பதில்தான் பலருக்கும் பிரச்னையே. பால் பிடிக்காதவர்களுக்கு பாலின் நற்குணங்கள் அடங்கிய பால்பொருள்களில் தயாரிக்கக்கூடிய சுவையான ரெசிப்பீஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வார வீக் எண்டை கால்சியம் ரிச்சாகக் கொண்டாடுங்களேன்...

தேவையானவை:

பனீர் (காட்டேஜ் சீஸ்) - 250 கிராம்

கேரட் - 100 கிராம்

பூண்டு - 2 பல்

லெட்யூஸ் இலை - 150 கிராம்

கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - அரை டீஸ்பூன்

வால்நட் - 4 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்)

மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

காட்டேஜ் சீஸ் சாலட்

செய்முறை:

பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், ஊறவைத்த பனீர் மற்றும் தோல் நீக்கிய முழுப்பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். பிறகு, அகலமான பௌலில் பொரித்தெடுத்தவற்றுடன் தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்தையும் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

தேவையானவை:

பனீர் - 200 கிராம்

மைதா மாவு - 75 கிராம்

கார்ன்ஃப்ளார் மாவு - 25 கிராம்

பெரிய வெங்காயம் - ஒன்று

குடமிளகாய் - ஒன்று

பச்சைமிளகாய் - 4

இஞ்சி - ஒரு டீஸ்பூன்

பூண்டு - 4 பல்

செலரி தண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்

வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்

சிவப்புமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன் (மாவு கலவைக்கு)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

தண்ணீர் - 50 மில்லி

சில்லி பனீர்

செய்முறை:

பனீரை சதுரமாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு, செலரி, பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாகவும், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை சதுரமாகவும் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, அரை டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். இதில் நறுக்கிய பனீரை முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சைவாசனை போனதும் செலரி, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கிய பிறகு சிவப்புமிளகாய் சாஸ், சோயா சாஸ், உப்பு, தண்ணீர் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வேகவிடவும். இந்தக் கலவை கொதித்து வந்ததும், இத்துடன் பொரித்தெடுத்த பனீரைச் சேர்த்து நன்றாகக் கிளறி, கலவை பனீரோடு சேர்ந்து வரும்வரை இரண்டு நிமிடம் சிம்மில் வேகவிட்டு இறக்கவும். இதில், நறுக்கிய வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.

தேவையானவை:

மொசரெல்லா சீஸ் - 20

சின்ன துண்டுகள்

உருளைக்கிழங்கு - 4

பெரிய வெங்காயம் - ஒன்று

பச்சைமிளகாய் - 3

பிரெட் கிரம்ப்ஸ் - 50 கிராம்

முட்டையின் வெள்ளைக் கரு - ஒன்று

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

சீஸ் பால்ஸ்

செய்முறை:

வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும், இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள் கலந்து வதக்கி இறக்கவும். இதை கைபொறுக்கும் சூட்டில் எடுத்து, நடுவே ஒரு சீஸ் துண்டினை வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பவுலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உடைத்து ஊற்றவும். இதில் உருட்டி தயாராக வைத்துள்ள சீஸ் உருளைக்கிழங்கு உருண்டையை முக்கியெடுத்து பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி, ஒரு தட்டில் அடுக்கவும். இப்படி எல்லா உருண்டைகளையும் தயார் செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீஸ் பால்ஸை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதைப் பூண்டு சாஸ் அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

தேவையானவை:

வெண்ணெய் - 75 கிராம்

மைதா மாவு - 75 கிராம்

பொடித்த சர்க்கரை - 75 கிராம்

வெனிலா எசன்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

முட்டை - ஒன்று

பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்

சாக்லேட் சாஸ் - தேவையான அளவு

சாக்லேட் கிரம்ப்ஸ் - சிறிதளவு

பட்டர் புட்டிங்

செய்முறை:

அகலமான ஒரு பௌலில் வெண்ணெய், பொடித்த சர்க்கரையைச் சேர்த்து முட்டையை அடித்து கலக்கும் கருவியால் க்ரீம் பதத்துக்கு நன்கு அடித்துக் கொள்ளவும். இதனுடன் முட்டை, வெனிலா எசென்ஸ், பேக்கிங் பவுடர், மைதா மாவு சேர்த்து பீட்டரால் நன்கு அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய சிறிய அலுமினிய கிண்ணத்தில் ஊற்றிக்கொள்ளவும். பேக்கிங் அவனில் 150 டிகிரி செல்ஷியஸில் 30 நிமிடங்களுக்கு கலவையுள்ள கிண்ணத்தை வைத்து பேக் செய்யவும். அவனில் இருந்து எடுத்து சூடு ஆறியதும், கிண்ணத்தில் இருக்கும் கலவையை ஒரு பிளேட்டில் அப்படியே கவிழ்த்து வைக்கவும். இதன் மேல் சாக்லேட் சாஸ் ஊற்றி சாக்லேட் கிரம்ப்ஸ் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:

மைக்ரோவேவ் அவன் பயன்படுத்துவதற்குப் பதிலாக இட்லி பாத்திரத்தில் கிண்ணத்தை வைத்து, சில்வர் ஃபாயிலால் மூடியும் கூட வேக வைக்கலாம்.



source https://www.vikatan.com/news/recipes/chilly-paneer-cheese-balls-butter-pudding-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக