விஜயதசமி நன்னாளில் குழந்தைகளுக்கு எழுத்தறித்தல் எனப்படும் அட்சராப்யாசம் செய்வித்து அன்றுமுதல் அவர்களுக்குக் கல்வியைத் தொடங்குவது மரபு. பொதுவாக சரஸ்வதி ஆலயங்களில், பள்ளிகளில், புண்ணிய தலங்களில் இந்தச் சடங்கைச் செய்வது வழக்கம். ஓவ்வோர் ஆண்டும் இதற்காகவே காத்திருக்கும் பெற்றோர் அநேகர். இந்த கொரோனா காலத்தில் ஆலயங்களில் வழக்கமாக நடைபெறும் அட்சராப்யாசம் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்த கவலைப் படத்தேவையில்லை என்கிறார்கள் பண்டிதர்கள். அவரவர் வீடுகளிலேயே அட்சராப்யாசம் செய்யலாம் என்கின்றனர். எளிமையாக வீட்டில் அட்சராப்யாசம் செய்வது எப்படி என்று காணலாம்.
அர்த்தமுள்ள அட்சராப்யாசம்
குழந்தைகள் பிறந்ததுமுதலே இந்த உலகில் தாம் காண்பவற்றைக் கற்றுவருகின்றன. கல்வியாக நாம் வீட்டில் சின்னச் சின்னப் பாடல்கள், கதைகள், எழுத்துகளை உச்சரித்தல் என்று சொல்லித்தருவோம். ஆனால், குழந்தை ஐந்துவயதைத் தொட்டதும் அதற்கு முறையான கல்வியைத் தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்கும் கல்வி அதன் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும். எனவே முதன்முதலில் கல்வி கற்கத் தொடங்கும்போது இறைவனை வழிபட்டுத் தொடங்குவது சிறப்பானது. அவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைக்கு இறைபக்தி உண்டாகும். கற்கும் கல்வியும் இறைவடிவமே என்பதை உணரும். இதற்காகவே அட்சராப்யாசம் என்னும் எழுத்தறிவித்தலை நம் முன்னோர்கள் கடைப்பிடித்தனர்.
எழுத்தறிவித்தலுக்குத் தேவையான பொருள்கள்
பச்சை அரிசி அல்லது நெல்
தாம்பாளம்
வெற்றிலை பாக்கு
காய்ச்சிய பால்
கற்கண்டு
அட்சராப்யாசம் வீட்டிலேயே செய்வது எப்படி?
வேதியர்களை அழைத்து இந்தச் சடங்கை வீட்டில் செய்யலாம். அவ்வாறு செய்ய இயலாத சூழலில் இருப்பவர்கள் தாங்களே இதனை மிகச் சிறப்பாக வீட்டில் செய்யலாம். அதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானவை.
முதலில் தாம்பாளத்தில் நெல் அல்லது அரிசியை பரப்பிக்கொள்ள வேண்டும். பொதுவாக இதை அட்சதை என்று சொல்லுவோம். அட்சதை என்றால் பூரணமானது அல்லது பின்னமாகாதது என்று பொருள். பூரணமான உடைவில்லாத பொருள்களிலேயே இறைசக்தியை ஆவாஹனம் செய்ய முடியும். இப்போது அந்த நெல்லில் துர்கா, லட்சுமி, சரஸ்வதியை ஆவாஹனம் செய்ய வேண்டும். ஆவாஹனம் செய்வது என்பது மனதார வேண்டிக்கொண்டு எழுந்தருள விண்ணப்பம் செய்வது என்று பொருள். நாமும் நம் மனத்தில் ‘இன்று தொடங்கும் எங்கள் குழந்தையின் கல்வி, எந்தக் குறையும் இன்றிப் பரிபூரணம் அடைய துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் இந்த நெல்லில் எழுந்தருள்வீர்களாக’ என்று வேண்டிக்கொண்டு அதில் ஒரு மலரை சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து உபசாரங்கள் செய்ய வேண்டும். நம் வீட்டுக்கு அறிந்தவர்கள் யாரேனும் வந்தாலே நாம் அவர்களை அமர வைத்து அவர்களுக்கு நீர்கொடுத்து உண்ண உணவு தந்து உபசரிப்போம் இல்லையா... அதுபோல நம் வீட்டில் எழுந்தருளியிருக்கும் இந்த தெய்வங்களை மலரும் நீரும் சமர்ப்பித்து மரியாதையோடும் பக்தியோடும் உபசரிக்க வேண்டும். பின்பு காய்ச்சிய பசும்பால், கற்கண்டு போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். இதன்பின்பு அட்சராப்யாசம் செய்ய வேண்டும்.
அட்சராப்யாசத்தை யார் செய்துவைக்கலாம்?
வீட்டில் தாத்தா இருந்தால் விசேஷம். இல்லை என்றால் குழந்தையின் தந்தையே செய்விக்கலாம். குழந்தையை மடியில் அமரவைத்து அதன் விரல் பிடித்து அரிசி அல்லது நெல்லில் எழுதவேண்டும். முதலில் முழுமுதற்கடவுளான விநாயகர் திருநாமத்தை எழுதுவது விசேஷம். ‘ஓம் ஸ்ரீ கணபதியே நம:’ என்று ஒவ்வொரு அட்சரமாக உச்சரித்துக்கொண்டே குழந்தையையும் சொல்லச் சொல்லி எழுத வேண்டும். பின்பு ‘ஓம் நமசிவாய’ என்றும், ‘ஓம் நமோ நாராயணாய நம:’ என்றும் எழுத வைக்க வேண்டும். அவரவர்களின் குலதெய்வத்தின் பெயர்களையும் எழுதலாம். பின்பு ‘அ’ என்கிற எழுத்தை எழுத வேண்டும்.
Also Read: பாண்டவர்க்கு அருளிய பராசக்தி... விஜயதசமி குறித்து அறிந்துகொள்ள வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்!
முதலில் தெய்வங்களின் திருநாமங்களை எழுதினோம். பின்பு அகரத்தை எழுதுவதன் மூலம் நம் குழந்தையின் கல்வியை மிகச் சிறப்பாகத் தொடங்கிவைக்கிறோம். குழந்தைக்கும் கல்வியும் இறைபக்தியும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்ற உணர்வு அந்த சிறுவயதிலேயே ஏற்பட்டுவிடும். நிவேதனம் செய்த பாலையும் சிறு துளி கல்கண்டையும் குழந்தைக்குத் தர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முப்பெரும் தேவியரின் பிரசாதம் குழந்தைக்குக் கிடைத்து சிறந்த ஆசீர்வாதமாக அமையும்.
குழந்தைகள் சொல்ல வேண்டிய துதிகள்
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
---
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலுமன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே
- குமரகுருபரர்
source https://www.vikatan.com/spiritual/functions/vijayadashami-how-to-perform-aksharabhyasam-at-home
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக