தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்று தி.மு.க வினர் முழுநம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். ஆனால், அடுத்த முறையும் ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாகச் சொல்லிவருகிறார். ஆனால், களநிலவரங்களோ தி.மு.க-வுக்குச் சாதகமாக இருப்பதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ரேஸிலிருந்தே ஸ்டாலினை வெளியேற்றுவதற்கான வேலையில் இறங்கிவிட்டார். இப்படி பகீர் தகவல்களைச் சொல்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமனாவர்கள்.
இன்னும் ஆறு மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வருகிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்கும், எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்கும் இடையே நேரடி மோதலே இருக்கும் நிலை இப்போதுள்ளது. மத்திய பி.ஜே.பி அரசுக்கு இணக்கமாக அ.தி.மு.க அரசின் செயல்பாடுகள் இருந்துவருவதால், பி.ஜே.பி எதிர்ப்பு பிரசாரத்தை வைத்தே அ.தி.மு.க-வையும் வீழ்த்த தி.மு.க திட்டமிட்டுவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் உளவுத்துறை முதல்வருக்கு அளித்த ரிப்போர்டிலும் தி.மு.க-வுக்கு சாதகமாகவே தேர்தல் முடிவுகள் வர வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டு நோட் போட்டிருந்தனர். இதன்பிறகே எடப்பாடி பழனிசாமி மற்றொரு வியூகத்தை ஸ்டாலினுக்கு எதிராகக் கையில் எடுத்துள்ளார்.
2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்துார் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் ஸ்டாலின். அந்தத் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி. அந்தத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ``துணை முதல்வராக இருந்தபோது நடந்த தேர்தலில் ஸ்டாலின், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வெற்றிபெற்றார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கில் போதிய முகாந்திரம் இல்லையென தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சைதை துரைசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் கிடக்கிறது. இந்த வழக்கையே இப்போது ஸ்டாலினுக்கு எதிரான அஸ்திராமாக்க நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கிடப்பில் கிடந்த இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சரவணன் என்பவர், இந்த வழக்கில் தன்னையும் ஒருவாதியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என வக்காலத்து ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். இவரும் 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கொளத்துார் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர். இந்த வக்காலத்து தாக்கல் செய்தததன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்கிறார்கள்.
காரணம், ஸ்டாலினுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சைதை துரைசாமி இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், துரைசாமி சமீபத்தில் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தபோது இந்தியாவில் சர்ச்சையான ஒரு தொழிலதிபரைச் சந்தித்து பேசியிருக்கிறார். அந்தத் தொழிலதிபர் தி.மு.க தரப்புக்கும் நெருக்கமானவர். சந்திப்பில் இந்த வழக்கு குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஸ்டாலினுக்கு எதிராக பலமான அஸ்திரத்தை துரைசாமி ஏவமாட்டார் என்று எடப்பாடி எண்ணியிருக்கிறார். இதன்பிறகே அந்தத் தேர்தலில் போட்டியிட்ட சரவணனை வைத்து வழக்குக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
வழக்கு குறித்த விவரங்களை ஒரு ஆண்டுக்கு முன்பே பி.ஜே.பி தரப்பு விசாரித்து வைத்திருந்தது. நேரம் வரும்போது பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பி.ஜே.பி எண்ணியிருந்த நேரத்தில், இந்த விவகாரத்தை எடப்பாடி கையில் எடுத்துள்ளார். இதற்கு பின்னால் பி.ஜே.பியின் பிளானும் இருக்கலாம் என்கிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்தும் வேலைகளை ஆரம்பித்துள்ளார். அதில், ஸ்டாலினுக்கு எதிராக குறைந்தபட்ச ஆதாரங்கள் இருந்தால்கூட அதை வைத்து தேர்தல் நேரத்தில் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கத் திட்டமிடுகிறார்கள். அதாவது 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் ஜெயலலிதா வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார். ஆனால், அவர் மீதான வழக்கை காரணம் காட்டி நான்கு இடங்களிலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல் ஸ்டாலினுக்கும் நெருக்கடி கொடுக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.
ஸ்டாலின் மீதான வழக்கு தேர்தல் தொடர்பான வழக்காக இருப்பதால், தேர்தல் ஆணையத்தில் இந்த வழக்கின் காரணத்தை எளிதாக முன்வைத்து ஸ்டாலினை போட்டியிலிருந்தே வெளியேற்றிவிடலாம் என்று எடப்பாடி எண்ணுகிறார். இதனாலேயே சரவணன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த வழக்குக்கு உயிர்கொடுக்கும் வேலையை செய்யத் துவங்கியுள்ளார்கள். இந்தத் தகவல் தி.மு.க தரப்புக்கும் எட்டியுள்ளது. அவர்களும் சட்டரீதியாக இதை எப்படி எதிர்கொள்வது என ஆலோசனை செய்துவருகிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/epss-new-strategy-against-stalin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக