Ad

வியாழன், 22 அக்டோபர், 2020

`பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை... புகார் அளித்ததால் ட்ரான்ஸ்பர்?!’ - குமரி சர்ச்சை

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பெமிலா. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இவரை உயர் அதிகாரிகள் மற்றும் சில ஊழியர்கள் பணி செய்ய விடாமல் இடையூறு செய்து தாக்க முயன்றதாக கூறி நேற்று முந்தினம் முட்டம் ஆரம்ப சுகாதார வாயிலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் மீண்டும் பணிக்குச் சென்ற போது, அவர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட முடியாதபடி ரெஜிஸ்டர் புத்தகத்தை மறைத்து வைத்திருப்பதாக நேற்று புகார் கூறியுள்ளார். இதுகுறித்து பெமிலா கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் போஸ்கோ ராஜ் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கிறார்.

இதனால நான் அவர் மீது காவல் நிலையத்திலயும், துறை அதிகாரிகளுக்கும் பல முறை புகார்கள் கொடுத்துள்ளேன். என்னை மருத்துவமனையில இருந்து தனிமைப் படுத்துறதுக்கு சக ஊழியர்களை அவர் பயன்படுத்திகிட்டிருக்கிறார்.

சுகாதாரத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜ்

எனக்கு பல மிரட்டல்கள் வருது. அதனாலதான் வீட்டில இருந்தா குழந்தைக்க உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிரும்னு டெய்லி வேலைக்கு வரும்போது குழந்தையும் கூட்டிகிட்டு வர்றேன். எனக்கு ஏற்பட்ட நெருக்கடி பத்தி தமிழக முதல்வர், பெண்கள் ஆணையம், மனித உரிமை ஆணையம் மற்றும் பிரதமர் அலுவலகம் வரைக்கும் புகார் மனு அனுப்பியும் எந்த தீர்வும் ஏற்படல. முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில வேலை பார்க்க விடாம கடந்த பிப்ரவரி மாசத்தில இருந்தே எனக்கு ஹராஸ்மெண்ட் நடந்துகிட்டிருக்கு. இதுபற்றி புகார் அளித்ததுனால என்ன எப்பிடி தாக்கலாம்னு முயற்சி பண்ணிகிட்டிருக்காங்க. அதுல ஒரு முயற்சியாத்தான் என்ன பரமக்குடிக்கு ட்ரான்ஸ்பர் செய்திருக்கிறாங்க.

Also Read: குமரி: `பாரம்பர்யம் தவறினால் தடுத்து நிறுத்துவோம்!’ - எச்சரிக்கும் இந்து முன்னணியினர்

நான் பரமகுடிக்கு வேலைக்கு போகமுடியாதுன்னு அப்பீல் எழுதி கொடுத்திருக்கேன். இப்ப நான் முட்டத்துலதான் வேலைக்கு போய்கிட்டிருக்கேன். அட்டண்டன்ஸ ஒழிச்சு வச்சிருக்கிறாங்க. அதனால நான் ஜி.பி.எஸ் மூலமா லொக்கேஷன போட்டோ எடுத்து காலைல 9 மணிக்கும், சாயங்காலம் 4 மணிக்கும் அதிகாரிங்களுக்கு அனுப்பிகிட்டிருக்கேன். வேற டாக்டர்களுக்கும் இதுபோல பிரச்னைகள் இருக்கு. அவங்க அமைதியா போகிறாங்க, நான் எதிர்த்து போராடுறதுனால என்ன டார்க்கெட் பண்ணுறாங்க" என்றார்.

பாலியல்

இதுபற்றி சுகாதாரத்துறை டி.டி. போஸ்கோ ராஜிடம் பேசினோம், "அவங்க சொன்ன குற்றச்சாட்டுபற்றி ஸ்டேட் விமன் கமிஷன் கடந்த 6-ம் தேதி விசாரணை நடத்தியிருக்கிறாங்க. அதில இவங்க குற்றச்சாட்டு பொய்யின்னு நிருபணமாகியிருக்கு. அதனால சென்னையில இருந்தே அவங்களுக்கு பணிஸ்மெண்ட் குடுத்து ட்ரான்ஸ்பர் பண்ணியிருக்கிறாங்க. அவங்க பாலியல் குற்றச்சாட்டு சொல்லுவாங்கனு சொல்லி என்னை விசாரணைக்கு போடவேண்டாம்னு சொல்லிட்டேன். அதனால லேடி ஆப்பீசரபோட்டு விசாரணை நடத்தியிருக்கிறாங்க. இந்த ட்ரான்ஸ்பருக்கும் எனக்கும் என்ன சம்பந்தமும் இல்லை" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/kumari-women-doctor-says-she-was-sexually-tortured

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக