Ad

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

ஸ்பார்க் இல்லை, தீப்பந்தமே எரிந்தது... சாம் கரண், கெய்க்வாட் அதிரடியால் வென்ற சென்னை! #RCBvCSK

'இழப்பதற்கு எதுவுமேயில்லை!' என்னும் நிலையில், நம்மையும் அறியாமல் புதுக் கிளர்ச்சியும், 'என்ன வந்தாலும் வரட்டும்!', என்ற தைரியமும் உத்வேகமும் வந்து விடுகிறது. அப்படி ஒரு கட்டத்தில் வந்து நின்ற சிஎஸ்கே, கடைசி சில போட்டிகளில் காணப்பட்ட பதற்றம், பயம் எல்லாவற்றையும் விட்டொழித்து, இன்று ஆர்சிபியை வீழ்த்தி இருக்கிறது. இல்லாமல் போனதாய் தோனி குறிப்பிட்ட தீப்பொறி தென்படுமா எனப் பார்த்திருந்த போது, கொளுந்து விட்டு எரியும் தீப்பந்தமாகவே மாறிய கெய்க்வாட்டின் ஆட்டத்தால், மிகச் சுலபமாய் வென்றிருக்கிறது.

டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது‌. இனிவரும் போட்டிகளிலாவது இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பாரா தோனி என எதிர்பார்க்கப்பட, இந்தப் போட்டியில் கெய்க்வாட், மோனு குமார், ஜெகதீசன், சான்ட்னர் என அனைவருக்கும் வாய்ப்பளித்தருந்தார். ஆர்சிபி தரப்பிலோ உடானாவுக்குப் பதில் மோயின் அலி களம் இறக்கப்பட்டார்.

#RCBvCSK

இன்றைய போட்டியில் விளையாட பச்சை ஜெர்ஸியில் ஆர்சிபி இறங்க, இதுவரை இந்த பச்சை ஜெர்ஸியில் ஆடிய 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே ஆர்சிபி வென்றிருக்கிறது என்பது சென்னை ரசிகர்களுக்கு ஒருவேளை இது நமக்கு அதிர்ஷ்டமாகுமோ என சிறிய நம்பிக்கையை அளிக்க, இறுதியில் பச்சை சட்டை லக் சென்னைக்கு ஃபேவராக முடிந்தது‌.

ஆர்சிபிக்கு தொடக்கம் இந்தத் தடவையும் சரியாக அமையவில்லை. இந்த ஐபிஎல் தொடரின் மிக மோசமான ஓப்பனர்களில் ஒருவரான ஆரோன் ஃபிஞ்ச், சாம் கரணின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றினார். கோலி உள்ளே வந்த தருணத்தில், பவர்பிளே ஓவரின் முடிவில் மொத்தமே 46 ரன்களை மட்டுமே அவர்களால் சேர்த்திருக்க முடிந்தது.

ஏழாவது ஓவரின் முதல் பந்தை சான்ட்னர் வீச, 22 ரன்களுடன் களத்தில் இருந்த படிக்கல் அதனை சிக்ஸருக்குத் தூக்க, பவுண்டரி லைனுக்கு முன்னதாகவே பந்து தரையில் இறங்க, அதனை அருமையாய்க் கேட்ச் பிடித்த டூ பிளஸ்ஸிஸ், பவுண்டரி ரோப்பைத் தொட்டுவிடும் கடைசித் தருணத்தில் பந்தை கெய்க்வாடிடம் வீச, இரண்டாவது விக்கெட்டையும் ஆர்சிபி இழந்தது‌. அடுத்ததாய் உள்ளே வந்து ஏலியன் ஏபிடியுடன் கோலி கைகோக்க, தொடக்கத்தில் மிக மெதுவாக பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்திலேயே தொடங்கிய இந்தக் கூட்டணி, மோனு குமார் வீசிய 17வது ஓவரிலும், ஜடேஜாவின் 18வது ஓவரிலும் தலா 13, 11 ரன்களைக் குவித்தது இந்த அணி. திரும்பவும் ஒரு பிக் ஸ்கோர் கேமாக இது மாறப் போகிறதோ என்ற பயம் சிஎஸ்கே ரசிகர்களைக் கவ்விய தருணம், தீபக் சஹாரின் பந்தில் 39 ரன்களைக் குவித்திருந்த ஏபிடி ஆட்டமிழந்தார். இங்குதான் ஆர்சிபி தங்கள் மொமண்டை தவறவிட்டது.

#RCBvCSK

ஏபிடிக்கு அடுத்து வந்த அதனைத் மொயின் அலியை சாம் கரண் அவுட் ஆக்கியது மட்டுமல்லாமல், அதே ஓவரின் கடைசிப் பந்தில் கோலியையும் ஆட்டமிழக்கச் செய்து மாஸ் காட்டினார். சென்ற போட்டியில் பேட்டிங்கில் கலக்கிய இந்தக் கடைக்குட்டி, இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தான் ஒரு ஆல் இன் ஆல், ஆல் ரவுண்டர் என நிரூபித்திருக்கிறார். 43 பந்துகளில் அரைச்சதத்தைப் பதிவு செய்த கோலி அடித்த பந்தை, டூ பிளஸ்ஸிஸ் மிக அற்புதமாகக் கேட்ச் பிடித்தார். சிஎஸ்கேயின் எல்லைச்சாமியாக மாறியிருக்கும் டூ பிளஸ்ஸிஸ் ஃபீல்டிங்கில் புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டே இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து வந்த கிரிஸ் மோரிஸை, தீபக் சஹார் போல்ட் ஆக்கி அனுப்ப, வெறும் 146 என்ற இலக்கை சிஎஸ்கேக்காக நிர்ணயித்திருந்தது ஆர்சிபி. டெத் பௌலிங்கில் கலக்கிய சென்னை அணியினர், கடைசி நான்கு ஓவர்களில் 31 ரன்களை மட்டுமே கொடுத்து, 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். போட்டியை மொத்தமாய் சென்னை தங்கள் சட்டைப்பைக்குள் சுருட்டி வைத்துக் கொண்டது இதனால்தான். இன்னுமொரு 20 ரன்கள் ஆர்சிபியால் எடுக்கப்பட்டிருந்தால் போட்டி ஆர்சிபியின் பக்கம் முடிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

#RCBvCSK

இரண்டு விக்கெட்டுகள் மிக விரைவாய் விழுந்தது, கோலி - ஏபிடியிடமிருந்து வழக்கமான அதிரடி வெறியாட்டம் வெளிப்படாதது, டெத் ஓவர்களில் சென்னை வீரர்களின் அபாரப் பந்து வீச்சு, இவை எல்லாம் சென்னைக்குச் சாதகமான அம்சமாக மாற, நடந்தே அடையக் கூடிய இலக்கு வைக்கப்பட்டது. ஆனாலும் கூட சென்னை ரசிகர்களால் இது எட்டக்கூடிய இலக்குதான், இந்தப் போட்டியில் சென்னை சுலபமாய் வென்று விடும் என்று நிமிர்ந்து உட்கார முடியவில்லை. மும்பைக்கு எதிரான முந்தைய போட்டியில், அவர்களின் ஆகச்சிறந்த செயல்பாடு, ரசிகர்களின் கண்களில் வந்து வந்து போனதே இந்தப் பதற்றத்திற்குக் காரணம்.

145 என்ற எளிய இலக்கை அடைய இறங்கிய கெய்க்வாட் மற்றும் டூ பிளஸ்ஸிஸ் கூட்டணி அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. போட்டியின் முதல் ஓவரை சுந்தர் வீச, அதில், ஒரு ரன்னை மட்டுமே இந்தக் கூட்டணி எடுக்க, வழக்கம் போல சிஎஸ்கேயிடம் இருந்து ஒரு டெஸ்ட் இன்னிங்ஸைத்தான் பார்க்கப் போகிறோம் என ரசிகர்கள் நொந்து நூடுல்ஸான சமயம், அம்பி மோடில் இருந்து அந்நியன் மோடுக்கு மாறிய இந்தக் கூட்டணி, அதற்கடுத்து வந்த மோரிஸ், சுந்தர், சிராஜ் ஓவர்களை வெளுத்து வாங்கியது. குறிப்பாக இவர்கள் சிராஜின் ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் விளாச, "நம்ம சிஎஸ்கேயா இது?!" என ரசிகர்கள் வாயைப் பிளந்தனர். அடுத்து சிராஜ் பந்துவீச மறுபடியும் வந்தபோது, "உங்கள் சிஎஸ்கேயேதான்!" என்று கூறுவதைப்போல் கோலி ஒரு ரன் அவுட்டைத் தவற விட்டு வாய்ப்புக் கொடுக்க, அதைப் பயன்படுத்தி கொள்ளாமல் அடுத்து வந்த மோரிஸின் ஓவரிலேயே டூ பிளஸ்ஸிஸ் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயின் முடிவில், வெல்வதற்கு 98 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் சென்னை வந்து நின்றது.

#RCBvCSK

அடுத்ததாய் ஒன் டவுனாய் அம்பதி ராயுடு உள்ளே இறங்கி கெய்க்வாட்டுடன் இணைந்தார். மிரட்டல் மன்னர்களாக மாறிய இந்த இரட்டைக்கதிர்கள், 50 பந்துகளில் 67 ரன்களைக் குவித்து, பந்துகளுக்கும் தேவைப்படும் ரன்களுக்குமான இடைவெளியைக் குறைத்தனர். 27 பந்துகளில் 39 ரன்களை எடுத்திருந்தபோது, ராயுடுவின் விக்கெட்டை மோரிஸ் வீழ்த்தினாலும், 'நீங்க ரொம்ப லேட் பாஸ்!', என்பது போலத்தான் நிலைமை இருந்தது. அடுத்ததாய், தோனி உள்ளே வர இருவரும் இனைந்து ஆட்டத்தை எளிதாக முடித்து வைத்தனர், 42ஆவது பந்தில் 'அனல் தெறிக்கும்' அரைச்சதத்தைப் பதிவு செய்தார் எழுச்சிமிகு 'இளைஞர்' ருத்துராஜ் கெய்க்வாட்!

Also Read: பஞ்சாப் பவர்... ஜாலியாகி காலியான ஹைதராபாத்! #KXIPvSRH

தோனியின் ஸ்டைலில், ஒரு சிக்ஸருடன் கெய்க்வாட் வின்னிங் ஷாட்டை அடிக்க, சென்னை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2 புள்ளிகளைப் பெற்ற சென்னை, பாயிண்ட்ஸ் டேபிளில் அதள பாதாளமான கடைசி இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி ஏழாம் இடத்திற்கு வந்துள்ளது.

#RCBvCSK

ஸ்லோ பிட்சில் சிஎஸ்கேயின் மீடியம் பேஸ் பௌலிங் எடுபட்ட அளவுக்கு ஆர்சிபியின் பௌலிங் எடுபடவில்லை. இதுவும், கெய்க்வாட்டின் பொறுப்பான ஆட்டமும்தான் இரண்டாவது பாதியில் சிஎஸ்கேயின் வெற்றி உறுதியாகக் காரணமாய் அமைந்தது.

சென்னை தவறுகளை எல்லாம் மொத்தமாய் திருத்தி விட்டதா, இல்லையேல் ஆர்சிபியின் பௌலிங் எடுபடாததுதான் காரணமா என விவாதங்கள் தொடர்ந்தாலும், சென்னை ரசிகர்களுக்கு இது வேல் பாய்ந்த இதயத்திற்கு மயிலிறகால் மருந்திடுவது போன்ற ஓர் ஆறுதல் வெற்றியே!


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-csk-registers-a-comfortable-8-wicket-win-against-rcb

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக