``ஆப்பிள் பழத்தில்தான் அதிக சத்துகள் இருப்பதாகப் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால், ஆப்பிள் பணக்கார பழமாக இருக்கிறது. சாமானியர்களுக்கும் இப்படியொரு பழம் வேண்டுமல்லவா? என்ன செய்யலாம். விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு பழத்தை ஏழைகளின் ஆப்பிள் எனச் சொல்லி வைப்போம்" என்ற ரீதியில், கொய்யா `ஏழைகளின் ஆப்பிள்' என்றழைக்கப்படுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது. ஏன் என்று கேட்கிறீர்களா?
கொய்யாவில் உள்ள சத்துகள் குறித்து சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அவை அந்த அளவுக்கு ஆச்சர்யமானவையாக இருந்தன.
கொய்யாவைப் பற்றிப் பேசும் செந்தூர்குமரன், ``கொய்யா, மத்திய அமெரிக்காவிலிருந்து வந்த பயிர். கரீபியன், மெக்சிகோ பகுதியிலிருந்து தென் அமெரிக்கா வழியாக ஹவாய் தீவு வந்திருக்கிறது. உலகம் முழுவதுமுள்ள வெப்ப மண்டல பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவிலும் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் அலகாபாத்தில்தான் முதன்முதலில் அறிமுகமானது. அதன்பிறகு மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு என இந்தியா முழுவதும் பரவியது. தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல் மற்றும் சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில்தான் கொய்யா அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது விருதுநகர் மாவட்டத்திலும் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் இரண்டரை லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 22.7 லட்சம் மெட்ரிக் டன் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இந்திய கொய்யாவைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். மத்திய அமெரிக்காவிலிருந்து வந்தாலும் கூட அங்கு உள்ள சுவையைவிட இந்தியக் கொய்யாவின் சுவையை ஆங்கிலேயர்கள் விரும்புகிறார்கள். இந்தியாவில் கொய்யா உற்பத்தியில் பீகார் முதல் இடத்திலும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
கொய்யா நமது சூழலுக்கு ஏற்ற பழம். உண்மையில் கொய்யாவில் உள்ள சத்துக்கள் ஆப்பிள் பழத்தில் இல்லை. இன்றைக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் பற்றி உலகே பேசிக்கொண்டிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆப்பிள் பழத்தில் அதிகம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், அது மற்ற எல்லா பழங்களையும் விட கொய்யாவில்தான் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி எல்லாம் கொய்யாவின் அருகில்கூட நிற்க முடியாது. அத்தனை மடங்கு சத்துகளைக் கொண்ட கொய்யாவை நாம் சாதாரணமாக நினைக்கிறோம்." என்கிறார்.
கொய்யாவில் உள்ள சத்துகள் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு, இனி `ஏழைகளின் ஆப்பிள்' என்ற வார்த்தைக்குப் பதில் `ஏழைகளின் ஆரோக்கியம்' கொய்யா எனச் சொல்லலாம் என்றே தோன்றுகிறது. பணக்காரர்களின் கொய்யா, ஆப்பிள் என்று கூடச் சொல்லலாம்.
source https://www.vikatan.com/health/food/nutritional-value-of-guava-fruit
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக