Ad

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

`நண்பரைப் பற்றி இப்படிதான் பேசுவீர்களா ட்ரம்ப்?!’- இந்தியா குறித்த கருத்துக்கு ஜோ பைடன் பதிலடி

அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாகவே பலர் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையேயான இறுதி விவாதமானது கடந்த வெள்ளிக்கிழமையன்று பல்வேறு காரசாரமான வாதங்களுடன் நடந்து முடிந்தது. அதில், சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து கேள்வி எழுப்பியபோது இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை குறித்து விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார் அதிபர் ட்ரம்ப்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் இன்று இந்திய-வெஸ்ட் என்னும் வார இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையை ரீ-ட்வீட் செய்து “நண்பர்களைப் பற்றி இப்படித்தான் பேசுவீர்களா ட்ரம்ப்?!- இது தான் நீங்கள் காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை தீர்க்கும் முறையா?!” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்ரம்ப்

மேலும் பைடன் அக்கட்டுரையில், “நானும், துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸும் இந்தியாவின் மீது கொண்டிருக்கும் உறவை பெரிதாக எண்ணுகிறோம். முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்கும்- இந்தியாவுக்கும் இடையேயான உறவு எப்படி சிறப்பாக இருந்ததோ, அதேபோல், ஜோ பைடன் – கமாலா ஹாரிஸ் ஆட்சிக்காலத்திலும் தொடரும்.

நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதோடு, இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு தீவிரவாதத்தையும், சீனா போன்ற எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களையும் முறியடிப்போம். இரு நாடுகளுக்கான பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

தீபாவளி கொண்டாடிய ஜோ பைடன்!

ஜோ பைடன் சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவுடன் இணைந்து தீபாவளியை பண்டிகையை கொண்டாடினார்.

ஜோ பைடன்

``சமீபத்தில், நிகழ்ந்த விவாதத்தில், டொனால்ட் ட்ரம்ப் உலக அரங்கில் இந்தியாவை மிகவும் இழிவாக விமர்சனம் செய்து விட்டார். மேலும், ட்ரம்ப் கொண்டுவந்த H1B விசா போன்ற செயல்களால் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியின் மீது கொண்டிருந்த நல்லுறவானது வெறும் கேமாராவின் கண்களுக்காக மட்டும் தானே அன்றி, அது உண்மையான நட்பல்ல” என்று அஜய் ஜெயின் என்னும் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் இந்தியர் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா(PTI) ஊடடத்திடம் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/joe-biden-attacks-trump-on-his-remark-over-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக