``எனக்கு ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கவில்லை. ஆனால், என்னைவிடக் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கியுள்ளார்கள்" என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார் மதுரையை சேர்ந்த பூரணசுந்தரி.
விழிச்சவால் மாற்றுத்திறனாளியான பூரணசுந்தரி, அதைக் குறையாகக் கருதி சோர்ந்துவிடாமல் தன் திறமையாலும் தன்னம்பிக்கையாலும் தடைகள் தாண்டி கல்வி கற்று சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று மதுரைக்கு பெருமை சேர்த்தவர்.
மதுரை மணி நகரத்தைச் சேர்ந்த பூரணசுந்தரிக்கு 5 வயதில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டது. பெற்றோரின் ஆதரவாலும் கற்பித்தல் முறைகளாலும் பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கியவர், பட்டப்படிப்பை முடித்து பல்வேறு போட்டித்தேர்வுகளில் பங்கெடுத்து வந்தார். அதில் வெற்றிபெற்று இரண்டு வருடங்களுக்கு முன் வங்கிப்பணியில் சேர்ந்தார்.
வங்கியில் வேலைபார்த்துக் கொண்டே வீட்டிலும் பயிற்சி மையத்திலும் தன் லட்சியமான ஐ.ஏஸ்.எஸ் தேர்வுக்குத் தயாராகி வந்தவர், 2019-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில், தனது நான்காவது முயற்சியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் மதுரைக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே பெருமை தேடித்தந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த ரிசல்ட் வெளியானபோது, அகில இந்திய அளவில் 286-வது இடம்பெற்ற இவரை அனைத்துக் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் பாராட்டினார்கள்.
``ஐ.ஏ.எஸ் பணியில் எளிய மக்கள், பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் ஆகியவற்றிற்காக இயங்குவதோடு, அவர்களுக்கான நலத்திட்டங்களையும் செயல்படுத்துவேன்" என்று வெற்றி பெற்ற தருணத்தில் நம்மிடம் உற்சாகமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், அவருக்கு ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கப்படாமல் ஐ.ஆர்.எஸ் பணி ஒதுக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் பூரணசுந்தரி.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ``ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் உட்பட 713 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இத்தேர்வில் நான் ஓபிசி பிரிவில் 286-வது இடம் பெற்றேன். தற்போது எனக்கு ஐ.ஆர்.எஸ் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவில் என்னைவிடக் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணி வழங்கப்பட்டுள்ளது. அதே பிரிவில் அதிக மதிப்பெண் எடுத்த எனக்கு வழங்கப்படவில்லை. இதனால் என் போன்ற மாற்றுத்திறனாளிகள் பாதிப்புக்கு உள்ளாவோம்.
2017-ம் ஆண்டு முதல் மத்திய மாநில அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவது நடைமுறையில் உள்ளது. இது ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் பணியிடங்களில் 2018 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சிவில் சர்வீஸ் பணி நியமனங்களில் இந்த இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை.
ஒவ்வொரு பிரிவிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு விதிப்படி இடம் ஒதுக்கியிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் ஐ.ஏ.எஸ் பணியில் 1% இட ஒதுக்கீட்டில் தற்போது ஒருவருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு ஐ.ஏ.எஸ். பணி வழங்க ஓர் இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
பூரணசுந்தரி தற்போது பயிற்சிக்காக முசோரிக்கு சென்றுள்ளதால் அவரிடம் பேச முடியவில்லை. அவர் தந்தை முருகேசனிடம் பேசினோம். ``ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கப்படும் என்று நம்பிக்கையுடன் இருந்தார் பூரணசுந்தரி. ஆனால், நிர்வாகம் அவருக்கு ஐ.ஆர்.எஸ் பணியிடம் ஒதுக்கியது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறைவான மதிப்பெண் எடுத்த பலருக்கும் ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கியுள்ளார்கள். இவருக்கு மட்டும் ஒதுக்காதது ஏன் என்பது விளங்கவில்லை. தன்னம்பிக்கையுடன் படித்து தேர்வில் வெற்றி பெற்றார். விதிகளின்படி அவருக்கு ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. அதற்காகத்தான நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளார். நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். என் பெண்ணுக்குத் தடைகள் புதிதல்ல. இந்தத் தடையையும் அவர் தளராமல் கடப்பார்'' என்றார்.
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் பூரணசுந்தரிக்காக வழக்கறிஞர்கள் கண்ணன், பாஸ்கர் மதுரம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டுள்ளனர். வழக்கறிஞர் கண்ணனிடம் பேசினோம்.
``அகில இந்திய அளவில் 286-வது ரேங்க் பெற்ற ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த பூரணசுந்தரிக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் வழங்காமல், அதே பிரிவில் அவரைவிட குறைவாக 304-வது ரேங்க் பெற்றவருக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கான 1% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 2 பேருக்கு ஐ.ஏ.எஸ் பணி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே, பூரணசுந்தரிக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வாதிட்டுள்ளோம். நிச்சயம் பூரணசுந்தரிக்கு ஐ.ஏ.எஸ் கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.
இந்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயக் கிளை, ``2019-ல் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது" என்று உத்தரவிட்டது. மேலும், மத்தியப் பணியாளர் நலன் அமைச்சக செயலர் மற்றும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 22-க்கு தள்ளி வைத்தது.
``மத்திய அரசுப் பணிகளில் ஓ.பி.சி-க்கான இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு பூரணசுந்தரி பணி நியமனத்தில் முறையாகப் பின்பற்றப்படவில்லை" என்று சமூக ஆர்வலர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கிறார்கள்.
பூரணசுந்தரிக்கு நீதி கிடைக்குமா?
source https://www.vikatan.com/news/tamilnadu/poorna-sundari-father-speaks-about-irs-posting-allotment-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக