உலகமே கொரோனா கொடும் தொற்றிலிருந்து தப்பிக்க ஏதேனும் வழி கிட்டுமா என்று விழிவிரித்துக் காத்திருக்கிறது. இந்நிலையில் விரைவில் நடக்கவிருக்கும் பீகார் தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு ஓட்டுபோட்டு வெற்றிபெறச் செய்தால் கொரோனா தடுப்பூசி இலவசம் என நாட்டின் ஆளுங்கட்சியும், தமிழகத்தில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என மாநில அரசும், ஒரு மிகப்பெரிய `வரலாற்று' அறிவிப்பைச் செய்திருக்கின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகாரில் இந்த தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்.
நவீன விஞ்ஞான மருத்துவத்தின் மிக முக்கிய கண்டுபிடிப்பான தடுப்பூசி, பெரியம்மை எனும் Smallpox முதல் எண்ணில் அடங்காத பல கொடும் தொற்றுநோய்களில் இருந்து ஏராளமான குழந்தைகளைக் காத்து வருகிறது என்பது உண்மை. சொல்லப்போனால், உலகம் முழுதும் சுமார் 190 நாடுகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாகக் கொடுக்கப்படும் DPT எனும் முத்தடுப்பு ஊசியால் இதுவரை கோடிக்கணக்கான குழந்தைகளின் மரணங்கள் நிறுத்தப்பட்டது தடுப்பூசி அறிவியல் செய்திட்ட சரித்திர சாதனை.
இதுபோலவேதான் `மீசில்ஸ்' எனும் தட்டம்மை எத்தனையோ குழந்தைகளைக் கொன்று குவித்த நோய். ஆனால் இன்று தடுப்பூசி அதை வென்று லட்சக்கணக்கான சிறார்களைக் காத்து வருகிறது, எனவே இலவச தடுப்பூசி ஒன்றும் நமக்குப் புதிதல்ல. காசநோய் முதல் காலரா வரை... வெறிநாய்க்கடி முதல் வெரிசல்லா அம்மை வரை... கொடும் நோய்களை சின்ன ஊசிகள் மூலம் நாம் விரட்டி வந்திருக்கிறோம். வருகிறோம்.
யுனிவர்சல் இம்யூனைசேஷன் புரோகிராம் UIP (Universal Immunization Program)
கடந்த பல வருடங்களாக உலகம் முழுவதும் பல கொடுமையான நோய்களுக்கான இலவச தடுப்பூசிகள் உலக சுகாதார மையம் மற்றும் யுனிசெஃப் மூலம் நமக்கு கிடைக்கப்பெற்று வருகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதத்தில் GAVI எனும் அமைப்பும் இன்ன பிற தொண்டு நிறுவனங்களும் ஒருசேர இணைந்து செய்திட்ட பெரும் சாதனைதான் போலியோ ஒழிப்பு.
Tuberculosis
Diphtheria
Pertussis
Tetanus
Haemophilus Influenzae
Hepatitis B
Inactivated Poliomyelitis vaccine
Oral polio vaccine
Rotavirus vaccine
Measles vaccine
Rubella vaccine
MR vaccine
எனப் பல வகையான தடுப்பூசிகள், நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்தது முதல் பதின்பருவம் வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவ மையங்களிலும் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன. வருடந்தோறும் 2 நாள்களில் போலியோ ஒழிப்பு நாளாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டாயமாக போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. இவ்வளவு கொடிய போலியோ நோய், குழந்தைகளை வாழ்நாள் மாற்றுத்திறனாளிகளாக்கி விடாமல் தடுத்திட இலவசமாகவே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுவதும் நாம் அறிந்ததே.
கிட்டத்தட்ட அடிப்படை கல்வி போலவே, தடுப்பூசிகளும் ஒவ்வொரு பிரஜையுடைய முதல் உரிமையாகவே பார்க்கப்படுகின்றன. இதற்கிடையில் உலகம் முழுதும் தடுப்பூசி நிராகரிப்பாளர்களின் அறிவியலுக்கு எதிரான கருத்துகளாலும், அவர்களுடைய தடுப்பூசி நிராகரிப்பாலும், நாம் விரட்டிவிட்ட நோய்கள் ஆங்காங்கே எட்டிப் பார்த்ததையும் நாம் அறிவோம்.
உலகின் பல்வேறு காலகட்டத்தில் பெருந்தொற்றாக இருந்து வந்த கொடுமையான நோய்கள் பல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகத் தேடிச்சென்று இந்நோய்களுக்கெதிரான தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. காசநோய், போலியோ, கக்குவான் இருமல், ரணஜன்னி, தொண்டை அடைப்பான், மூளைக் காய்ச்சல், மஞ்சள் காமாலை, சின்னம்மை, பெரியம்மை, மூன்றம்மை, காலரா, ரோட்டா வைரஸ் சீதபேதி எனப் பல நோய்களையும் VPD (Vaccine Preventable Diseases), அதாவது தடுப்பூசியால் எளிதாகத் தடுக்கக்கூடிய கொடும் நோய்கள் என உலக சுகாதார மையத்தினால் பெயரிடப்பட்டு பல கோடி குழந்தைகள் காக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் நம் உள்ளூர் தலைவர்கள் வரை தடுப்பூசியை தேர்தல் கால அரசியல் நகர்வாக, மக்களைக் கவரும் ஒரு யுக்தியாக மாற்றப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. ஏனென்றால், கோவிட்19 தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி வந்தாலும் நாம் நினைப்பதுபோல உடனடியாக நம் நாட்டில் உள்ள 135 கோடி பேருக்கும் ஒரே நாளில் அதை கிடைக்கச்செய்ய சாத்தியமே இல்லை.
தற்போது தொடர் ஆய்வில் இருக்கும் 6 தடுப்பூசிகளில் எந்த ஊசி முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது தெரியாது. அப்படி வெற்றிகரமாக வெளிவரும் ஏதேனும் ஒரு தடுப்பூசி, நம் நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் சாமானியனுக்கும் எந்தத் தடங்கலும் இல்லாது வந்துசேர குறைந்தது ஒரு வருடம் ஆகும். இந்தத் தெளிவில்லாமல் ஓட்டு அரசியலுக்கான அறிக்கைகளை அள்ளிவீசி இருப்பதுகூட ஒரு வகையான பேராபத்துதான்.
VPD-க்களை தடுக்க இத்தனை வருடங்களாக உலகம் முழுதும் அளித்து வரும் தடுப்பூசிகள் போலவேதான் கோவிட்19 நோய்க்கான தடுப்பூசியும் இருக்கப்போகிறது. உலக சுகாதார மையத்தினுடைய ஆதரவினாலும், GAVI போன்ற அமைப்புகளுடைய உதவிகளினாலும், எளிதாக வாங்கிவிடக்கூடிய விலையில்தான் நமக்கு தடுப்பூசி கிடைக்கப்போகிறது என்பதுதான் உண்மை.
எனவே இதற்காக நடக்கும் அரசியல் நாடகங்களை உலகளாவிய நிலையில் குறைத்துக்கொண்டு, மக்கள் நலனை நினைவில்கொண்டு அடுத்தடுத்த நோய்ப்பரவல் தடுப்பு குறித்து அச்சப்பட வேண்டிய தருணத்தில்தான் இன்றும் இருக்கிறோம். இந்த நேரத்தில் தடுப்பூசி பற்றிய இப்படியொரு அதீத நம்பிக்கையைத் தந்து மக்களிடையே நோய் அச்சத்தினை விதைத்து, தனிமனித ஒழுக்கத்தையும் கெடுத்துக்கொள்வதில் உலக அளவில் பெரும் அரசியல் ஆதாயம் இருப்பதையே இது காட்டுகிறது.
தேர்தல் காரணத்திற்காக உணவையும் கல்வியையும் மருத்துவத்தையும் காண்பித்து நடத்திடும் இவ்வகையான அரசியல் அடுத்த தலைமுறையை நல்வழிப்படுத்திடுமா என்பது மிகப்பெரிய கேள்விதான்!
நோயின் தாக்கம் அதிகரிக்காமலும், நோயினால் ஏற்படும் இழப்புகளை குறைத்திடவும் மட்டும் எண்ணிட நினைப்போம். நமக்கான தரமான தடுப்பூசி வரும்வரை நம்மை நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்வோம்.
மருத்துவர் சஃபி M. சுலைமான், நீரிழிவு சிறப்பு மருத்துவர், நாகர்கோவில்
source https://www.vikatan.com/government-and-politics/healthy/why-politicians-using-vaccination-promises-in-their-election-campaign-is-danger
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக