மியூச்சுவல் ஃபண்டில் நாம் செய்யும் முதலீடு, நிகர சொத்து மதிப்பு என்கிற என்.ஏ.வி (NAV - Net Asset Value)-ன் படி யூனிட்களாக ஒதுக்கப்படும். முதலீட்டுத் தொகைக்கு ஏற்றவாறு யூனிட்கள் எண்ணிக்கை இருக்கும். பங்குச் சந்தையைப் போலவே மியூச்சுவல் ஃபண்ட்களும் வெளிப்படைத் தன்மையை கொண்டிருப்பவை.
இந்த என்.ஏ.வி மதிப்பு மாற்றம் (ஏற்றம் மற்றும் இறக்கம்) பங்கு விலை போலவே நடைபெறுகிறது. ஆனால், பங்கின் விலை நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கும். அந்த விலையில் நாம் வாங்கலாம். மியூச்சுவல் ஃபண்டில் அப்படி செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட நாளின் முடிவு என்.ஏ.வி மதிப்பில், குறித்த நேரத்துக்குள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இந்த நேரத்தை கட் ஆஃப் டைம் (Cut-off time) என்பார்கள்.
உதாரணத்திற்கு, ஒரு ஃபண்டின் கட் ஆஃப் நேரம் மதியம் 12:30 மணி என வைத்துக்கொள்வோம். மதியம் 12:30 மணிக்குள் முதலீடு செய்தால் மட்டுமே, அன்றைய நாளின் என்.ஏ.வி மதிப்பில் முதலீடு செய்ய முடியும். மதியம் 12:30 மணியை தாண்டி முதலீடு செய்தால், அடுத்த வணிக நாளின் என்.ஏ.வி மதிப்பில்தான் யூனிட்கள் ஒதுக்கப்படும். திங்கள் கிழமை மதியம் 2 மணிக்கு முதலீடு செய்தால், செவ்வாய் கிழமை என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் யூனிட்கள் ஒதுக்கப்படும். இதுவே வெள்ளிக் கிழமை மதியம் 2 மணிக்கு முதலீடு செய்தால், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அடுத்த வணிக நாளான திங்கள் கிழமையின் என்.ஏ.வி மதிப்பில் யூனிட்கள் ஒதுக்கப்படும்.
சமீபத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கின் போது, ரிசர்வ் வங்கி, நாட்டின் பணச் சந்தைகளுக்கான வர்த்தக நேரத்தை குறைத்தது. இதன் காரணமாக மியூச்சுவல் ஃபண்ட்களின் முதலீட்டிற்கான முதலீட்டு நேரத்திலும் செபியால் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான கட் ஆஃப் டைம் மதியம் 1:30 மணியிலிருந்து 12:30 மணியாக குறைக்கப்பட்டது. மற்ற ஃபண்ட்களுக்கான கட் ஆஃப் டைம் மாலை 3:00 மணியிலிருந்து மதியம் 1:00 மணியாக குறைக்கப்பட்டது.
புதிய கட் ஆஃப் நேரம்
இப்போது செபி அமைப்பின் அறிவுறுத்தலின்படி, அக்டோபர் 19 முதல் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு மற்றும் யூனிட்களை விற்பனை செய்வதற்கான கட் ஆஃப் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது. இதில், லிக்விட் ஃபண்ட், கடன் சார்ந்த ஃபண்ட்களில் கொரானா பாதிப்பால் மாற்றப்பட்ட கட் ஆஃப் நேர அப்படியே இருக்கிறது.
அதன் விவரம் வருமாறு:
கட் ஆஃப் டைம்: முதலீடு
லிக்விட் ஃபண்ட்: மதியம் 12:30 மணி வரை
கடன் சார்ந்த ஃபண்ட், கன்சர்வேடிவ் ஹைபிரிட் ஃபண்ட்: மதியம் 1 மணி வரை
அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட், மற்றும் இதர ஃபண்ட்கள்: மாலை 3 மணி வரை
கட் ஆஃப் டைம் : யூனிட் விற்பனை
லிக்விட் ஃபண்ட், கடன் சார்ந்த ஃபண்ட்கள், கன்சர்வேடிவ் ஹைபிரிட்: மதியம் 1 மணி வரை
அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் இதர ஃபண்ட்கள்: மாலை 3 மணி வரை
![](https://gumlet.assettype.com/vikatan/2019-05/501b690b-2c5b-420c-b720-563de3c4a6fa/102028_thumb.jpg)
ஃபண்ட்களுக்கு இடையே பரிமாற்றம் (Switch in / out scheme) :
பங்கு சார்ந்த ஃபண்டிலிருந்து பங்கு சார்ந்த ஃபண்ட்க்கு: மாலை 3 மணி வரை
பங்கு சார்ந்த ஃபண்டிலிருந்து கடன் அல்லது லிக்விட் ஃபண்டுக்கு - மதியம் 1 மணி வரை
கடன் சார்ந்த ஃபண்டிலிருந்து கடன் அல்லது பங்கு அல்லது லிக்விட் ஃபண்டுக்கு - மதியம் 1 மணி வரை
லிக்விட் ஃபண்டிலிருந்து - பங்கு அல்லது கடன் அல்லது லிக்விட் ஃ பண்டுக்கு - மதியம் 1 மணி வரை
இந்த மாற்றங்கள் மொத்தமாக முதலீடு செய்பவர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டியவை. SIP முறையில் முதலீடு செய்பவர்களுக்கு பிரச்னை இல்லை.
நா.சரவணகுமார், ஆலோசகர், Richinvestingideas.com
source https://www.vikatan.com/business/investment/what-is-cut-off-timings-in-mutual-funds-and-how-it-works
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக